சிங்களர் புதைத்த உடன்பாடு- பழ. நெடுமாறன்

"ஈழத் தமிழர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி வழிகண்டார். அதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேற்றப்படுவதுதான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அளிக்கும்" என தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

அவர்கள் பேச்சில் ஏதாவது உண்மை இருக்கிறதா? 1987ஆம் ஆண்டு சூலை மாதம் 29ம் தேதி ராஜீவ் - செயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி ஓராண்டுக்குப்பிறகுகூட இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட முக்கிய அம்சங்களை செயவர்த்தனா நிறைவேற்ற மறுத்ததை மறைப்பது ஏன்?

1. இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் என உடன்பாடு கூறியது. அதை நாடாளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற செயவர்த்தனா முன்வரவில்லை. மாறாக இலங்கைக் குடியரசுத் தலைவர் என்ற முறையில் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றாக இணைத்ததாக அறிவித்தார். ஆனால் 2006ம் ஆண்டில் ஜே.வி.பி. என்னும் சிங்கள இனவெறிக் கட்சி வடகிழக்கு இணைப்பினை இரத்துசெய்யவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தை நாடியது. நாடாளுமன்றத்தில் வடக்கு-கிழக்கு மாநிலங்களை இணைப்ப தற்கு சட்டம் நிறைவேற்றாமல் குடியரசுத் தலைவர் தனது ஆணையின்படி இணைத்தது சட்டரீதியாக செல்லுபடி யாகாது என இலங்கை உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு அக்டோபரில் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு முக்கிய எதிக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இருமாநிலங்களையும் இணைப்பதற்கு சட்டம் கொண்டுவருமாறு கூறியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இத்தகைய கோரிக்கையை முன்வைத்தது. இந்த இரு கட்சிகளிலும் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கட்சி இத்தகைய சட்டம் கொண்டுவருமானால் அது மிகப்பெரும்பான்மையுடன் நிறை வேற்றப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அத்தகைய சட்டத்தை இதுவரை கொண்டுவர சிங்கள அரசு முன்வரவில்லை.

இந்திய இலங்கை உடன்பாடு என்பது இரண்டு அரசுகளுக்கு இடையே செய்யப்பட்ட உடன்பாடு ஆகும். சர்வ தேச சட்டத்தின் கீழ் அந்த உடன் பாட்டுக்கு சட்ட வலு உள்ளது. இந்த உடன்பாட்டின் கீழ் தனக்கு உள்ள பொறுப்புகளை இலங்கை அரசு ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால் வடக்கு-கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்குரிய சட்டத்தைக் கொண்டு வராதது ஏன்? - என்று கேட்க இந்திய அரசு இதுவரை முன்வரவில்லை என்பதுதான் திடுக்கிடும் உண்மையாகும்.

2. இந்த உடன்பாட்டின்படி சிறையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்றுவரை கடந்த 21 ஆண்டுகாலமாக மேலும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்கள். உடன்பாட்டை சிங்கள அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.

3. இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கிற சுமார் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப இந்த உடன்பாடு உத்தரவாதம் அளித்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக திரிகோணமலை, மட்டகளப்பு, வவுனியா முல்லைத் தீவு போன்ற பல தமிழர் மாவட்டங்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் அவசர அவசரமாகக் குடியேற்றப்பட்டுள்ளனர்.

4. உடன்பாட்டில் கண்ட முக்கிய அம்சங்களை நிறைவேற்ற ஜெயவர்த் தனா மறுப்பதைக் கண்டித்துதான் 25-09-1987ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலீபன் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டார். இந்திய அரசையோ உடன்பாட்டையோ எதிர்த்து அவர் போராடவில்லை. உடன்பாட்டை முழு மையாக செயல்படுத்தவேண்டும் என்று அவர் போராடினார். உடன்பாட்டை நிறைவேற்றத் தவறிய சிங்கள அரசைக் கண்டிப்பதற்குப் பதில் திலீபனின் உண்ணா நோன்பை அலட்சியப்படுத்தி அவர் உயிர்த் தியாகம் செய்வதற்குக் காரணமாக இந்திய அரசு இருந்தது.

5. இடைக்கால அரசு அமைப்ப தில் முன்னுக்குப்பின் முரணாக இந்திய அரசு நடந்துகொண்டது. விடுதலைப்புலிகள் இடைக்கால அரசு அமைக்க முன் வந்தனர். ஆனால் அவர்களின் பிரதிநிதி களைத் தேர்வு செய்யும் உரிமையை செயவர்த்தனாவுக்கு இந்திய அரசு அளித்தது. அவர் விருப்பப்படி விடுத லைப்புலிகள் இடைக்கால அரசுக்குப் பிரநிதிநிதிகளை நியமிக்கவேண்டும் என இந்தியத் தூதுவர் தீட்சித் வற்புறுத்தினார்.

6. உடன்பாட்டின்படி அனை வருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப் பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இந்திய அமைதிப்படைத் தளபதியின் அனுமதியு டன் தமிழ்நாட்டுக்குத் திரும்பி தங்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்களை எடுத்துவரச் சென்ற புலிகளின் தளபதி களான புலேந்திரன், குமரப்பா உட்பட 17 விடுதலைப்புலிகளை சிங்களக் கடற்படையினர் கைதுசெய்தனர். இந்திய அமைதிப்படையின் தளபதி லெப்-ஜெனரல் ஹர்கரத்சிங் இதை தவறு என்று சுட்டிக்காட்டியபோதும் அவர் களை விடுதலை செய்ய சிங்கள அரசு மறுத்துவிட்டது. இந்தியாவின் வேண்டு கோளுக்கு இணங்க ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலிகளைப் பாது காக்கும் பொறுப்பை ஏற்ற இந்திய அரசு இதில் செயலற்றிருந்தது. இதன் விளை வாக 12 விடுதலைப்புலிகள் உயிர்த் தியாகம் செய்ய நேர்ந்தது. இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகளை செயவர்த்தனா பழிவாங்கியபோது இந்திய அரசு வேடிக்கை பார்த்தது.

7. இந்த உடன்பாட்டின்படி இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. தங்களது உழைப்பினால் இலங்கையை வளப் படுத்திய இந்திய வம்சாவழித் தமிழர்கள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைத் திரும்பப்பெற இந்திய அரசு ஒப்புக் கொண்டது. ஐந்து தலைமுறைக்கு மேலாக அந்நாட்டில் வாழ்ந்த அந்தத் தமிழர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தர பிரதமர் ராஜீவினால் முடியவில்லை.

8. உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள விடுதலைப்புலிகள் மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய இராணுவத்தை அழைக்கும் உரிமையை செயவர்த்தனாவுக்கு இந்த உடன்பாடு வழங்கியது. அதன்படி அவர் இந்திய இராணுவத்தை வரவழைத்து புலிகளுக்கு எதிராக ஏவிவிட்டார். ஆனால் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றாமலிருந்த செயவர்த்தனா மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்ப தற்கு இந்த உடன்பாட்டில் எந்த வழியும் சொல்லப்படவில்லை.

மேற்கண்டவை மட்டும் அல்ல இலங்கையில் அன்னிய நாடுகள் தலை யிடுவதை தவிர்க்கவே இந்த உடன்பாடு செய்யப்பட்டதாக பிரதமர் ராஜீவ் கூறினார். இந்த உடன்பாட்டிற்குப் பிறகு இலங்கையில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இராணுவ உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்து அந்நாட்டில் காலூன்றி நிற்கின்றன. அதைத் தடுக்க இந்த உடன்பாட்டினால் முடியவில்லை.

பிரதமராக ராஜீவ் இருந்தபோதே இந்த உடன்பாட்டை சிங்கள அரசு அப்பட்டமாக மீறியது. அவரால் அதை தடுக்கமுடியவில்லை. செயவர்த்தனா வுக்குப் பிறகு அதிபர் பொறுப்பை ஏற்ற பிரேமதாசா இந்திய அமைதிப்படையை உடனே வெளியேறுமாறு ஆணை யிட்டார். அதை ஏற்றுக்கொள்ள ராஜீவ் மறுத்தபோது. அய்.நா. பேரவையில் புகார் செய்யப்போவதாக மிரட்டினார். உடன் பாட்டின்படி இருநாடுகளும் ஒப்புக் கொண்டால் மட்டுமே இராணுவம் திரும்பப்பெறப்படவேண்டும். ஆனால் ஒருசார்பாக அதை வெளியேறும்படி பிரேமதாசா ஆணையிட்டபோது என்னசெய்வதென்று தெரியாமல் இந்திய அரசு திகைத்தது. இலங்கையில் உள்ள தமிழர்களும் விரும்பாமல் சிங்களவர் களும் வெறுப்படைய யாருக்காக இந்தியப் படை அங்கு அனுப்பப்பட்டது? அவமானகரமாக இந்தியப் படை வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் உருவாயிற்று.

ஆக எல்லா வகையிலும் இந்த உடன்பாடு ஈழத்தமிழர்களுக்கோ இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கோ அல்லது இந்தியாவுக்கோ கூட எவ்விதப் பயனும் தரவில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த உடன்பாடு ஒன்றுதான் ஈழத்மிழர் பிரச்சினையைத் தீர்க்கும் என கூறுபவர் கள் இந்த உடன்பாட்டை பற்றி எதுவும் அறியாதவர்கள் மட்டுமல்ல. பல கட்டங் களில் இந்த உடன்பாட்டை சிங்கள அரசு மீறியிருப்பதைக் கண்டித்துக் குரல் கொடுக்க முன்வராதவர்கள். இத்தகைய வர்கள்தான் ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய மாமருந்து என இந்த உடன்பாட்டைப் போற்றுகிறார்கள். ஆனால் இந்த உடன்பாட்டை ஆழக்குழி தோண்டி சிங்களர்கள் புதைத்து விட்டார்கள் என்ற உண்மையை இவர் கள் உணராமல் இருக்கிறார்கள்.

தென்செய்தி

நன்றி:
http://www.yarl.com/forum3/index.php?showtopic=48691

Posted in |

1 comments:

  1. தாமிரபரணி Says:

    காங்கிரசு மாதிரி ஒரு முட்டாள் கூட்டம் தமிழகத்தில் வேறு எங்குமு பார்க்க முடியாது, தமிழ் இனத்துக்கே அவநம்பிக்கையாக இருப்பது இந்த தில்லிக்கு வால் பிடிக்கும் காங்கிரசுகாரர்கள்தான்
    இவனுங்க எல்லாரையும் முதலில் நாடு கடத்த வேண்டம், தமிழ்நாட்டிலே இருக்க லாய்கற்றவர்கள், ராஜிவ் காந்திங்கிறவன் ஒரு கொலையாளி ஆம் அப்பாவி தமிழர்களை இலங்கை படையினர்யிடம் சேர்ந்து கொன்று குவித்த கொலைகாரன், தில்லிகாரன்களுக்கு தமிழன் மிது என்றுமே அன்பு இருந்ததாக வரலாறு கிடையாது, இதே இது ஒரு ஹிந்திகாரங்களுக்கு ஏற்பட்டிருந்தா பொங்கி எழுந்திருப்பானுங்க, அங்கு சாவது தமிழர்கள்தானே, பின்பு எதற்காக இந்தியா கவலைபட போகிறது, ஒரு காலத்தில் இந்தியா என்றால் எனக்குள் பாச வெறி இருந்தது புரியாத ஜன கன மன பாடலையும், வந்தே மாதிரத்தையும் பாடினேன் ஆனால் இன்று நான் இந்தியன் என்று சொல்வதில் வெட்கபடுகிறேன், இப்படி அவன் மொழியில் நம்மளை பாடவைப்பது, அதுமட்டுமா தமிழகத்தில் தமிழ் இருக்கவேண்டிய இடங்களில் எல்லாம் ஹிந்தியை திணித்துவிட்டார்கள் திணித்து கொண்டும் இருக்கிறார்கள் தமிழர்களின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டுவருகிறார்கள் (எ-டு) in all printed documents, papers, etc ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே வைத்துயிருக்கிறார்கள் அது இரயில்வே துறையாக இருக்கட்டும், வங்கி துறையாக இருக்கட்டும், தபால் துறையாக இருக்கட்டும், பாஸ்ஃபோர்ட்டில், பேன் கார்டு, காஸ் துறை etc இப்படி அனைத்திலும் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் வைத்துகொண்டு தமிழின் சொந்த நாடான தமிழகத்திலேயே தமிழ் புறக்கணிக்கபடுகிறது, சில வீணர்கள் இப்படிதான் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது என கேட்கலாம் அது அவர்களின் சொந்த விருப்பு. இதை தமிழகத்தில் மாற்றி அமைக்க எங்கே எல்லாம் தமிழகத்தில் தமிழ் மறைக்கபடுகிறதோ அப்பவெல்லாம் ஏன் தமிழ் இல்லை என்பதை கேட்க வேண்டும், தேவை பட்டால் போராட்டமும் நடத்த வேண்டும்
    நேரம் குறைவாக உள்ளதால் இத்துடன் முடித்துகொள்கிறேன்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails