பிரபாகரனை வீரன் என்று ஏன் சொல்லக்கூடாது? பாரதிராஜா ஆவேசம்
Posted On Wednesday, 26 November 2008 at at 11:29 by Mikeஇலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து போராடி வருகிறார். இவர் இலங்கை பிரச்சனை தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
"ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு" என்ற தலைப்பில் நடந்த அந்த கருத்தரங்கில் பேசிய பாரதிராஜா தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
பிரபாகரனின் பெயரைச் சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன் வீரமானவன் அவனது பெயரை உச்சரிக்கக்கூடாது. ஒரு வீரனை வீரன் என்று சொல்லக்கூடாதா? என்னை மிரட்டாதீர்கள்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்துப் பேசினால் இறையாண்மை போயிடும் என்கின்றனர்.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு காநாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாய்; இது என்ன இறையாண்மை?
ராஜீவை கொன்று விட்டனர் என்ற ஒரே காரணத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறாயே; ஒரே ஒரு முறை இலங்கையில் என்ன நடக்கிறது என பார்த்து விட்டுவா. இருபது ஆண்டு காலமாக அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். . மூன்று நாட்களுக்கு முன்னால் திடீர் என "தாயகம் திரும்பிப் போ" என்றால்; என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?
படைபலம், இராணுவ உதவி அனைத்தையும் அனுப்பிவிட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறோம் எம்.பிக்களை ராஜினாமா செய்ய வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் செய்துகொண்டிருக்கும் வேளையில்; அங்கு ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா? உளவுத்துறை இல்லையா? இது வலுப்பெற்றால் தமிழகம் பாகுபட்டுவிடும்’’. என்று ஆவேசத்துடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.