தமிழ் மக்களை காப்பற்றப்போவது யார்?
Posted On Thursday, 5 February 2009 at at 12:41 by Mikeதமிழினப் படுகொலை மிக மோசமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை என்பதுடன், படுகொலைக்கு ஆதரவுக் கரங்களே அதிகம் என்ற துணிவுடன் வெளிப்படையாக இந்தப் படுகொலையை சிறீலங்கா அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது.
போரியல் சட்டவிதிகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டாலும், பொது மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டாலும்
அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தான் நினைத்ததைச் செய்து முடிக்கும் தைரியம் சிங்கள அரசுக்கு இருக்கின்றது. காரணம் சர்வதேசம். விடுதலைப் புலிகள் மீது ஒரு தலைப்பட்சமாகதத் தடைகளை விதித்து சிறீலங்காவின் இந்தப் படுகொலைக்கு காரணமானவர்களே இந்த சர்வதேச நாடுகள்தான்.
சில தனி நபர்களின் பழிவாங்கல்களுக்காக சர்வதேசம் முண்டுகொடுத்து நிற்கின்றது என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த இனப்படுகொலையைத் தடுப்பதற்கு கொஞ்சம்கூட முனையாத உலகம், மக்களைத் தடுத்து வைத்து இந்த இன அழிவுக்கு காரணம் புலிகளே என்றும் குற்றம்சாட்டிவிட முனைந்து நிற்கின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தும் சர்வதேச சமூகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ, அந்த மக்கள் ஏன் அந்தப் பகுதிக்குள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போனார்கள், ஏன் இன்னும் இன்னும் போய்க்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு விடைதேட முனையாமல், சிங்கள அரசு கூறும் காரணங்களை தாங்கிக்கொண்டு ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முனைவதே சிறீலங்கா இந்தப் படுகொலையை இத்தனை வீச்சுடன் மேற்கொள்வதற்கு காரணம்.
அத்துடன், நான்கு இலட்சம் வரையான மக்கள் அங்கு சிக்கியுள்ளதாக கூறப்படும்போது, இடம்பெறும் படுகொலையை மறைப்பதற்கான முன்னேற்பாடாக இப்போதே அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதுபோன்று பிரச்சாரங்களை சிறீலங்கா மேற்கொண்டு வருகின்றது. இதனை, சர்வதேசமும் நம்பத்தலைப்பட்டிருக்கின்றது.
உணவையும், மருந்தினையும் தடுத்து நிறுத்தி பெரும் பட்டினிச் சாவையும், அவலச்சாவையும் அந்த மக்கள் மீது சிறீலங்கா சுமத்தியுள்ள போதும் அதற்கான ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கையையும் இன்று வரை மேற்கொள்ள முடியாமல் மௌனம் காக்கின்றது உலகம்.
விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரும் மனிதாபிமானிகள், சிறுவர்கள் கொல்லப்படுவது குறித்தோ அல்லது, இந்தக் கொலைத் தாக்குதலில் அவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாவது குறித்தோ ஏன் மனோ ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுவது குறித்தோ எந்தவித அக்கறையும் காட்டிக்கொள்ளவில்லை.
வன்னிக்குள் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்குமாறு கோரும் உலகம், வன்னியில் இருந்து சிறீலங்காவின் பகுதிக்குள் போன மக்களுக்கு நேர்ந்த அவலங்களை எத்தனை தூரம் தெரிந்துகொண்டுள்ளது.
நூற்றுக் கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் பலர் படையினரின் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவரும் அதேவேளை, எங்கும் நடமாட முடியாதபடி சிறைச்சாலை போன்று தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எவ்வித காரணம் கொண்டும் முகாம்களை விட்டு வெளியேறவோ அல்லது முகாம்களில் இருப்பவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன், காயமடைந்து கொண்டு செல்லப்பட்டவர்களும், சிகிச்சையை முடிவதற்கிடையில் இந்த முகாம்களில் கொண்டுவந்து அடைக்கப்படுகின்றார்கள்.
இந்த அழிவில் இருந்து இருந்து விடுதலைப் புலிகள் மீண்டெழுவார்கள். ஆனால், இப்போது காப்பற்றவேண்டியது அங்குள்ள மக்களே. உலகம் தட்டிக் கேட்கும், போரை நிறுத்தும், உதவிகள் செய்யும் என்று யாரும் நம்பிக்கை வைத்துவிடாதீர்கள். சமாதான காலமும் அதன் பின்னான சிறீலங்காவின் போரை உலகம் வழிமொழிந்ததையும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டால் இவ்வாறான சிந்தனைகள் எழாது.
இதுவரையில் உலகில் நடந்த அனைத்து இனப்படுகொலைகளுக்கும் உலகம் மௌன சாட்சியாகவே இருந்திருக்கின்றது. அல்லது அந்த இனப்படுகொலையின் மறைமுகக் கரங்களாகவே அவை இருந்துள்ளன. எனவே, உலகம் வரும் தமிழ் மக்களைக் காக்கும் என்று யாருமே எண்ண வேண்டாம். புலம்பெயர்ந்த தமிழ் மக்களால்தான் இப்போது அவர்களைக் காப்பாற்ற முடியும். எல்லோரும் வீதிக்கு இறங்குவோம். இந்தப்போருக்கு முண்டுகொடுத்து நிற்கும் நாடுகளுக்கு எங்கள் நியாயத்தை எடுத்துச் சொல்லுவோம். காலம் தாழ்த்தாது இந்தப் பணியை இன்றே செய்யத் தொடங்குவோம்.
அதுதான் அந்த மக்களைக் காப்பதற்கு ஒரேவழி
ஆசிரியர் தலையங்கம்
ஈழமுரசு (06.02.2009)
நன்றி:தமிழ் கதிர்
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2228:2009-02-05-19-41-34&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54