பிரான்ஸ் தேர்தல் பெருவெற்றி ‘தமிழீழமே” தமிழ் மக்களின் முடிவு பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிப்பு

பிரான்சில் கடந்த 12ம் 13ம் திகதிகளில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் வலியுறுத்தும் வாக்கெடுப்பில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. வாக்களித்தவர்களில் 99 வீதமானவர்கள் தமிழீழமே தமிழ் மக்களின் ஒரே முடிவு என்பதை தங்கள் வாக்குகளின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று மதியம் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் செயலர் செல்வி சாளினி தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், நேற்றைய தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் தற்போது வெளியாகியுள்ள பரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அந்த வகையில் பரிசின் புறநகர் பகுதியான லா கூர்நெவ் வாக்குச் சாவடியிலேயே மிக அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு 7768 பேர் வாக்களித்துள்ளனர். அத்துடன், 93வது மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு 13306 வாக்களித்துள்ளனர்.இதேவேளை, பரிசில் 8475 வாக்களார்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இப்பகுதிகளில் 31,148 வாக்களார்கள் வாக்களித்துள்ளனர். இவர்களில் 30,936 பேர் தமிழீழமே தங்கள் முடிவென்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 43 பேர் மட்டுமே தமிழீழம் வேண்டாம் என்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.அவர்களில் சிலர் தவறுதலாகவும், தெரியாமலும் இல்லை என்று வாக்கைப் பதிவு செய்துவிட்டதாகவும், பின்னர் தங்கள் தவறினைத் தெரிவித்து மீண்டும் வாக்குப் பதிவுக்கு அனுமதிக்குமாறு கோரியபோதும், சட்டவிதிமுறைகளுக்கு அமைய அவர்களின் மீள்வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாக வாக்களிக்கப்பட்டிருந்துள்ளது. இதேவேளை, இன்றைய மாநாட்டில் கலந்துகொண்ட பிரெஞ்சு பிரமுகர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை அங்கு முன்வைத்திருந்தனர். கிடைத்திருக்கும் மக்களின் இந்த ஆதரவு வாக்கானது, தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளை இங்கு மேலும் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லவும், தங்கள் விடுதலையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தவும் இது உதவும் எனவும் நம்பிக்கையை வெளியிட்டனர்.அத்துடன், இங்கு கலந்துகொண்டிருந்த பிரெஞ்சு ஊடகவியலாளர் ஒருவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளை மேலும் பல இடங்களுக்கு கொண்டுசெல்வதற்கு வசதியாக ஏனைய ஊடக வியலாளர்களுடனான தொடர்புகளை தன்னால் ஏற்படுத்தித்தர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், தமிழீழ மக்கள் பேரவை தொடர்ந்து திறம்படச் செயற்படுவதற்கான நிதி ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளையும் தன்னால் ஏற்படுத்தித்தர முடியும் என்று தெரிவித்திருந்தார்.இதேவேளை, பிரான்சின் பிற மாநிலங்களின் வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை. தபால் மூலமான வாக்குகளும் இதுவரை கணக்கிடப்படவில்லை. அவை எண்ணப்படும்போது 35 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், விடுதலைப் புலிகளே தமிழீழத்தை கோருகின்றனர் என்ற சிறீலங்காவினதும், சில சர்வதேச நாடுகளினதும் பொய்ப் பரப்புரையை இந்த வாக்களிப்பு பொய்யாக்கியுள்ளது.

தமிழ் மக்களின் முடிந்த முடிவே தமிழீழம் என்பதை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் உறுதியாக்கியுள்ளனர். இந்த உறுதியை மேலும் வலுப்படுத்த ஏனைய ஐரோப்பிய மற்றும் கனடா, அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களும் தயாராகி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-
 சம்பத்
"மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் எங்கள்  தமிழ்மண் குளிக்கும்"....

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails