தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

tamilnadu-tamileelam-nerudalஇந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன்.

உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது.

இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம். எங்கள் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் நாங்கள் உங்கள் மீதான உச்ச நம்பிக்கையுடன்தான் முள்ளிவாய்க்கால் வரை அத்தனை அவலங்களையும் தாங்கியவாறு ஓடிக்கொண்டிருந்தோம். உங்கள் திசையை நோக்கியே எங்கள் குரல்களை ஓங்கி எழுப்பினோம்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம். எங்களது தியாக வேள்விக்கு அடித்தளம் இட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழர்கள் ஆளும் உரிமை உள்ளவர்கள் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களது போர்ப் பறை இந்திய – சீன யுத்தத்துடன் முடிவுக்கு வந்தாலும் எங்கள் செவிகளில் இப்போதும் அது ஒலித்துக் கொண்டே உள்ளது.

ஆம்! ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று எங்கள் உணர்ச்சிக் கவிஞரும் அண்ணாவை நினைவு கூர்ந்தார். எங்கள் போதாத காலம் அண்ணா அவர்களது ஆயுள் அத்தனை குறைவாகப் போய்விட்டது. உங்களுக்குத் தெரியுமா… எங்கள் தலைவரின் ஆத்மார்த்த குரு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பது? ஆம்! வெள்ளையர்களுக்கு காந்தியின் அகிம்சை புரிந்தது. இந்தியாவுக்கு அது புரியவில்லையே! இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கைத்தீவை ஆக்கிரமிக்க வந்த இந்தியப் படை, இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க கனவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவின் எதிரிகளுடன் உறவாடிய சிறிலங்காவைத் தாஜா செய்ய எங்களைப் பலிக்கடா ஆக்கியபோது எங்களது திலீபனும் காந்தியைத்தான் நம்பினார்.

அவரது காந்தியப் பாதை இந்தியாவுக்குப் புரியாமலே போய்விட்டது. காந்தியின் அகிம்சையை நம்பிய திலீபன் அந்த காந்திய தேசத்தால் படுகொலை செய்யப்பட்டான். காந்தி தோற்றுப்போய் காணாமல் போனதனால், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது பாதை மட்டுமே எங்களுக்கு மீதியாக இருந்தது. இப்போதெல்லாம் எங்களுக்குத் தத்துவம் போதிப்பவர்கள், அந்தக் காந்தியவாதி திலீபன் தோற்றபோது எங்கே போனார்கள்? விடுதலைப் புலிகள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. காலம் அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கையளித்தது. சிங்கள இனவாத சிந்தனைகளால் விரக்தியடைந்திருந்த எங்களது இளைஞர்கள் கைகளில் இந்தியா ஆயுதங்களைக் கைகளில்’ வழங்கியது.

இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்ற சிறிலங்காவை நிர்ப்பந்தம் செய்வதற்காக சிங்கள – தமிழ் முரண்பாட்டை நன்றாகவே பயன்படுத்தியது உங்கள் இந்திய தேசம். எங்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கி சிங்களத்திற்கு எதிராக எங்களைப் போராட வைத்தது. இளைய வயதான எங்களுக்கு அறிவை விடவும் உணர்வே மேலோங்கி நின்றதனால் எங்களுக்கு இந்திய தேசத்தின் சதி எதுவுமே புரியவில்லை. அப்போதும் எமது தாய்த் தமிழகமே எங்களது அறிவுக் கண்களை மறைத்து நின்றது.

தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை. உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.

நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம். நீங்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எங்கள் மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் தமிழர்களாக உங்களை உணரும்வரை எங்களது அழிவுகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் வாழவேண்டும் என்ற ஆசை கூட உங்களது தேசபக்தியினால் சிதைக்கப்பட்டு விட்டது. எங்களை அழ்ப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?

உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. நீங்கள் உங்கள் சுய சிந்தனையைத் தொலைத்து வெகு காலமாகிவிட்டது என்பதை நாங்களும் அறிவோம். இல்லையேல், அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?

பாவம், ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவும் இந்தியத் தமிழகமும் ஒரே நீதியைத்தான் வழங்குகின்றது. வாழ அனுமதி மறுக்கபட்டுள்ள நாங்கள் இனியும் உங்கள் திசை நோக்கிக் கதறப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் இந்தியர்களாக இருந்தே எங்களைத் தமிழர்களாக உணர்கின்றீர்கள். உங்கள் தேச பக்தியும் எங்கள் எதிர்காலமும் எப்போதும் ஒருமித்துப் பயணிக்கப் போவதில்லை. ஆதலால், நாங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும் உங்களுக்காக நாங்களா? அல்லது, எங்களுக்காக நாங்களா என்பதை.

ஆம்! உங்களுக்காக நாங்கள் இந்திய தேசத்தை நேசித்த காரணத்தால் எங்களுக்கெதிராக சீனாவும், பாக்கிஸ்தானும் சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்ந்தது. இந்திய தேசத்தின் வல்லாதிக்க கனவுக்கு நாங்கள் பலி கொள்ளப்பட்டோம். இந்திய தேசம் எங்களைப் பலிக்கடா ஆக்கிய கணத்தில் இந்தியா – பாக்கிஸ்தான் – சீனா என அத்தனை பகை நாடுகளும் ஒரே திசையில் அணிவகுக்கும் பெரும் பேற்றினைப் பெற்றுக் கொண்டன. பேரறிஞர் அண்ணா அவர்களது தமிழ்த் தேசியக் கனவு கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் புரியவில்லையானாலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

திரையுலகிலும் நாயகனாகவே தன்னை நிலை நிறுத்திய அந்த மாமனிதர் நிகழ் வாழ்விலும் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்றே பெரு விருப்புற்றிருந்தார். எங்கள் துர்ப்பாக்கியம் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்ய அஞ்சாத அந்த வீரத் திருமகனும் எம்மை விட்டு வெகு சீக்கிரமாக மறைந்துவிட்டார். பாவம், உங்களை எல்லாம் ஆளும் பொறுப்பை நீங்கள் கோழைத் தமிழனான கருணாநிதியிடமல்லவா கொடுத்துவிட்டிர்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே நேசிக்கத் தெரிந்த கலைஞர் கருணாநிதியிடம் எங்கள் அவலங்கள் எடுபடுமா?

சங்கத் தமிழையும் விற்றே பழக்கப்பட்டவர் ஈழத் தமிழர்களுக்கும் விலை நிர்ணயம் செய்யமாட்டார் என்று எப்படி நம்பினீர்கள்? நாங்கள் விலைகூறி விற்கப்பட்டோம். இந்திய அரசாலும், தமிழக அரசாலும் நாங்கள் விலை கூறி விற்கப்பட்டோம் என்பதை நீங்கள் அறிவீகளா? நாங்கள் அழிந்து கொண்டிருந்த போதும் கலைஞர் அவர்கள் இரக்கம் காட்டவில்லையே. நாங்கள் இறந்து கொண்டிருந்த வேளையிலும் கலைஞர் அவர்கள் கடிதம்தானே எழுதிக்கொண்டிருந்தார்.

அதை மீறி, அரைநாள் உண்ணாவிரதம் தானே இருந்து சாதனை செய்து எங்கள் வேதனையிலும் அரசியல் ஆதாயம் தேடினார். ஈழத் தமிழர்களின் ஒற்றுமையின்மை பற்றி ஒப்பாரி வைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிடர் முன்னேற்றக் கழகத்தை எத்தனை ஒற்றுமையுடன் கட்டிக் காத்தார்? அமரர் எம்.ஜி.ஆர். அவர்களை எப்படிப் பிரிந்து போக அனுமதித்தார்? தி.மு.க.வின் போர் வாளாக அறியப்பட்ட வை.கோ. அவர்களை எப்படி வெளியேற்றினார்?

பலதாரப் பிதாமகர் கருணாநிதி அவர்களுக்கும் அவரது அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே நிகழும் வார்த்தைப் போர் உலகப்பிரசித்தம் கொண்டது என்பதைக் கலைஞர் அறிவாரா? போதும் தமிழகமே! உனக்காக நாங்கள் இந்திய தேசத்தை நம்பியது போதும்! கிழக்கிலும், மேற்கிலும் எதிரிகள் பலம் பெற்ற போதும் தெற்கு வாசலில் உங்களுக்காக நாங்கள் தோத்தது போதும். உங்கள் எதிரி சீனா பாக்கிஸ்தானிலும் வங்காள தேசத்திலும், பூட்டனிலும், நேபாளத்திலும் நிலை கொண்ட போதும் இலங்கைத் தீவில் இன்றுவih எதிர்த் துருவமாக நின்றது நாங்கள் மட்டுமே.

சிங்கள தேசம் சீனாவுக்கு செங்கம்பளம் விரித்த போதும், எங்கள் இந்திய விசுவாசம் அதை எதிர்த்தே நின்றது. இந்தியாவுக்குப் பங்கம் வரக்கூடாது என்பதால்தான் எங்கள் தலைவன் சீனாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.

உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்றும் ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்

Posted in Labels: |

5 comments:

  1. Anonymous Says:

    I really pity you all . But I strongly condemn your criticism about ahimsa and Indian govt. What did you guys ever start your movement on ahimsa, you should uestion your so called freedom fighting movement leaders and their selfish mtives. When the biggest movement which was defeated by your govt. forces after 35 years only t was possible for them. When your leaders and your parallel army was strong and powerful what did your leaders do, they did not want to accept with some terms favourable for the otherside also. How many oinnocents were killed by your so called freedom movements in Buddhist temple, etc, so dont even talk about ahimsa. You are reaping the seeds of violence sewn by you 3 decades ago. First of all ask your own people living in foriegn nations they have enough wealth to enjoy BMWs where as so called Indian Tamils have nothing except the pressures over their head price rise, growing difference between poor and rich etc.

  2. vanathy Says:

    மைக் ,
    பல மாதங்களின் பின்பு திரும்பவும் வந்தது மகிழ்ச்சி தருகிறது. இடையில் எத்தனையோ நடந்துவிட்டன ,முன்பு ஈழத்தமிழருக்காக உணர்வோடு குரல் கொடுத்த பலரின் பதிவுகள் இப்போது வருவதில்லை ,அஞ்ஞாத வாசம் செய்கிறார்கள் வருத்தமாக உள்ளது,
    ஆயுதப்போராட்டம்தான் தோல்வி அடைந்து விட்டதே ஒழிய தமிழரின் உரிமைகள் அடையப்படும் வரை அது வேறு வடிவங்களில் தொடரத்தான் வேண்டும் ,ஈழத்தில் உள்ள மக்கள் வெளிப்படையாக குரல் கொடுக்கு முடியாத சூழலில் வெளியில் உள்ளவர்கள்தான் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

    --வானதி

  3. எழவு பாட்டு Says:

    ஏண்டா நிலவுபாட்டு ப்ளாகில் விடும் கதை போத்தாது என்று இது வேறையா

  4. Mike Says:

    நன்றி வானதி, உண்மைதான் பல விரும்பதகாத நிகழ்வுகள் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்து விட்டன. தமிழனை தமிழனே இன்று அழிக்கும் ஒரு மோசமான சூழ்நிலையில் இன்று தள்ளப்பட்டுள்ளோம்.

    கண்டிப்பாக நமக்கு ஒரு விடிவு காலம் வரத்தான் போகிறது.

  5. Anonymous Says:

    தாய்த்தமிழ்நாடு தாய்த்தமிழ்நாடு என்கிறீர்களே, அந்த தாய்தமிழ்நாட்டு எஸ்டேட் தொழிலாளிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கே போனது உங்கள் இனப்பற்று அப்போது? மலேசியாவில் இன்று மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவனும் தமிழ்நாட்டுத் தமிழன் தான். அங்கே உயர் பதவியில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அவர்களுக்காக என்ன செய்தார்கள்? ராஜீவ் காந்தியை கொன்றதை நியாயப்படுத்தினாலும் அன்று அவரோடு சேர்ந்து செத்தவர்கள் 16 பேர் தமிழர்கள் தானே? அதை ஏன் நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லை? வடக்கே போர் நடைபெறும் போது கிழக்கே எத்தனை பேர் எழுச்சி கொண்டு எழுந்தார்கள்? கருணாவும் உங்களில் ஒருவன் தானே? உங்களுக்காக தீக்குளித்தவர்கள் எல்லாம் செவ்வாய் கிரகவாசிகளா? அவர்களும் தமிழ்நாட்டு தமிழர்கள் தானே? இந்த போராட்டங்கள் எல்லாம் வீணாய் போகவில்லை. ராஜீவ் கொலைக்குப் பின் ஒரு புது தலைமுறையே உருவாகிவிட்டது. அந்த தலைமுறையினர் இன்று சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். பிறரை குறைகூறுவதை விடுத்து உங்களுக்குள் முதலில் ஒரு ஒன்றுப்பட்ட கருத்தை கொண்டுவாருங்கள். இவ்வளவு பெரிய இந்தியாவே விடுதலைக்காக 200 வருடம் போராடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails