கவிஞர் தாமரை பேட்டி! ஈழத்தமிழர் பிரச்சினை:இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கே!






தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு கவிஞர் தாமரை மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை. இலங்கை அரசு தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்து வருகிறது. பிற நாடுகளில் நடைபெறும் அத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உலக நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் பாரா முகமாக இருப்பதற்குக் காரணம் முதன்மையாக இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கே! என கவிஞர் தாமரை எமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு அளித்த பேட்டி பின் வருமாறு:

கேள்வி: நளினியை விடுதலை செய்யக் கோரித் தாங்கள் ஆரம்பித்துள்ள கையெழுத்து இயக்கம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

பதில்: நளினி விடுதலை கோரும் கையெழுத்து இயக்கம் 2006ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. நான் ( கவிஞர் தாமரை) , எழுத்தாளர் பா.செல்வப்பிரகாசம், நெய்வேலி பாலு, கவிஞர் கிருஷாய்கினி ஆகியோர் பேடி முடிவு செய்து தொடங்கினோம். கலை இலக்கியப் படைப்பாளிகளிடம் கையெழுத்துப் பெறுவதை நோக்கமாகக் கொண்டோம். தமிழக முதல்வரை நேரில் சந்தித்துக் கையளிப்பது என்பதையும் அப்போதே முடிவு செய்திருந்தோம்.

கேள்வி: தண்டனை பெற்று வரும் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என ஏன் நினைக்கின்றீர்கள்? முக்கியத்துவம் என்ன?

பதில்: நளினி 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். வெளி உலகையே காணாத, தனிமைச் சிறை! இரண்டு வயது வரை வளர்த்த குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு, அதை மீண்டும் காண முடியாமல் இருப்பது எத்தனை பெரிய கொடுமை! பிற கைதிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள், உரிமைகள் நளினிக்கு மறுக்கப் படுகின்றன. ஆயுள் முடியும் வரை ஒரு கைதியை சிறைக்குள்ளே வைக்க வேண்டும்மென்பது "சீர்திருத்தத்" தை நோக்கமாகக் கொண்ட எந்த அரசுக்கும் நியாயம் அல்ல! நளினியின், அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இராபர்ட் பயால், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் விடயங்களில் நடப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்! மனிதாபிமனம் அறவே அற்றுப் போன அரசா அது? அப்படித்தான் எனில் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்?

கேள்வி: நளினியை விடுதலை செய்வதற்குத் தமிழக மக்கள் உதவி செய்வார்களா? அவர் குற்றம் செய்தவர் அல்லவா?

பதில்: தமிழக மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறுகிறோம். மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நளினி குற்றம் செய்தவர் தான். ஆனால் என்ன குற்றம் செய்தார் என்பதை சற்று ஆழமாகக் கவனிக்க வேண்டும். அவர் தற்கொலைப் படையில் ஒருவர் என்றும், கொலையாளிகளுக்கு அவர்களின் நோக்கம் நிறைவேற உதவி செய்தார் என்றும் அதற்காக சதி செய்தார் என்றும் ஊடகங்களால் பரப்பப்பட்டுள்ளது. உண்மையில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டே - அரசு வைக்கும் குற்றச் சாட்டே - அவர் குற்றம் நிகழ்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு அதை அறிந்திருந்தார் என்பது தான். அதற்கு ஒரே ஆதாரமாக அவர்கள் முன்வைப்பது நளினியின் " ஒப்புதல் வாக்குமூலத்" தைத் தான். " ஒப்புதல் வாக்குமூலத் "தில் என்ன வேண்டுமென்றாலும் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மை. மூவர் கொண்ட நீதிபதிக் குழுவில் ஒருவரான நீதிபதி தாமாஸ் நளினியில் சகோதரர் பாக்கிலராதனின் வாக்குமூலமான " குற்றம் நடந்த பிறகே நளினி அதை அறிந்தார் " என்பதை நம்பி, மேற்கோள் காட்டுகிறார். தன்னை அறியாமல் கொலையாளிகளுடன் நளினி இருந்தார், உதவி செய்தார் என்பதே சாரம்!

என்ன குற்றம் செய்திருந்தாலும் 17 ஆண்டு தனிமைசிறைவாசம் போதுமானது. இனியும் தாமதிக்காமல் அவர் உட்பட நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

கேள்வி: பிரியங்கா நளினியை சந்தித்ததற்கும், தங்கள் கையெழுத்து இயக்கத்திற்கும் எதேனும் தொடர்பு உண்டா?

பதில்: இல்லை, நாங்கள் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்தது 2006 ஆம் ஆண்டு இறுதியில். பிரியங்கா சந்திப்பு 2008 ஆரம்பத்தில்!

கேள்வி: நளினியை விடுதலை செய்வார்களா?

பதில்: நளினி உட்பட நால்வரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே நமது கோரிக்கை. முயற்சி தொடர்கிறது.

கேள்வி: நளினியை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளீர்கள். அதே போல் இலங்கையில் தமிழர்களை இலங்கை அரசாங்கம் அழித்து வருகிறது. இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஈழத்தமிழர்களின் நிலைமைகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறுவீர்களா?

பதில் : இலங்கையில் நடப்பது இனப்படுகொலை. இலங்கை அரசாங்கம் தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்து வருகிறது. பிற நாடுகளில் நடைபெறும் அத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உலக நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் பாரா முகமாக இருப்பதற்குக் காரணம் முதன்மையாக இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கே! இரண்டாவதாக இந்திய அரசை வற்புறுத்த இயலாத, விரும்பாத தமிழக அரசு! எல்லாவற்றிற்கும் மேலாக, தன் இனம் அழிகிறதே என்ற எந்த பதைப்பும் இன்றி தன் நலமே பெரிது என்று உண்டு, உறங்கி வாழும் தமிழ்மக்கள்!

தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலிக்காத வரை ஈழத்தமிழர்களின் நிலமை இதுதான்!

தமிழகத்தில் உள்ள சிறு தமிழ் இயக்கங்கள், தமிழ் உணர்வாளர்கள், சிறிது மனசாட்ச உடையவர்கள் இன்னும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நன்றி

http://www.tamilseythi.com/interview/thamarai-2008-11-06.html

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    தமிழ் உணர்வாளர் மாத்திரமல்ல நல்ல இதயம் உள்ள கவிஞர்.

    ஒரு ஈழத் தமிழர்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails