கருணாநிதியின் முகத்தில் கரியை பூசிய, ஒரு நாள் போராட்டம்
Posted On Wednesday, 4 February 2009 at at 12:22 by Mikeஇவரின் மிரட்டல் எல்லாம் செல்லா காசு ஆக்கப்பட்டது. எதிர்கட்சியோ, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு கட்சி இல்லாமல் இந்த போராட்டம் வெற்றி பெற தமிழக மக்களினது தமிழுணர்வே காரணமாகும். தமிழனை மதிக்காத கருணாநிதியும், காங்கிரஸும் விரைவில் அதன் பலனை தேர்தலில் அனுபவிக்க போகிறார்கள்.
ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி பெற்றிருக்கின்றது. காவல்துறையினரின் அச்றுத்தலைப் பொருட்படுத்தாமல் சென்னை தொடக்கம் தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர் வரை அனைத்துப் பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தன.
பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் அவற்றில் பயணிகளின் கூட்டம் மிக மிகக் குறைவாகவே இருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
விடுதலைச் சிறுத்தைகள்
தமிழர் தேசிய இயக்கம்
ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பாரதிய ஜனதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உட்பட ஏராளமான அரசியல் கட்சிகளும், வணிக, மாணவர் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
முழு அடைப்பு போராட்டம் சட்டத்திற்கு எதிரானது என்றும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோரும் கடைகளை அடைக்கக்கோருவோரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழகக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தன்னெழுச்சியாக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னையில் அதிக எண்ணிக்கையில் கடைகளும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ள தியாகராயர் நகர், பாரிமுனை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
மதுரை, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி உட்படத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் 90 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கடைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று விழுப்புரம் உள்ளிட்ட சில நகரங்களில் காவல்துறையினரும், தி.மு.க.வினரும் வலியுறுத்திய போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள வர்த்தகர்கள் மறுத்து விட்டனர்.
பல நகரங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மையும், சிறிலங்காவின் தேசியக்கொடியும் எரிக்கப்பட்டன.
முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்குடன் அரச பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. ஆனால், அவற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
எப்போதும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையில் மற்ற ஊர்திகள் ஓரளவு இயங்கின. மதுரை கோவை உட்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அரச பேருந்துகளைத் தவிர வேறு எந்த ஊர்திகளும் இயங்கவில்லை.
தனியார் பேருந்துகள் சிற்றுந்துகள் போன்றவையும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
பல இடங்களில் தொடருந்து மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல தொடருந்துகள் தாமதமாக இயங்கின.
மதுரை திருமங்கலம் அருகே தொடருந்து பாதையின் குறுக்கே சரக்குந்து சக்கரம் தீயிட்டு எரிக்கப்பட்டதால் அந்த வழியே வந்த தொடருந்து நிறுத்தப்பட்டது.
அரச பணியாளர்களில் பெரும்பாலாலோனோர் பணிக்குச் செல்லவில்லை. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.
வழக்குரைஞர்கள், மாணவர்கள் போன்றோரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்தனர்.
மருத்துவர்கள் பணிக்கு சென்றிருந்த போதிலும், தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புப் பட்டி அணிந்து பணிகளை மேற்கொண்டனர்.
ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், சில கடைகள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால், முழு அடைப்பு அமைதியாக நடைபெற்று முடிந்ததாகத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.
போராட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டதாக பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதிகளவாக திருவண்ணாமலையில் 5 ஆயிரத்து 200 பேரும், இராணிப்பேட்டையில் 2 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி : புதினம்