தமிழக சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் இலங்கையில் போரை நிறுத்தவேண்டும் என கோரிக்கை
Posted On Tuesday, 11 November 2008 at at 11:58 by Mikeதமிழக சட்டசபையில் இன்று ஈழத் தமிழர்கள் விவகாரம் எதிரொலித்தது. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.
சிவபுண்ணியம் (இ.கம்யூனிஸ்ட்): இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு தரப்பு மட்டுமல்லாது, இருதரப்பிலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தம் செய்ய சம்மதித்து இருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசு பிடிவாதம் காட்டுகிறது. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இலங்கையில் போரை நிறுத்த சட்டப் பேரவைத் தீர்மானம் மூலம் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்): ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடைக்க அரசியல் தீர்வு காண வேண்டும். இதற்கு, மத்திய அரசை உரிய முறையில் நிர்பந்திக்க வேண்டும்.
கோ.க.மணி (பாமக): இலங்கையில் அப்பாவித் தமிழர்கள், போராளிகள் எனப் பிரித்துப் பார்க்காமல் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். சட்டப் பேரவையில் நல்ல தீர்மானத்தை வடிவமைத்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
டி.சுதர்சனம் (காங்கிரஸ்): இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாட்டுப் பிரச்னை. அதை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமே எங்கள் ஆதரவு. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிக்கும் இயக்கங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): இலங்கைப் பிரச்னை தொடர்பாக கடந்த காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எதுவுமே நடைமுறைக்கு வராத நிலையில், தொடர்ந்து அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இங்குள்ளவர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து அந்தப் பிரச்னையை திசை திருப்பி விடக் கூடாது. லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு அகதிகளாக வாழும் சூழல் உள்ளது. எனவே, மத்திய அரசை தொடர்பு கொண்டு இலங்கையில் போரை நிறுத்த வற்புறுத்த வேண்டும்.
அவரவர்கள் அவர்களுக்குப் பிடித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து
மேலும் தொடர்ந்து ஒன்றாகப் புது டில்லிக்கு அழுத்தம் கொடுக்கச் செய்வது மிகவும் அவசியம்.
தமிழர்களுக்கு எதிராகச் செயல் படுவோரை இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.