கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது.

கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை.

இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள் தரப்பில் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருக்க வாய்ப்பில்லை.

புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் தருவதாகச் சொல்லி வன்னி மீது படையெடுத்த கடந்த 11 மாதங்களில் கிழக்கை மீட்டது போல எளிதாக வடக்கையும் மீட்டு விடலாம் என்றே படை திரட்டி போரில் குதித்தது. 2008 டிசம்பர் நத்தார் பண்டிகைக்கு முன்பு கிளிநொச்சியை மீட்டு இலங்கை மக்களுக்கும் இராணுவ துருப்புகளுக்கும் நல்ல செய்தி சொல்லலாம் என நினைத்தார் ராஜபக்ச ஆனால் அவரும் அவரது சகாக்களும் கனவு கண்டதைப் போலல்ல புலிகளின் இதயப்பகுதியும் புலிகள் கொடுத்த பரிசும்.

வன்னி அடங்க மறுத்தது. இராணுவம் குறித்த காலக்கெடு கசந்து படையினர் பேரிழப்புகளை சந்தித்தார்கள். வன்னி மீதான படையெடுப்புக்கு இலங்கை பலி கொடுத்தது பல்லாயிரம் இராணுவச் சிப்பாய்களின் உயிர்களை. புலிகளின் இழப்புகளோடு ஒப்பிடும் போது இராணுவத்துக்கு நேர்ந்தது பேரிழப்பு. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் பின் வாங்கினார்கள். புலிகள் விட்டுப் போன பகுதிகளை மீட்டு விட்டு அதை வெற்றிக் களியாட்டமாக மாற்றுகிறது இராணுவம்.

மேலோட்டமாக பார்க்கும் இராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது தோன்றினாலும் இரு தரப்பினருக்குமே வெற்றியற்ற வெற்றி அல்லது தோல்வியற்ற தோல்வி என்றே தோன்றுகிறது.

சரி, போராளிகள் தரப்பிற்கு என்ன இழப்பு எனப் பாத்தால். ஆனையிறவை வென்று இராணுவ ரீதியில் புலிகள் பலம் பெற்று அதனூடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலம் என்பது ஈழத்தில் அமைதி நிலவிய மிக நீண்ட காலமாக அது இருந்தது. அந்தக் காலத்தில் புலிகளும் சரி இராணுவமும் சரி தங்களின் இராணுவ பலத்தை சரி செய்யவதற்கான ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டனர். புலிகள் தங்களை மரபு வழிப்பட்ட போர் முறைக்கு தயார்படுத்தினர். விமான படையை வடிவமைத்த புலிகள் தென்கிழக்கின் கவனத்தை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தார்கள்.

அதே சமயம் ரணிலுக்குப் பிறகு வெளிப்படையான இனவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தா ஆட்சிக்கு வந்த பிறகு புலிகளுக்கு ஏற்படுத்திய முதல் நெருக்கடி சர்வதேச அளவில் புலிகளை ஏராளமான நாடுகளில் தடை செய்ய வைத்ததுதான். உண்மையில் நோர்வே முன்னெடுத்த பேச்சுக்களில் தந்திரமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டது இலங்கை அரசுதான். பேச்சுவார்த்தை மேசைகளில் ஒப்புக் கொண்ட விஷயங்களைக் கூட நடை முறைப்படுத்தாமல் இராணுவ ரீதியாக பலம் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. (ரணில் அதற்குள் புலிகளை பிளவு படுத்தி கருணாவை புதிய மீட்பராக உருவாக்கினார்கள்)

பேச்சுவார்த்தைக் காலத்திலேயே வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுக்கும் இராணுவத்துக்குமான மோதல் வெடித்தாலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தை கொன்றது இராணுவ ஆய்வாளரும் பத்திரிகையாளருமான தராக்கியை கொன்றது என இராணுவம் வெளிப்படையான போருக்கு தயாரானது.

இந்நிலையில் ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கிழக்கை மீட்போம் என்று அறிவித்தது. புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்து பின்னர் இலங்கை அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கருணா குழுவின் துணையோடு கிழக்கு மீட்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் ஒரு அரசு ஆதரவு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கில் வசந்தம் வந்ததாக இராணுவமும் ராஜபக்சவும் சொல்லிக் கொண்டாலும். அன்றாடம் ஆள்கடத்தல், கொலைகள், இஸ்லாமிய, தமிழர் மோதல் என கிழக்கு வன்முறைக் காடாகவே இருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திறந்த வெளிச் சிறையான யாழ்ப்பாணத்தைப் போல இப்போது கிழக்கும் மாறியிருக்கிறது, நாளை வடக்கும் மாறலாம். கிழக்கின் ஆட்சி கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கிழக்கில் கொடுத்த வசந்தத்தை வடக்கில் கொடுப்பதாக கடந்த செப்டம்பரில் வன்னிப் பிரதேசம் மீது படையெடுத்தது இலங்கை இராணுவம்.

முதலில் 74 மணி நேரத்திற்குள் வன்னியை மீட்பதாகச் சொன்ன இராணுவம் பல மாதம் போராடி கிளிநொச்சியை மீட்டிருக்கிறது. நடந்த போர் முறையைப் பார்க்கும் போது புலிகள் அதிக இழப்புகளுக்கு முகம் கொடுக்காமல் தந்திரமாக பின் வாங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவின் எதிர்காலம் கூட இராணுவத்தால் கேள்விக்குள்ளாகும் போது மரபார்ந்த இராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஆனால் மீட்ட கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. வன்னியில் இழந்த ஏழாயிரத்திற்கும் அதிமாக படையினரோடு ஓடிப்போன பல பத்தாயிரம் வீரர்களை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து கிளிநொச்சியை எத்தனை காலத்திற்கு காப்பாற்றப் போகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது. தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இது எதிர்பார்த்ததுதான்.

ஒரு மாதத்திற்கு முன்பே புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா.நடேசன் அறிவிக்கும் போது கிளிநொச்சியை அரசு கைப்பற்றினாலும் போராட்டம் தொடரும் என்றார். ஆனால் இலங்கை அரசின் அதிகபட்ச ஆசையால் அவர்கள் பிரபாகரனை சரணடையக் கோருகிறார்கள். போரின் வெற்றியை தேர்தலில் அறுவடை செய்வது. புலிகள் மீதான பிம்பங்களை உடைப்பது என்பதன் பிரச்சாரமாக மகிந்த இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சில ஆயிரம் சதுரகிலோ மீட்டரை பிடிக்க இலங்கை இராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்;தான், சீனா என ஏழு நாட்டு இராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை இராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி விட்டுக் கொடுக்கப்பட்டது. இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான் ஏனென்றால் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பலவிதமான கவிதைகள் உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எரிந்து விட்டு இலங்கைக்கு இராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.

ஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட பல்லிளித்தார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழ்ர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம் போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் முடங்கிப் போனார்கள்.

ஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித் திரிவதைத் தவிர இன்று இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை. இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக் காரர்தான் டாக்டர் ராமதாசும்.

மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி இராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும். அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை இராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.

2002 இல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்ட போது இந்தியா தலையிட்டுதான் இலங்கை இராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்று அதே சமயம் தனது இராணுவத் தளபதிகளை இலங்கை களமுனைக்கு அனுப்பிய கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது இந்தியா.

மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ?

ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்கிற கருணாநிதி. இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.

ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதேவேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வேட்கை கொள்கிற வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறிகொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாக பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை இழப்புகளை துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.

கடைசியாய் ஒரு சிறு குறிப்பு

கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விஷயத்தில் துரோக நாடகங்களை தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு போகச் சொல்லிக் கேட்டது அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.

நன்றி : தமிழ்நாதம்.காம், யாழ்.காம்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails