ராஜபக்சேவின் கைப்பாவை கருணாநிதி: விஜயகாந்த்
Posted On Friday, 16 October 2009 at at 11:13 by Mike"ராஜபக்சேவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இலங்கை அதிபர் ராஜபக்சே கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
4 மாதங்களில் 51,000 தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஹிட்லருக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் இனப் படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைக் கமிஷன் முன் இன்னும் இப் பிரச்சினை உள்ளது. ராஜபக்சே சர்வதேச போர்க் குற்றவாளியாகக் கைது செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.
எங்கே தன்னை விசாரித்துச் சிறையில் அடைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் ராஜபக்சே நரித் தந்திரத்தோடு தமிழக முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டிலிருந்து ஒரு தூதுக் குழுவை அனுப்பச் சொல்லியுள்ளார். அவர்கள் வந்து பார்த்து திருப்தி அடைந்துவிட்டால் அதை வைத்து, தான் மனிதகுலப் படுகொலையாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் ராஜபக்சேவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த எம்.பிக்கள் குழு தந்த அறிக்கையில் உள்ள விவரங்களைக் காட்டிலும் அங்கே உள்ள தமிழர்கள் படும் துன்பங்களை ஏற்கெனவே இங்குள்ள பத்திரிகைகள் அதிகமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளன. நானும் எனது அறிக்கையில் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன். அப்படியிருக்க, இந்தக் குழுவை உண்மை அறிய அனுப்பியதாகச் சொல்வது தமிழர்களை ஏமாற்றுவதாகும்.
கண்ணி வெடி அகற்றம் என்று சிங்கள இனவெறி அரசு சொல்வது வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் என்று அவர்கள் சந்தேகிப்பவர்களைக் கொல்வதற்குத் தான். முகாமிலேயே மெல்ல, மெல்ல சித்ரவதைப்பட்டுச் சாவதைவிட, தங்கள் இடம் நோக்கிச் செல்கையில் கண்ணிவெடியில் சாவதே மேல் என்று தான் தமிழர்கள் கருதுகின்றனர். அதனால் தான் அனைவரும் எம்.பிக்கள் குழுவிடம் கண்ணீர் மல்கக் கதறிக் கேட்டுள்ளனர்.
உண்மை என்னவென்றால், 3 லட்சம் தமிழர்களிலும் விடுதலைப் புலிகள் மறைந்துள்ளனரா என்று ஒவ்வொருவராக கேள்வி கேட்டு சிங்கள இனவெறி ராணுவம் சித்ரவதை செய்து வருகிறது. இதுவரை 1.57 லட்சம் பேரை கிரிமினல்களைப் போல விசாரித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது. வெறும் 15,000 பேர் தான் சொந்த இடங்களுக்கு, அனுப்பப்பட்டதாக ஐ.நா. சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எங்குபோய் சேர்ந்தார்கள் என்பது எமனுக்குத் தான் வெளிச்சம்.
ராஜபக்சே தமிழர்களுக்காகப் பரிந்து பேசுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதைப் போலத்தான்."
இவ்வாறு விஜய்காந்த் கூறியுள்ளார்.