எத்தகைய சவாலையும் முறியடிப்போம் - விடுதலைப்புலிகள்

இலங்கை தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவுடன் எத்தகைய சவாலையும் முறியடிப்போம் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகராக விளங்கிய கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றி விட்டது. தற்போது விடுதலைப்புலிகளிடம் இருக்கும் ஒரே நகரான காடுகள் நிறைந்த முல்லைத்தீவை கைப்பற்ற தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அடர்ந்த காட்டுப் பகுதியில் அப்பாவி தமிழர்கள் அவதிப்படுகின்றனர்.


இந்த சூழ்நிலையில் தமிழ்நெட் என்ற இணைய தளத்துக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் அளித்துள்ள பேட்டியில்,


கிளிநொச்சியை பிடித்து இருப்பதால் ராணுவம் வெற்றி பெற்று விட்டதாக அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். ஆனால், ஏற்கனவே பலமுறை கிளிநொச்சியை ராணுவம் பிடித்து இருக்கிறது. அதை நாங்கள் மீண்டும் கைப்பற்றி இருக்கிறோம். இலங்கையின் கிழக்கு பகுதியைப்போல வடக்கு பகுதியிலும் மாகாண தேர்தல் நடத்த முயற்சிப்பது கேலிக்கூத்தானது.


தமிழ் மக்கள் தங்களுடைய விருப்பத்தை 1977 ம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே தெளிவாக கூறி விட்டனர். அதன்படி, எங்கள் மக்களின் கட்டளையை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் தாயகத்தின் உண்மையான பிரதிநிதிகள் நாங்களே. எங்களுடைய மக்களும் ஒட்டு மொத்த உலக தமிழர்களும் எங்களை ஆதரிக்கின்றனர்.


எங்கள் மக்களின் ஆதரவோடு பெரிய அளவிலான அரசியல் மற்றும் ராணுவ சவால்களை ஏற்கனவே பலமுறை முறியடித்து இருக்கிறோம். தற்போது கூட எங்களுடைய மக்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். உலக தமிழர்களும் தார்மீக ஆதரவு அளிக்கின்றனர். எனவே, 30 ஆண்டுகளாக போராட வரும் நாங்கள் தற்போதைய சவால்களையும், எதிர்கால சவால்களையும் நிச்சயமாக முறியடிப்போம்.


அப்பாவி தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தி வரும் இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சில் இருந்து தப்பிப்பது குறித்து எங்களுடைய மக்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான தங்களுடைய நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியுடன் உள்ளனர்.


அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி நாங்கள் போரிடுவதாக இரண்டு மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்களுடைய எல்லைக்குள் வந்து எங்கள் மக்களிடம் சுதந்திரமாக கருத்துகளை கேட்கலாம். அப்போது உண்மை நிலை புரியும். இலங்கை அரசு அளிக்கும் ஒரு தரப்பு தகவலின் அடிப்படையில் கூறக்கூடாது.


இலங்கை அரசுதான் 30 ஆண்டுகளாக நாகரீகமற்ற முறையில் போரிட்டு வருகிறது. போரில் இறந்து போன ஒரு பெண் விடுதலைப்புலியின் உடலை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றி தரக்குறைவாக நடந்து கொண்ட காட்டுமிராண்டித்தனமான காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகின. அதை ஆசிய மனித உரிமைகள் கமிஷன் கண்டித்து இருக்கிறது.


சண்டையில் ஏற்படும் இழப்பு குறித்து சரியான தகவல்களை நாங்கள் தெரிவிக்கவில்லை என்று கூறுவது தவறு. எங்கள் அமைப்பை சேர்ந்தவர் உயிரிழந்தாலோ, காயமடைந்தாலோ அவர்களுடைய குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் அளித்து விடுகிறோம். எங்களுடைய பத்திரிகையிலும் வீர மரணம் அடைந்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறோம்.


வன்னி பகுதியில் நடைபெறும் போர் முனையில் ஈடுபடுத்துவதற்காக சிங்கள இனத்தை சேர்ந்த சிறுவர்களை ராணுவத்தில் இலங்கை அரசு சேர்த்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails