சிங்கள் ராணுவத்தில் சிறுவர்கள் - நன்றி குமுதம்

கிளிநொச்சியை இதோ நெருங்கிவிட்டோம்; அதோ நெருங்கிவிட்டோம்' என்று நாள்தோறும் முழக்கமிடும் இலங்கை ராணுவம், அடுத்தடுத்து விழும் அடிகளால் சோர்வடைந்து நிற்கிறது. டிசம்பர் 16, 17-ம் தேதிகளில் நடந்த சண்டையில், உயிரிழந்த சிங்கள ராணுவத்தினர் 32 பேரின் உடல்கள் புலிகளால் மீட்கப்பட்டன. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட உயிரிழந்த சிங்களப் படையினரின் புகைப்படங்கள், தமிழ்ச் செய்தி மையம் இணையதளத்தில் (tamilnewscenter.com) வெளிவந்திருக்கின்றன. அந்தப் புகைப்படங்கள் சொல்லும் செய்தி, பலதரப்பிலும் அதிர்ச்சி அலைகளைப் பாயவிட்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள், போராட்டக் களத்தில் இறங்கியதில் இருந்தே அவர்கள் சிறுவர்களைப் படையில் இணைத்து வருவதாக சிங்கள அரசு சர்வதேச அளவில் பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு மாறாக, சிங்கள ராணுவத்தில் சிறுவர்களும், அரும்பு மீசைகூட முளைக்காத இளைஞர்களும் இருப்பதை, இப்போது வெளியாகியிருக்கும் இந்தப் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்தப் புகைப்படங்களுக்கு வலுவூட்ட மற்றொரு செய்தியும் வெளிவந்து பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. வறுமையில் வாடும் சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படையில் சேர்த்து வருவதாக, சிங்கள அரசு பற்றி வெளியாகியுள்ள செய்திதான் அது.

அதுவும் சிங்கள ராணுவம் மீது இந்தப் பரபரப்புக் குற்றச்சாட்டை வீசியிருப்பது, விடுதலைப் புலிகளிடம் பிடிபட்ட சிங்களச் சிப்பாய் ஒருவர் என்பதுதான் பலரின் புருவங்களையும் உயரச் செய்திருக்கிறது. அந்தச் சிப்பாயின் பெயர் நிசாங் ரணசிங்க. வயது வெறும் இருபத்திரண்டு. கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை ஞாயிறன்று நிருபர்கள் சந்தித்தபோது, சிங்கள ராணுவத்தின் சித்து விளையாட்டுகளைப் பட்டியலிட்டு, பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார்.

எனது சொந்த ஊர் அனுராதபுரத்தைச் சேர்ந்த கண்ணேவ. ஏழாவது வரை படித்துள்ளேன். வறுமையின் காரணமாக கடந்த ஜூலை மாதம் சிங்கறெஜீமென்ட் 53-வது படைப் பிரிவில் சேர்ந்தேன். அப்போது `உன்னைச் சண்டைக்கு அனுப்ப மாட்டோம்; ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இருந்து சில எடுபிடி வேலைகள் செய்தால் போதும்' என்று ராணுவத்தினர் என்னிடம் வாக்குறுதி அளித்தனர். அதற்கு மாறாக, டிசம்பர் ஒன்பதாம் தேதி முகமாலைக்குக் கொண்டுவரப்பட்டு சண்டையில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டேன்.

அங்கு நடந்த பயங்கரச் சண்டையில் டிசம்பர் 13-ம் தேதி காயம் அடைந்தேன். அங்கு உடனிருந்த சிங்களச் சிப்பாய்கள் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். சுமார் 13 மணிநேரம் அந்த இடத்திலேயே கிடந்த என்னை, மூன்று விடுதலைப் புலிகள் மீட்டு, உயிர் பிழைக்கச் செய்திருக்கிறார்கள். படைத்தரப்பு தந்த வாக்குறுதியை மீறி சண்டையில் ஈடுபடுத்தப்பட்டேன். என்னைப் போல் ராணுவத்தில் இணைந்துள்ள இளைஞர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். சிங்கள ராணுவத்தின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி யாரும் படையில் சேரவேண்டாம்'' என்று கண் கலங்கியிருக்கிறார் அந்த இளைஞர்.

சிங்கள ராணுவத்தில் சிறுவர்களையும் வறுமையில் வாடும் இளைஞர்களையும் ஏமாற்றி இணைத்து வருவது குறித்து தமிழீழ ஆதரவாளரான புலமைப்பித்தனிடம் பேசினோம்.

விடுதலைப் புலிகளிடம் வெறும் இரண்டாயிரம் வீரர்களே இருப்பதாகவும், பன்னிரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் ராணுவத் தளபதி பொன்சேகா கூறி வருகிறார். மாறாக, சிங்கள ராணுவத்தினர்தான் யுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓடிஒளிகிறார்கள். `சிங்கள அரசு தேவையில்லாமல் போர் நடத்துகிறது; போரினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என்கிற மனக்குமுறல் சிங்கள மக்களிடம் பரவலாக உருவாகிவிட்டது. ஏற்கெனவே, 1987-ல் ஜெயவர்தனே ஆட்சியில் ராணுவத்தைவிட்டு சிப்பாய்கள் ஓடிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

பள்ளி செல்கிற பதினான்கு, பதினைந்து வயதுச் சிறுவர்களை படையில் சேர்க்கும் வேலையில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது. இப்போதும், சண்டையில் இருபது சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டால், எண்பது பேர் காணாமல் போய்விடுகிறார்கள்.

நம்ம இயக்கத்தில் (விடுதலைப் புலிகள்) சிறுவர்களையும், பெண்களையும் வலுக்கட்டாயமாக படையில் சேர்த்து வருவதாக சிங்கள அரசு இத்தனை நாட்களாக விஷமப் பிரசாரம் செய்து வந்தது. போராட்டக் குணம் இல்லாத யாரையும் வலுக்கட்டாயமாக போராளிகளாக உருவாக்க முடியாது. எதிர்ப் படையணியில் இருந்த இருபத்தைந்தாயிரம் பேருடன் சண்டையிட வெறும் முந்நூறு வீரர்களை அனுப்பியவர், ஃபிடல் காஸ்ட்ரோ. நம்ம இயக்கம் கொள்கைக்காகப் போராடுகிறது. அதனால்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத் தீவு ஆகிய ஏழு நாட்டு ராணுவத்தின் வியூகத்தை எதிர்த்து நிற்க புலிகளால் முடிகிறது. இந்த வெற்றிப்பயணம் தொடரும்'' என்று கர்ஜித்தார் புலமைப்பித்தன்.

``சிறுவர்களையும், இளைஞர்களையும் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தும் சிங்கள ராணுவத்தின் நடவடிக்கை பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன், தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட உணவு, உடை கொண்ட எண்பதாயிரம் பெட்டிகளில் வெறும் 32,783 பெட்டிகள் மட்டுமே தமிழர் பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதிலும், 1044 பெட்டிகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன என்பது சிங்கள அரசிடம் குறைந்தபட்ச மனிதாபிமானத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது'' என்கின்றனர், தமிழுணர்வாளர்கள்.

நன்றி : குமுதம்
http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-28/pg3.php

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails