இலங்கை பிரச்சினையை ஐ.நா. கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் - ராமதாஸ்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடுவதில் சிரமம் இருந்தால், இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு போய் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



டில்லியில் முதல்வர் கருணாநிதியுடன் சென்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், வெறியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.


அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழ் மக்கள் இலங்கையில் ஏராளமான எண்ணிக்கையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொடூரமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை தடுக்க இந்தியா உடனடியாக நடவடிக்கையில் இறக்க வேண்டும்.


இப்பிரச்சினை குறித்து, தமிழகத்தில் இரண்டு முறை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், இதுவரை இப்பிரச்சினையில் தலையிட இந்தியா முன்வரவில்லை.


இவ்விஷயத்தில் இந்தியா நேரடியாக தலையிட முகாந்திரங்கள் உள்ளன. இலங்கை பிரச்சினையால் தமிழகத்துக்கு தஞ்சம் கேட்டு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும் அளித்து வரும் ஆயுத உதவிகள் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து உள்ளது.


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடருகிறது. இந்த காரணங்களால் இந்தியா நேரடியாகவே தலையிட முடியும். அவ்வாறு தலையிடுவதில் தயக்கம் இருந்தால் இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு போய் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    இந்தியா நேரடியாகச் செய்ய முடிந்தவை பல உள்ளன:
    1.இந்தியத் தூதுவரை திரும்பி அழைத்தல்
    2.வணிகக் கட்டுப்பாடு
    3.அனைத்து உதவிகளையும் நிறுத்துதல்
    இப்படிப் பல உண்டு.
    ஆனால் புது டில்லி தமிழர்களை ஏமாற்றுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறதே தவிர தமிழின அழிப்பைத் தடுப்பதில் இல்லை.
    இதைத் தமிழகத் தலைவர்கள் நன்கு புரிந்து கொண்டு இந்தியாவைத் தாண்டி,நேரே ஐக்கிய நாட்டுச் சபைக்கும்,மற்றும் தமிழர்கள் வாழும் பல நாட்டுத் தலைவர்கட்கும் நேரே தொடர்பு கொண்டால் தான் பிரணாப் முகர்ஜி,இந்திய அரசின் முகத்திறை கிழியும்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails