இலங்கையிலுள்ள இந்துத் தமிழர்கள் பாதிப்புற இடமளிக்கப் போவதில்லை: இந்திய இந்து அமைப்புகள்
Posted On Thursday, 18 December 2008 at at 10:04 by Mikeஇலங்கையிலுள்ள இந்துத் தமிழர்களுக்கு ஆதரவாக ராஷ்டிரிய சுவாயாம் ஷேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) ஆகிய இந்தியாவின் இரு முன்னணி இந்து மத அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. |
இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களின் செல்வாக்கையும் அபிமானத்தையும் பெற்றிருக்கும் இந்த இரு அமைப்புகளும் இலங்கையில் இந்து ஆலயங்கள், கலாசாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை எதிர்ப்பதாக யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தெரிவித்திருப்பதாக ஐ. ஏ.என். எஸ். செய்திகள் தெரிவித்தன. நீங்கள் உங்களுடைய மக்களுக்கு கூறுங்கள். நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் இந்துக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு இருக்கின்றோம். இலங்கைத் தமிழர்களில் அதிகமானவர்கள் இந்துக்களாக இருப்பதால் அவர்களை கைவிட மாட்டோம்' என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக்சிங்கால் தனது தலைமையகத்தில் வைத்து சிவாஜிலிங்கத்திடம் உறுதியளித்துள்ளார். இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களை பாதுகாப்பு படையினரும் சிங்கள மேலாதிக்கவாதிகளும் அழிப்பதாக சிங்காலுக்கும் விஷ்வ இந்து பரிஷத்தின் மற்றொரு தலைவரான எஸ்.வேதாந்தத்துக்கும் தானும் தமிழ்நாட்டிலுள்ள பாரதீய பார்வார்ட் புளக்கின் தலைவரான கே.நாகை முகனும் அறிவித்ததாக சிவாஜிலிங்கம் ஐ.ஏ.என். எஸ்ஸுக்கு கூறியிருக்கிறார். இந்து ஆலயங்கள் பலவற்றை படையினர் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் இந்த ஆலயங்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கையில் இந்து கலாசாரம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார். இலங்கை யுத்தத்தால் இந்து ஆலயங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தான் அறிந்திருக்கவில்லையென அசோக் சிங்கால் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இந்து மதம் பாதிப்புக்குள்ளானதையும் ஆலயங்கள் தாக்கப்படுவதையும் தமது அமைப்பு அனுமதிக்கப்போவதில்லையென ஆர். எஸ்.எஸ்.அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி சிவாஜிலிங்கத்துக்கு தெரிவித்துள்ளார். எங்கேயென்றாலும் இந்துக்கள் துன்பப்பட நாம் இடமளியோம்' என்று அவர் கூறியுள்ளார். ஜோஷி, சிங்கால் ஆகியோருடன் சுமார் ஒரு மணி நேரம் தனித்தனியே சந்தித்து சிவாஜிலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சென்னையிலிருந்து சென்ற சிவாஜிலிங்கம், அதற்கு முன்னராக காஞ்சி சங்கராச்சாரியார் ஜயந்திர சரஸ்வதி சுவாமிகளையும் சந்தித்திருந்தார். |
http://www.tamilwin.com/view.php?22OpDcc2nW24dC2h302HQK4d30jH0bX9E2e2SLB3b37GQe