மீண்டும் ஒரு போர் நிறுத்தம்?

வன்னிக் களமுனையில் உக்கிரம் பெற்றுள்ள போர் தற்காலிகமாக ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கிளிநொச்சியைக் கைப்பற்றியே தீர்வது என்ற முனைப்புடன் கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள இராணுவம், பொது மக்களின் இழப்புக்களைப் பற்றிக் கவலைப்படாமல் - அதேவேளை பொது மக்கள் அழிவுகளுக்குப் பயந்து வவுனியாவுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் - மேற்கொண்ட விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்கள் என்பவை ஏற்படுத்திவிட்ட மனித அவலம், தாய்த் தமிழகத்திலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்திவிட்ட உணர்வலைகள் இன்று சிறிலங்கா அரசு யுத்தத்தை நிறுத்தியே ஆக வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தாய்த் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி மாநில அரசவையில் சகல கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு சென்றுள்ளமையானது மத்திய அரசாங்கத்தை அசைந்து கொடுக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் பாரதத்தில் ஏற்பட்ட திடீர் உணர்வலைகளால் அரண்டு போன சிங்களம் முதலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. 'பொதுமக்கள் பாதிக்கப்படாமல் (?) போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்ற வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் வழக்கம் போல அரசாங்கத்தால் அதனைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மகிந்தவே புதுடில்லி சென்றுள்ளார். இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் ஒன்றைச் செய்யப் போவதாகவும் அதற்கு முன்னதாக கிளிநொச்சியைக் கைப்பற்றுமாறு படையினருக்குப் பணிப்புரை விடுக்கப் பட்டுள்ளதாகவும் ஒரு சேதி வெளியாகியிருந்தது.

விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களை ஏன் தீவிரமாக நடாத்தவில்லை என்று அங்கலாய்த்தவர்களுக்கு தற்போது அவர்களின் தந்திரோபாயம் புரியத் தொடங்கியிருக்கும். அவர்கள் யுத்த நிறுத்தம் ஒன்று மீண்டும் ஏற்படுத்தப்படும் என்பதை முன்கூட்டியே ஊகித்துள்ளார்கள் போன்று தென்படுகின்றது. அதனாலேயே அவர்கள் முடிந்தளவு தமது ஆளணி மற்றும் ஆயத தளபாடங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கின்றார்கள் என ஊகிக்க முடிகின்றது.அதேவேளை, சிங்களத்துக்கும் அந்த விடயம் ஏற்கனவே தெரிந்துள்ளதாகக் கருத முடியும். ஏனெனில், அவர்கள் தமக்கு வாய்ப்பற்ற பகுதிகளுக்கூடாகவும் கூட வெகுவேகமாக முன்னேறி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் இன்னமும் தாம் 2002 பெப்ரவரியில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறி வருகின்றார்கள்.

இவ்வருட ஆரம்பத்தில் சிங்கள அரசு ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்த போது கூட அவர்கள் தாமும் அதில் இருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை.அதேசமயம் ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் கொழும்பில் சார்க் உச்சி மாநாடு நடைபெற்ற போது விடுதலைப் புலிகள் மோதல் தவிர்ப்பு பற்றி அறிவிப்பும் வெளியிட்டிருந்தார்கள். இதுவே அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால், சிங்களமோ போர்வெறியுடன் நடந்து கொள்கிறது. காரணம் எதுவுமின்றி போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளை இவ்வருட இறுதிக்குள் ஒழித்துக் கட்டப் போவதாகச் சூழுரைத்தி;ருந்தார். ஆனால் அவரின் ஆசை நிராசையாகிப் போனது.

தற்போதைய நிலையில் தமது பலத்தைத் தக்க வைப்பதில் விடுதலைப் புலிகளும் கூடுதலான அளவு இடத்தைக் கைப்பற்றுவதில் சிங்கள இராணுவமும் முனைப்புக் காட்டி வருகின்றன.மறுபுறம் எதிர்பார்க்கப்படும் போர் நிறுத்தத்தினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை கிட்டக் கூடுமா? உண்மையில் இது தெளிவற்றதாகவே இருக்கிறது. ஏனெனில் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் தரும் இந்தியா, தமிழர்களுக்கான தீர்வு பற்றி; வெளிப்படையாக இதுவரை எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் தற்போதைய பருவமழைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படக் கூடிய துயரத்தைக் குறைக்கவும், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள எழுச்சி அலையை தேர்தல் வரை கட்டுப்படுத்தவுமே போர் நிறுத்தம் அமுலுக்கு வருமானால் அது தமிழ் மக்களை மீண்டுமொருமுறை ஏமாற்றியதாகவே ஆகும்.

thanks : http://www.swissmurasam.net/artikel/10198-2008-11-25-18-27-43.html

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails