கணிதமேதை ராமானுஜன் : நன்றி கீற்று இணைய தளம்

வழக்கம் போல் ராமானுஜன் பள்ளி செல்லவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு தட்டை எடுத்துத் தரையில் அமர்ந்தான். வெகுநேரமான பிறகும், தயார் சமையலறையிலிருந்து சாதம் கொண்டு வரவில்லை. குரல் கொடுத்தான் ராமானுஜன். தயங்கித் தயங்கி வந்த தாயார், அன்று சமையல் செய்ய ஒருபிடி அரிசிகூட வீட்டில் இல்லையென்றும், பள்ளிக்குச் சென்று மாலை திரும்புகிற போது சாதம் செய்து தாயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கவலையுடன் மகனிடம் தெரிவித்தார். ராமானுஜன் பதிலுக்கு ஏதும் கூறாமல் தண்ணீர் குடித்து விட்டு பள்ளிக்கு பட்டினியுடன் சென்றான்.

அன்று மாலை ராமானுஜன் வீட்டிற்கு வரவில்லை. தாய் பதற்றத்துடன் ராமானுஜனின் நண்பன் ஒருவனை அழைத்துக் கொண்டு பல இடங்களில் தேடினார். உருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள பெருமாள் கோயில் மண்டபத்தில் தலைக்கு புத்தகப் பையை வைத்துக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.

கோயில் மண்பத்திலுள்ள தரையெல்லாம் சாக்பீஸால் கணக்குப் போடப் பட்டிருந்தது. தாயுடன் வந்த நண்பன் ராமானுஜனைத் தட்டியெழுப்பினான். தூக்கம் கலைந்து எழுந்தவுடன் “அதற்குள் எழுப்பி விட்டாயே! இன்னும் ஐந்து நிமிடம் தூங்கியிருந்தால் விடை கிடைத்திருக்குமே!” என்று சொன்னான் ராமானுஜன்.

ராமானுஜன் பள்ளியில் பயிலும் போது எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் கணிதத்தில் நுற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வந்தார். 1904 ஆம் ஆண்டு கும்பகோணம் அரசுக்கல்லூரியில் சேர்ந்தார். கணித்தில் நூற்றுக்கு நூறு பெற்ற ராமானுஜன், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம் இவருக்குத் தாண்டமுடியாத பெருந்தடையாக இருந்தது.

பச்சையப்பன் கல்லூரியில் ஒருபேராசிரியரின் நிதி உதவியுடன் சிறிது காலம் படித்தார். பின்னர் சென்னையில் இயங்கி வந்த இந்தியன் கணிதச் சங்கத்தில் ஒரு பேராசிரியரின் உதவியுடன் அறிமுகம் கிடைத்தது. 1911 மற்றும் 1912ஆம் ஆண்டுகளில் ராமானுஜன் தனது கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்தியன் கணித சங்க சஞ்சிகையில் வெளியிட்டார். இக்கட்டுரைகள் இந்தியக் கணிதவியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து வாட்டி வதைத்துவந்த வறுமையின் காரணமாக வேறு வழியின்றி, 1912 ஆம் ஆண்டு மதறாஸ் போர்ட் டிரஸ்ட்டில், ஒரு சாதாரண குமாஸ்தாவாக மாதம் முப்பது ரூபாய் சம்பளத்திற்குச் சேர்ந்தார். வருமானம் போதுமானதாக இல்லாததால் வேலை நேரம் போக மீதி நேரத்தில் மாணவர்களுக்குக் கணிதம் கற்றுத்தருகிற பணியை மேற்கொண்டார்.

இந்தச் சுழலில் லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியரும், உலகக் கணிதமேதைகளில் ஒருவராகக் கருதப் பட்டவருமான பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி அயல்நாட்டு ஆங்கில சஞ்சிகை ஒன்றில் கணிதப் புதிர் ஒன்றை வெளியிட்டிருந்தார் அப்புதிருக்கு உலகெங்கிலுமிருந்து விடையினை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் ஜி.எச்.ஹார்டியின் கணிதப்புதிருக்கு விடையெழுதி அனுப்பினார் ராமானுஜன். அத்தோடு சில கணிதத் தேற்றங்களையும் இணைத்து அனுப்பினார்.

ராமானுஜன் அனுப்பிய கணிதப் புதிருக்கான விடை பேராசிரியர் ஜி.எச்.ஹார்டிக்கு பெரும் வியப்பையளித்தது. விடையை கச்சிதமாக எழுதிய ராமானுஜன் ஒரு கணிதப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் நினைத்த ஜி.எச். ஹார்டிக்கு, ராமானுஜன் தன்னை அறிமுகம் செய்து எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார். ஹார்சி ராமானுஜனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினார்.

கெம்பிரிஜ் பல்கலைக்கழகம் ராமானுஜனுக்கு பல்லாயிரம் அறிஞர்களும், கல்வியாளர்களும் அமர்ந்திருந்த சமையில் கௌரவ ‘பி.ஏ’ பட்டமளித்துப் பாராட்டியது.

ஆம்.. கும்பகோணம் கல்லூரியில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியும், ஆங்கிலப் பாடத்தில் மூன்று மதிப்பெண்கள் போதவில்லை என்பதால் மூன்று முறை தொடர்ச்சியாக பெயிலாக்கப் பட்டு பட்டம்பெற இயலாமல் போன ராமானுஜனுக்கு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டில், “தேர்வே எழுதவேண்டாம். கணித மேதையைப் பாராட்டி ‘பி.ஏ’ பட்டமளிக்கிறோம்” என்று கௌரவித்தது.

தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்த கணித மேதை ராமானுஜன், 1920ஆம் ஆண்டு முப்பத்து இரண்டரை வயது முடிவதற்குள் உடல்நலம் குன்றி மரணமடைந்தார்.

“கணித நூல் வரலாற்றிலேயே மிகப் பெரிய கணித மேதைகளுள் ஒருவராக ராமானுஜத்தின் பெயர் திகழும்” என்று பேராசிரியர் ஈ.எச் நெவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.


நன்றி : http://www.keetru.com/history/tamilnadu/ramaanujam.php

Posted in |

1 comments:

  1. குப்பன்.யாஹூ Says:

    தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு.
    பதிவிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails