பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது:குமுதம் இதழுக்கு இலங்கை தமிழ் எம்.பி் பத்மினி சிதம்பரநாதன் செவ்வி.

பறவைகள் சரணாலயம்' என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்' என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், "ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது" என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

"இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக' இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.



ஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.''

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

"அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்."

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

``அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?''

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

``இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.''

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

"ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்."

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

"கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே!"

தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

"அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது."

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

"கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது." என்றார் பத்மினி சிதம்பரநாதன்.

நன்றி http://www.seithy.com/breifNews.php?newsID=10987&category=TamilNews

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails