மோசமான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இலங்கை : அய்.நா

நாட்டில் கொள்ளையர்கள் இருப்பது இயற்கை, ஆனால் நாடே கொள்ளையனாய் இருந்தால் மக்கள் எங்கு செல்வது யாரிடம் சென்று முறையிடுவது. இதற்கு மற்ற நாடுகளின் துணை வேறு. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற முடிவில் இவர்களிடம் எந்த மாற்றமும் வந்ததில்லை, வரப்போவதுமில்லை. ஒரே வழி ஈழத்தமிழர்களின் விடிவு அவர்கள் தனியாக பிரிவதே தனி நாடு அமைப்பதே.

இன அழிப்பை எதிர்கொள்ளும் முதல் எட்டு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இன அழிப்பைத் தடுக்கும் வகையில் ஐ.நா. வின் சார்பில் அமைக்கப்பட்ட அமைப்பு 5 வெவ்வேறு சுட்டிகளைக் கொண்டு இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தது. இந்த 5 சுட்டிகளி லுமே இலங்கை முதல் 8 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த அமைப்பு 33 நாடுகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தது. இதில் மிக வும் ஆபத்துள்ள நாடுகளை "சிவப்பு எச்ச ரிக்கை' நாடுகள் என்றும் அடுத்த நிலையில் உள்ள நாடுகளை "ஒரேஞ்ச் எச்சரிக்கை' நாடு கள் என்றும் வகைப்படுத்தியுள்ளது. இலங்கை "சிவப்பு எச்சரிக்கை' நாடுகளின் பட்டியலில் சூடான் ,கொங்கோ, மியன்மார், பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமா லியா, ஆகிய நாடுகளுடன் இடம்பெற்றிருக்கின்றது.

இந்தப் பட்டியலில் இலங்கை இடம்பிடித்த தையிட்டு ஒரு காலமும் பெருமை கொள்ள முடியாது. இப்போது சர்வதேச நாடுகளைப் பட்டியலிட்டு வெளியாகின்ற அறிக்கைகள் ஒவ்வொன்றிலும் இலங்கை மோசமான விடயங்களில் முன்னணியில் இருப்பதும் நல்ல விடயங்களில் கடை நிலையில் இருப்பதும் புதிதானதொரு விடயமல்ல. இன அழிப்பு ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் உலகில் முதல் 8 நாடுகளுக்குள் இலங்கை இடம்பெற்றிருப்பதானது சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் நிலையை அம்பல மாக்கியிருக்கிறதென்றே சொல்லலாம்.

தமிழ்மக்களை விடுவிக்க "மனிதாபிமானப் போர்' நடத்துவதாக அரசாங்கம் கூறிக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் தமிழ் மக்களின் அழிப்பை மையமாகக் கொண்டதென்றே சர்வதேசம் விளங்கிக்கொண்டிருக்கிறது. இதுவே இன அழிப்பு நாடுகளின் முன்னணிப் பட்டியலில் இலங்கைக்கு இடம்பிடித்துக் கொடுத்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு நியாய மான அரசியல் தீர்வை வழங்கத் திராணியற்ற அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி நடத்திக் கொண்டிருக்கின்ற யுத்தம் அப்பாவி மக்களையே பெரிதும் பாதிக்கிறது.

அண்மையில் தர்மபுரத்தில் உள்ள உழவனூ ரில் விமானப்படை நடத்திய கிளஸ்டர் குண் டுத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்படவும் காயமடையவும் நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்களை சர்வதேசம் இனப்படுகொலைகளாகவே எடுத்துக்கொள்ளும். 1956இல் இருந்து இலங்கையில் நடந்து வருகின்ற இனப்படுகொலைகள் இன்னமும் ஓயவில்லை என்பதையே இத்தகைய தாக்கு தல் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

எப்படித்தான் அரசாங்கம் இப்போது நடக்கின்ற போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போராக சித்திரிக்க முற்பட்டாலும் இது இனப் பிரச்சினை சார்ந்த ஒரு விடயம் என்பதை சர்வ தேசம் ஏற்றுக்கொள்கிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் இன அழிப்பில் இருந்து தமிழ்மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கின்ற வகையில் அவர்களுக் கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே போர் ஓயலாம். இல்லாவிடில் இந்தப் போர் ஓயாதென்பது உலகம் முழுவதற் கும் தெரிந்த விடயம்.

இந்தப் போரைக் காரணம் காட்டி தமிழ்மக்களின் உரிமைகளை அரசாங்கம் நசுக்கிக் கொண்டிருப்பது இப்போது பல்வேறு வழிகளிலும் சர்வதேச அறிக்கைகளில் சுட்டிக்காட்டப் படுகின்ற நிலை காணப்படுகின்றது. அண்மையில் மனித உரிமைகள் கௌர விப்பு நிகழ்வு ஒன்றில் பேசிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் கொண்டலிசா ரைஸ், இலங்கையில் போரிடும் தரப்புக்களால் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இவ்வாறாக அனைத்துத் தரப்புகளாலும் இலங்கை ஒரு ஆபத்தான நாடாக, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள மக்கள் வசிக்கின்ற நாடாகவே அடையாளப்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது. அரசாங்கம் மனிதாபிமானப் போர் நடத்து கின்ற வன்னிப் பகுதியில் வாழுகின்ற மக்கள் சோமாலியாவைப் போன்ற அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்ற கருத்தும் இப்போது வெளியாகியிருக்கிறது.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியான ஜோன் கம்பெல் அண்மையில் உணவு விநியோகத்துக்காக வன்னி சென்று திரும்பியிருந்தார். அங்குள்ள நிலைமைகள் குறித்து அளித்துள்ள பேட்டியொன்றிலேயே சோமாலியாவை விடவும் மோசமான நிலையில் வன்னியல் உள்ள மக்கள் துன்பப்படுவ தாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அரசாங்கத் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பும் எதிர்ப்பும் வந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்றல்ல.

அரசாங்கம் தாம் சீராக உணவுப் பொருட் களை அனுப்புவதாகக் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் உணவுப்பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, மா மட்டுமே ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடாதென்பதை அரசாங்கம் மறந்து விட்டது. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் அவலம் மிகவும் மோசமானது. அதைவிட மோசமானது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் விளைவால் ஏற்படுகின்ற துன்பம்.

வன்னிப் பகுதி மக்களை இந்த இரண்டுமே சேர்த்துத் தான் இந்த நிலைக்குள் தள்ளியிருக் கிறது. சோமாலியா போன்ற நாடுகளில் அவ லம் தனியே உணவுப்பொருட்கள் பற்றாக் குறையால் ஏற்பட்டதே தவிர இயற்கைச் சீற்ற அவலங்கள் ஏற்படவில்லை என்பதை அரசாங் கம் மறந்து விட்டது. அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லது அவற்றைப் பெறமுடியாமல் வன்னிப் பகுதிக் குள் மக்கள் அவல வாழ்வு வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் இலங்கை பற்றிய மதிப் பீடுகளை சர்வதேச ரீதியில் உயர்வான நிலைக் குக் கொண்டு செல்லாது. இலங்கையில் ஒரு பகுதி மக்கள் செழிப்பாக வாழ்வதாகக் காட்டப்பட்டாலும் இன்னொரு பகுதி மக்கள் ஆயுத அடக்குமுறைகளின் கீழ், வசதிகள் அற்ற நிலையில் வாழுகின்ற நிலை நாடு முழுவதிலும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே இன ரீதியான ஒடுக்கு முறைதான். இவையெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்புணர்வற்ற தன்மையையே வெளிப் படுத்துகிறது.

பொருளாதாரம், மனித உரிமைகள், அடிப்படை வாழ்வாதாரங்கள் என்று எது சிதைந்து சின்னா பின்னமானாலும் பரவாயில்லை போர் தொடரும் என்ற பிடிவாதத்தின் விளை வாக நாடே மோசமான அவலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் உலக வங்கி யிடம் இருந்து வெளியாகியிருக்கின்ற எச்சரிக்கை அறிவிப்பில் இலங்கை அடுத்த ஆண்டில் மோசமான வறுமை நிலையைச் சந்திக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தை போர் தின்று தீர்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் உலகின் மிக மோசமான வறுமை நாடாக பெயரெடுப்பதற்கு இலங்கை உலகளவில் போட்டி போடத் தொடங்கியிருக்கிறது.

போரை நிறுத்தி, தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, இனப் படுகொலைகளில் இருந்து பாதுகாப்பதற்கான உரிமைகளை வழங்கும் ஒரு அரசியல் தீர்வுக்கு அரசாங்கத் தரப்பு செல்லும் வரை நாடு இப்போதுள்ளதைப் போன்றோ அல்லது இதை விட மோசமான நிலைக்கோ தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails