சிறிலங்கா மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் கொண்டு வரப்படலாம்: கொழும்பு ஊடகம்
Posted On Sunday, 14 December 2008 at at 03:01 by Mikeஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுக்கு சார்பான ஒஸ்ரியா, ஜப்பான், மெக்சிகோ, உகண்டா, துருக்கி போன்ற ஐந்து நாடுகள் அடுத்த வருடம் நிரந்தமற்ற பாதுகாப்பு சபை உறுப்பினர்களாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு தெரிவாக உள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. எனவே சிறிலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்களை அதிகரிப்பதற்கு அவை முன்நிற்கலாம்.
2009 ஆம் ஆண்டு சிறிலங்கா விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் வெளிவிவகார அமைச்சிற்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தான் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றை முறியடிப்பதற்கு துருக்கியின் ஆதரவை திரட்டும் நோக்கத்துடன் மகிந்த ராஜபக்ச அண்மையில் துருக்கிக்கு சென்றிருந்தார்.
புதிய அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவின் அரசில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள சுசன் றைஸ் போர்க்குற்றங்களிலும், இன அழிப்புக்களிலும் ஈடுபடும் அரசுகள் மீது ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டை கொண்டுவருவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதும் சங்கடமான விடயம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://puthinam.com/full.php?22ImUcc2oV34dB1e302AO44d3YcS0aK6D2e2RMC3b34AAe