வெகுண்டெழுந்த தமிழர்கள்:ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு

ஈழப் பிரச்சனையை மையப்படுத்தி, "ஒரு பூகோள மே பலிபீடமாய்...' என்கிற தலைப்பில் மிக கனமான புத்தகத்தை எழுதியிருக்கிறார் தமிழகத்தின் மூத்த கவிஞர் புலவர் புலமைப்பித்தன்.

புத்தக வெளியீட்டு விழா வில் பேசிய அனைவருமே மத்திய அரசை நோக்கி அணுகுண்டு களை வீசி அரங்கத்தை அதிர வைத்தனர்.

திருச்சி வேலுச்சாமி:

ராஜீவை கொன்றவர்கள் புலிகள்தான்... புலிகள்தான்... என்று காங் கிரஸ்காரர்களெல்லாம் கூக்குரலிடு கிறார்களே... நான் ஒன்றை சொல்லட்டுமா? "ராஜிவ் படுகொலை -விடை தெரியாத வினாக்கள்' என்ற புத்தகத்தை அண்மையில் எழுதியிருக்கிறார் சுப்ரமணியசாமி. (புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்). அந்த புத்தகத்தில், "ராஜிவ்காந்தி கொலைக்கு காரணமாக இருந்தவர் களும் உதவி செய்தவர்களும் ராஜிவ்காந்தியின் அரசியல் வாரிசுகளாகவும் சொத்துக்களின் வாரிசுகளாகவும் இருக்கிறார்கள். சோனியா காந்தி, அவரது அம்மா பௌனே மெய்னோ, அர்ஜுன்சிங், மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களை முறையாக விசாரித்தால் உண்மைகள் தெரிந்துவிடும்' என்று குறிப்பிடுகிறார் சுப்ரமணிய சாமி. இப்படி பல விஷயங்களைப் பதிவு செய் திருக்கிறார் இவர்.

"ராஜிவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது' என்று குதிக்கிறார்களே காங்கிரஸ் தலைவர்கள்... உங்களுக்கு ரோசம் இருந்தால், வீரம் இருந்தால்... சுப்ரமணிய சாமியை கேள்வி கேளுங்களேன். தற்போது, உள்துறை அமைச்சராக இருப்பவர் தமிழரான ப.சிதம்பரம்தான். சுப்ரமணியசாமியை விசாரிக்கட்டுமே?

இயக்குநர் சீமான் :

தமிழகத்தில் புலிகள் ஊடுருவிவிட்டார் கள், அங்கே நுழைந்துவிட்டார்கள், இங்கே நுழைந்துவிட்டார்கள் என்று அலறுகிறார்கள். இது உண்மையா? இல்லை... எப்படி? சமீபத்தில், மும்பையில் நடந்த தாக்குதலை அடுத்து... கிரிக்கெட் விளையாட மாட்டோம்னு லண்டன்காரங்க ஓடிட்டானுங்க. இது இந்தியாவுக்கு மானப்பிரச்சனையாய்டுச்சு. விளையாட்டை ரத்து பண்ணாதீங்க... உங்க ளுக்கு நாங்க பாதுகாப்பு தர்றோம். வாங்கன்னு கெஞ்சியது இந்தியா. மும்பைக்கு பதிலா எங்கே நடத்தலாம்னா... சென்னைதான் சரியான இடம்னு தமிழகத்தை தேர்ந்தெடுக்கிறீங்களே...! ஏன், இந்தியாவுல தமிழகம் மட்டும்தான் மாநிலமா? மும்பைக்கு பதிலா, ஒரிஸாவுல நடத்துங்க, டெல்லியில நடத்துங்களேன். அங்கேல்லாம் நடத்தாம தமிழகத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க? ஏன்னா... தமிழகம்தாண்டா அமைதியான பூமி.

அதான் தேர்ந்தெடுத்தீங்க. இப்போ எந்த ஆபத்துமில்லாம இங்கே விளையாடிட்டு இருக்கான்.

பழ.நெடுமாறன் :

இந்திராவை சந்திக்க வேண்டு மென்று ஒருமுறை என்னை சந்தித்த அமிர்தலிங்கம் சொன்னார். அவரை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று இந்திராவுக்கு அறிமுகப்படுத்தினேன். அவரிடம் ஈழப்பிரச்சனை குறித்து பேசினார் அமிர்தலிங்கம். "இதனை சர்வதேச பிரச்சனையாக்குங்கள். அப்போதுதான் நான் தலையிட முடியும்' என்று கூறியதுடன் ஒவ்வொரு நாட்டிலும் யார் யாரை சந்தித்து பேச வேண்டுமென்றும் அமிர்தலிங் கத்திற்கு ஒரு வகுப்பே நடத்தினார் இந்திரா. அதன்பிறகு நிறைய விஷயங்கள் நடந்தது.

ஆனால், இன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? கொச்சையாக இருக்கிறது. சொந்த அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றை மறைக்கிறார்கள். ஈழப் பிரச் சனைக்காக, நீண்ட கடிதம் ஒன்றை ராஜீவிடம் தந்தார் எம்.ஜி.ஆர். அந்த கடிதத்தை அலட் சியப்படுத்தியவர் ராஜீவ்காந்தி. அலட்சியப் படுத்திவிட்டாரே என்கிற கோபம் ராஜீவ் மீது எம்.ஜி.ஆருக்கு கடைசிவரை இருந்தது.

திருமாவளவன் :

இந்திய அரசு தமிழினத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை பூகோள ரீதியாக பல இடங்களில் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் புலவர். பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவுக்கு பகை நாடுகள். அவைகள் இலங்கை அரசுக்கு நட்பு நாடுகள்.

ஆனால், அந்த இலங்கையோடு நட்பு பாராட்டுகிறது இந்தியா. கண்மூடித்தனமான சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்தியா இருப்பது ஆபத்தானது. ஹிட்லரைவிட மிக மோசமான ஒரு சர்வாதிகாரி இலங்கை அதிபராக வந்தால்கூட... அப்போதும் இலங்கைக்கு ஆதரவாகவே செயல்படுவதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. காரணம், இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். அதில் ஒரு காரணம்... இந்திய அரசின் வெளி உறவு கொள்கை. இதன் முக்கிய அம்சமே... தமிழீழம் கூடாது என்பதுதான். ஆக, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் இந்திய வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும். இந்த பரப்புரையை நாம் செய்வது அவசியம். அதேசமயம், ராஜீவ் கொலையை பற்றிய ஒரு குற்ற உணர்ச்சி நம் தமிழர்களிடம் இருக்கிறது. முதலில் நாம் அதனை போக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது இந்திய அரசு.

தோழர் நல்லகண்ணு :

இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஒரே கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தும் தமிழக அரசியல் தலைவர்களை "கோமாளிகள்' என்கிறார் பொன் சேகா. இந்த ஆளுக்கு எப்படி இந்த துணிச்சல் வந்தது? போரை நிறுத்துங்கள் என்று பிரதமரை சந்தித்து முறையிட்ட பிறகும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால்... துணிச்சல் வந்திருக்கிறது. இந்திய அரசின் போக்குகளை கவனித்தால், ஈழத் தமிழர்களை பாதுகாப்பார்கள் என்று தோன்றவில்லை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தீவிரவாதிகள் ஈஸியாக வந்துவிடுவார்கள் என்று இந்திய கடற்படை தளபதி சொல்கிறார். மும்பை கடலோரத்தில் எந்த திட்டமும் போடலையே... அங்கே எப்படி தீவிரவாதிகள் வந்தார்கள். இதையேன் தடுக்க வில்லை நீங்கள்?

தொகுப்பு: இளையசெல்வன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்

நன்றி : நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails