தமிழினப் படுகொலை வழக்கு - 400 பக்க மனு தயார்

இலங்கையில் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது, ஆட்களை கடத்திக் சென்று மனித வதை செய்தது, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாற்றுகளுக்காக இலங்கை அதிபர் இராசபக்சேவின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய இராசப்சே, இராணுவ படை தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது இனப்படுகொலை வழக்குத் தொடரப்பட உள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘தமிழர்களுக்கு எதிரான படுகொலை’ என்ற அமைப்பின் சார்பில் ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபாராக இருந்தபோது, அமெரிக்க அரசின் மேனாள் உதவித் தலைமை வழக்குரைஞராக செயல்பட்ட மூத்த சட்ட வல்லுனரும், அரசியலமைப்புச் சட்டத்திலும், பன்னாட்டு சட்டத்தில் கைதேர்தவருமான திரு. புரூஸ் ஃபெய்ன், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோத்தபாய இராசபக்சே, சரத் பொன்சேகா ஆகியோர் மீதான குற்றச்சாற்றுகள் அடங்கிய 400 பக்க மனுவை அவர் தயாரித்திருக்கிறார். இந்த மனு வரும் சனவரி மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நீதித்துறையிடம் தாக்கல் செய்து, இனப்படுகொலை வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புரூஸ் ஃபெய்ன் மேலும் கூறுகையில்; இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது 3 வகையான இனப்படுகொலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவதாக தமிழர்களைக் கூலிப்படைகளை வைத்துப் படுகொலை செய்தல் - கடத்திச் சென்று படுகொலை செய்தல் - உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயங்களை ஏற்படுத்துவதாகும். இரண்டாவதாக, தமிழர்களுக்குச் செல்லும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் அவர்களைப் பட்டினி மற்றும் நோய் தாக்கப்படும் நிலைக்குத் தள்ளி இறப்பை ஏற்படுத்துவதாகும். மூன்றாவதாக தமிழர்கள் மீது தாக்குதலை நடத்தி அவர்களை இடம் பெயரச் செய்து அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்துவது போன்றவைகளாகும். இந்த 3 செயல்களும் மிகக்கொடுமையான குற்றங்களாகும்.

இந்தச் செயல்களுக்கு இலங்கைப் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய இராசபக்சேவும், போர்ப்படைத் தலைவர் சரத் பொன்சேகாவும்தான் காரணம். இவர்கள் இருவருமே அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் இருவரின் செயல்களுக்கும் அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் இவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரச் சட்டத்தில் இடம் உள்ளது. லைபீரியாவில் அந்நாட்டுச் சிறுபான்மையினர் மீது கொடுமை படுத்தப்பட்டதற்காக அந்நாட்டின் அதிபர் சார்லஸ் டெய்லரின் மகன் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் இனப்படுகொலை வழக்குத் தொடரப்பட்டதே இவ்வழக்கிற்கு முன்னுதாரணமாகும்.

மேலும் தனிப்பட்ட நபர்கள் நேரடியாக வழக்குத் தொடர முடியுமா என்ற கேள்விக்கு, தனிப்பட்ட நபர்கள் எவரும் இனப்படுகொலை வழக்குத் தொடர முடியாது. அமரிக்க அரசு தான் இத்தகைய வழக்கைத் தொடரமுடியும். ஆமெரிக்காவின் புதிய சட்ட அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். அவர்களிடம் கோத்தபாய இராசபக்சே, சரத் பொன்சேகா மீதான குற்றச்சாற்றுகளை முன் வைத்து வழக்குத் தொடரவேண்டும் என்று வலியுறுத்துவோம். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களின் ஆதரவை இதற்காகத் திரட்டுவோம். இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான கட்டுரைகளை வெளியிடுவோம். அமெரிக்க நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்து இது தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வோம். இவ்வாறு மக்களின் ஆதரவைத் திரட்டி இனப்படுகொலை வழக்கை அரசே தொடர நடவடிக்கை எடுப்போம்;, என்றார்.

உலகில் இப்போது நிலவிவரும் சூழலில் இது சாத்தியம்தானா என்றபோது, இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராகக் தமிழ் நாடு, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டனம் எழுந்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்திருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக் காரணம் காட்டித்தான் அய்க்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமைக் குழுவிலிருந்து இலங்கை அரசு நீக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைக்காகக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மெடலின் அல்பிரைட் ஒபாமா நிருவாகத்திற்குப் பரிந்துரைகளை அளித்துள்ளது. எனவே இலங்கையில் நடைபெறும் தமிழனப் படுகொலைகள் மீது அமெரிக்க அரசு அதிக கவனம் செலுத்தும். அதன் பயனாக இனப்படுகொலைக்கு எதிரான அமெரிக்க அரசு வழக்குத் தொடரும், என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் திரு. ஃபெய்ன்.

http://www.tamilnewscenter.com/text/news/world/2008/dec/15.html

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    A more welcoming act. Let us hope and keep proceeding.

  2. Anonymous Says:

    Hope.. Good will happen to eelam tamils.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails