காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள், வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்: சீமான் விளக்கம்





கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார்.
ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகி விட்டது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.


ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் அளித்த பேட்டியின் விபரம்...

வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண்டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ஈழமுரசு என்னை அழைத்திருந்தது.

இதற்கிடையில் 25ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை.

தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன. நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம். உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்! என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.

இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.

இந்திராவைக் கொன்றது நியாயமா?

மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு பொலிஸ். இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்? எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.

பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா? என்றார். உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது.

உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, இவர் உன்னோட பிரதரா? எனக் கேட்டார். ஆமாம்… தமிழ் இரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்! எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார்.

எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறையிலேயே சிக்கவைத்து விடவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.

பிரபாகரன் இருப்பதால்தான் எழுச்சி நிலவுகிறது...

வெளிநாடு வாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது.

வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.

பிரபாகரனும், அவர் தலைமையிலான தேசிய இராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும்- அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்?

தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.

என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோவனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்று வரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை.

இளங்கோவனுக்காக மட்டும் கிளம்பிய பொலிஸ்...

தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் பொலிஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக பொலிஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது பொலிஸ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும்.

சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங்கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார்.

போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள், வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள் என்றார் சீமான்.


--
www.naamtamilar.org

Posted in Labels: |

2 comments:

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) Says:

    //வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்//

    வேங்கைக்கும் புலிக்கும் உள்ள வேறுபாடு என்ன? விளக்கவும்.

  2. Mike Says:

    வருகைக்கு நன்றி யோகன்,

    வேங்கை என்பது சிறுத்தை புலி. புலி போல் இருப்பது. தமிழின விடுதலைக்கு தமிழ் புலவனாகவோ சிறந்த எழுத்தாளராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை நண்பரே.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails