வன்னி மக்கள் மீது சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன

மீண்டும் ஒரு பேரவலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

வன்னி மக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் கடல், தரை, வான் என முப்படைகளும் தாக்குதலை அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களாக வான் மற்றும் தரை வழியான தாக்குதல்களை சிறிலங்கா மிக மோசமாக மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கடற்படையினுரும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றுள்ளதாக இதனால் கரையோரப் பகுதி மக்களும் பெரும் அழிவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதல்களில் இதுவரை ஐந்து பொது மக்கள் பலியானதுடன், 60ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா வான், கடல் மற்றும் தரைப்படையினர் கூட்டாக இணைந்து பொதுமக்களை இலக்கு வைத்து செறிவான தாக்குதலை நடத்தினர். இதில் 40 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.கல்லாறு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு தேராவில் பகுதியில் பொது மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ; சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பத்து பேர் காயமடைந்தனர். ரமேஸ்குமார் சஞ்சீவன் (வயது இரண்டரை), செல்வராசா தர்சிகா (வயது 15), ஆ.பிரமிலன் (வயது 17), மரியதாஸ் அந்தோனி (வயது 85), பொன்னம்மா (வயது 75), ம.சண்முகலிங்கம் ஆகியோர் காயமடைந்தவர்களில் அடங்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள், தற்போது தர்மபுரத்தில் இயங்கிவரும், கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மற்றைய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரம் தெற்குப் பகுதியில் இன்று காலை முதல் சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த மற்றும் நிலையான பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். சுண்டிக்குளம் பகுதியில் இன்று முற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலிலும் வான்குண்டுத் தாக்குதலிலும் பொதுமக்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று அதிகாலை புதுக்குடியிருப்பை நோக்கி மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட நால்வர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

நன்றி : http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1378&cntnt01origid=52&cntnt01returnid=51

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails