அமெரிக்க மத தலைவர்கள்:அமெரிக்கா போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும்
Posted On Wednesday, 18 February 2009 at at 00:42 by Mikeஇலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் கிலறி கிளிண்டன் முயற்சிகளை மேற்கொள்வதுடன், தேவை ஏற்பட்டால் அமெரிக்கா அழுத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மதத் தலைவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வன்னியில் தமிழ் மக்கள் துன்பங்களை எதிர்கொண்டு வருவது கவலை தருகின்றது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான அழுத்தங்களை அமெரிக்க அரசு சிறிலங்கா அரசுக்கு கொடுக்க வேண்டும்.
வன்னியில் வாழும் மக்களுக்கு உதவும் பொருட்டு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்கள் அங்கு செல்வதற்கு ஏதுவாக சிறிலங்கா அரசு உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளவேண்டும். அதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தால் சிறிலங்கா அரசின் மீதான தடைகள் குறித்து அமெரிக்கா கருத்தில் எடுக்க வேண்டும்.
அரசு ஊடகத்தடையை ஏற்படுத்தியுள்ளதனால் வன்னியில் உள்ள நிலமைகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிய முடியாது உள்ளது. அங்கு எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தொடர்பாகவும் நாம் அறிய முடியாது உள்ளது. அங்கு சுயாதீனமான கண்காணிப்பாளர்கள் இயங்குவதனை அரசு தடை செய்ததுள்ளதுடன், வன்முறைகள் மூலம் ஊடகங்களையும் முடக்கியுள்ளது.
வன்னியில் மருத்துவமனைகள் மீதும், பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி செல்லும் மக்களின் மீதும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்த்தப்படுவதாகவும், உணவு, மருந்து உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு பற்றாக்குறை தோன்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் கைது செய்யப்பட்ட எதிரிகளை போலவே நடத்தப்படுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதமானது சிறிலங்காவில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் மரியம் யாங், சிறிலங்காவில் உள்ள அனைத்துலக செயற்குழுவின் பணிப்பாளர் வண. கலாநிதி போல் எஃப் ஜான், அமெரிக்காவின் தேசிய தேவாலயங்களின் சபை பொது செயலாளர் வண. கலாநிதி மைக்கேல் கின்னமோன் ஆகியோரினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
http://puthinam.com/full.php?2b4dTT44b3bM5CW34d33SoI3b03A7DGe4d26UrAce0df2OvCce0dl2gt2cc0Qh0g3e