அரசியல் ரீதியான உரிமைகளை, அமைதிவழிகளில் முடியுமானவரை கேட்டபிறகுதான் ஆயுதப்போராட்டமே ஆரம்பமானது

கிருஷ்ணா அவர்களின் பின்னூட்டம் இங்கிருந்து http://podian.blogspot.com/2008/10/blog-post_25.html

நண்பர்களுக்கு!
விடுதலைப்புலிகள் பலவீனமடைந்த எந்தச் சந்தாப்பத்திலும் போர்நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை நீங்கள் அறியாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனையிறவுப் படைத்தள வீழ்ச்சி, “அக்கினிச்சுவாலை” என்ற சிங்கள இராணுவத்தின் நடவடிக்கையின் முறியடிப்பு, கட்டுநாயக்க வான்படைத்தளம் மீதான தாக்குதல் போன்ற அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புக்களால்தான் ஸ்ரீலங்கா அரசு, யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இறங்கியது. இறுதியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதும் சிங்கள அரசுதான். அதேபோல, இன்றைய நிலையிலும் விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளுமாறு எவரிடமும் கோரிக்கையை வைக்கவில்லை.

அடுத்ததாக, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் தவறானது. நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகள் என்பவர்கள் எங்கோ வானத்திலிருந்து வந்த வேற்றுக்கிரக வாசிகள் என்பதைப்போல இருக்கிறது. அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள். எங்களுக்காக தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள். வன்னியில் இருக்கும் மக்களில் பலர், அந்தப்போராளிகளின் பெற்றோராகவோ உடன் பிறந்தவர்களாகவோ இருக்கிறார்கள்.

“விடுதலைப் புலிகளை ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்” என்பதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. புலம்பெயாந்த நாடுகளில் மட்டுமல்ல, கொழும்பிலும் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் ஆதரவு மிகப்பெரியது. விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு இழப்பையும் தமிழனுடைய இழப்பாக கொண்டாடும் அளவுக்கு சிங்களவருடைய மனநிலை இருக்கிறது. நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டவன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டம். இங்கு எல்லா ஈழத்தமிழருமே போராட்டத்தின் பங்காளிகள். (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) அந்தவகையில், விடுதலைப் புலிகளின் போராட்டம் என்று கூறுவதே தவறு, இது ஈழத்தமிழரின் போராட்டம்.

இநதப் போராட்டப் பலம் இருப்பதால் மட்டுமே சிங்களவர்கள் பயப்படுகிறார்கள். அரசியல் ரீதியான உரிமைகளை, அமைதிவழிகளில் முடியுமானவரை கேட்டபிறகுதான் ஆயுதப்போராட்டமே ஆரம்பமானது. தமிழருக்கான அரசியல் உரிமைகளைச் சிங்களவன் தரமாட்டான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்காக ஒன்று
விடுதலைப் புலிகளைப் பல நாடுகளில் தடை செய்வதில் மும்முரமாக வேலைசெய்து விடுதலைப் புலிகளாலேயே கொல்லப்பட்ட, ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஈழத்தமிழர் போராட்டத்துக்கு எதிராக அவரைப்போல வேறு யாரும் செயற்பட்டதில்லை. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசின் பிரதமர் பதவி அவருக்கு வழங்கப்படும் என்கிற நிலை வந்தபோது, கோபங்கொண்டு சிங்களவர்கள் எதிர்த்ததால், அந்தப்பதவி வேறொருவருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம், கதிர்காமர் பிறப்பால் ஒரு தமிழன். சிங்கள அரசின் தீவிர விசுவாசியான லக்ஸ்மன் கதிர்காமருக்கே இந்தநிலை என்றால் மற்றவர் நிலை என்னவென்பதைச் சிந்தியுங்கள்...
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி என்றொரு மகாத்மா இல்லாமல், நேதாஜி முதன்மைப்படுத்தப்பட்டிருந்தால், அவருடைய போராட்டம் மீது இப்படியொரு பழி சுமத்தப்பட்டால் உங்கள் மனநிலை எப்படியிருக்குமோ அப்படித்தான் எங்களுக்கும் இருக்கும் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஈழத்தமிழருக்காக தமிழக உறவுகள் தொடர்ந்து போராடவேண்டும் என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் தலைவணங்குகிறோம்.
உங்களுக்கு இருக்கக்கூடிய ஆயிரம் பிரச்சனைகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக வீதியில் இறங்கியுள்ள உறவுகளுக்கு எம் நன்றிகள்.

கடந்தகாலங்களில் இரண்டு தரப்பிலும் எத்தனையோ தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதிலும் பயனில்லை. உலகில் யாருமே தவறு செய்யாதவர்களாக இருக்க முடியாது.

எங்கள் பார்வையில் இந்திய அரசு செய்யக்கூடியவை
1 யுத்தக்களத்துக்கு அப்பால் தமிழரின் வாழ்விடங்கள் மீது ஸ்ரீலங்கா வான்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதைத் தடுத்தல்.
2 வன்னியிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கான உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
3 கொழும்பிலும் ஏனய இடங்களிலும் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போதல், கப்பம் பெறப்படுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தல். (இந்த நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அதிபருடைய தம்பி கோத்தபாயவின் பங்கு அதிகமானது.)
4 வடக்கும் கிழக்கும் இணைந்தது தமிழர் தாயகம் என்பதை முடிந்தால் சிங்கள அரசை ஏற்கவைத்து, அந்தத் தாய் மண்ணில் தமிழர்கள் சுய கௌரவத்தோடு வாழும் வழியை உருவாக்குதல். ஆகக்குறைந்த்து தமிழ்நாடு போன்ற மாநில முறையாவது. (தமிழீழம் என்பது எங்கள் அதியுச்சக் கோரிக்கை. அதைத்தவிர வேறு எதுவுமே வேண்டாம் என்று ஈழத்தமிழர் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனாலும் சுயநிர்ணயம் என்பது அடிப்படை)

முதல் மூன்று விடயங்களும் அவசரமானவை. நான்காவது விடயம் இந்தியாவால் சாத்தியப்படுமா என்பது மத்திய அரசின் வலிமையைப் பொறுத்தது. இவற்றுக்கான அழுத்தங்கள் எந்த வடிவில் தமிழகத்திலிருந்து கிடைத்தாலும் அது போற்றுதலுக்குரியது.

குறிப்பு –
ஈழத்தமிழர்களில் ஒருவனாக இந்தப் பதிலைத் தருகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணத்தோடு இவற்றை எழுதவில்லை. அடிப்படையில் தமிழக ஊடகங்கள் சரியான தகவல்களைத் தரவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல ஈழம்சார் ஊடகங்களும் தமிழகத்தின் உண்மை நிலைப்பாட்டை எங்களுக்குச் சொல்வதில்லை.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails