கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு: தா.பாண்டியன்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த நம் தரப்பில் சொல்லப்பட்ட எந்த கருத்தையும் இலங்கை ஏற்கவில்லை.

இதற்கு தீர்வு காண நேரு, இந்திரா, சாஸ்திரி, ராஜீவ் காலங்களில் போடப் பட்ட ஒப்பந்தங்களையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே, இம்முறை இந்த பிரச்சனைக்கு இலங்கை அரசு தான் தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும். அதனை ஏற்பதா? இல்லையா? என்பதை பிறகு பரிசீலித்து முடிவு செய்து கொள்ளலாம்.

முதலில் அங்கு நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களையும், மருந்து பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.

இதில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி எடுத்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசில் திமுக பங்கேற்பதால் அதற்காகவாவது முதல்வரின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையும் நமக்கு பக்கபலமாகவே உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இலங்கை தமிழர் பிரச்சனையில் பிரதமர் தலையிட கோரி தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் அவர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails