2,000 கிலோ மீற்றர் நீளத்துக்கு மனித சங்கிலி: 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில்

ஈழத்தில் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீற்றர் நீளத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக தெற்கே கன்னியாகுமரி வரை கிட்டத்தட்ட 717 கிலோ மீற்றர் தொலைவுக்கு முதல் அணிவகுப்பு நடைபெற்றது.

மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரை 352 கிலோ மீற்றர் தொலைவுக்கு 2 ஆவது மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது.
3 ஆவது அணிவகுப்பு புதுச்சேரியில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், கடலாடி வழியாக தூத்துக்குடி வரை நடைபெற்றது.

கிட்டத்தட்ட 500 கிலோ மீற்றர் நீளத்திற்கு இந்த மனிதச் சங்கிலி நீண்டிருந்தது. இது தவிர மற்ற பகுதிகளில் ஏறக்குறைய 500 கிலோ மீற்றர் தொலைவுக்கு மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டிருந்தது.

தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, அக்கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் கண்ணப்பன், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, "புதிய பார்வை" ஆசிரியர் ம.நடராசன், திண்டிவனம் இராமமூர்த்தி உள்ளிட்டோர் தாம்பரத்தில் கலந்து கொண்டனர்.

கோவை முதல் நாகை வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் கலந்து கொண்டார். அவருடன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
தாம்பரத்தில் தொடங்கிய மனிதச் சங்கிலி கன்னியாகுமரி வரை இடைவிடாமல் நீண்டிருந்தது. ஒரு சில இடங்களில் இடைவெளி இருப்பதை பார்த்ததும் அந்தந்த பகுதி மக்களும் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்வோரும் தாங்களாக முன்வந்து மனிதச் சங்கிலியில் நின்றிருந்தவர்களுடன் கரம் கோர்த்தனர். இதனால் 3 பாதைகளிலும் அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலி இடைவிடாமல் நீடித்தது.

மொத்தம் 30 இலட்சம் பேர் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

அனைத்து ஊர்களிலும் பாடசாலை, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

பல இடங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் தங்களின் பெற்றோருடன் கைகோர்த்து நின்றனர்.

மனிதச் சங்கிலி அறிவிக்கப்படாத தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் தனித்தனியாக மனிதச் சங்கிலி நடத்தினர்.
தாம்பரத்தில் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர்கள்

"இந்திய அரசே இலங்கைப் போரை தடுத்து நிறுத்து''

"துணை போகாதே துணை போகாதே சிறிலங்கா அரசுக்குத் துணை போகாதே''

"உதவி செய்யாதே உதவி செய்யாதே சிங்கள அரசுக்கு உதவி செய்யாதே''

"இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு''

என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட நெடுமாறன் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போது,

இலங்கைத் தமிழருக்கு ஆதரவான தமிழ் மக்களின் இந்த உணர்வைப் புரிந்து கொண்டு உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் இந்த அறப்போராட்டம் எரிமலையாக வெடிக்கும் முன்பே மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உரையாற்றும் போது,

இலங்கையைச் சேர்ந்த 10 லட்சம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருவதற்கு சிறிலங்கா அரசு தான் காரணம். மத்திய அரசு உடனடியாக தலையிட்டுப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். திமுக அரசு அதன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது. நாங்கள் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற போராடுகிறோம் என்றார்.

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இது மத்திய அரசின் காதுகளுக்கு எட்ட வேண்டும். அங்கு உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி வலியுறுத்தினார்.

திருச்சியில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ,

யார் சொன்னாலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மாட்டோம் என்று கூறும் ராஜபக்சவின் குரல் வளையை நெரிக்க அனைத்துலக சமுதாயம் முயற்சிக்க வேண்டும்.

இலங்கைப் படுகொலைக்கு இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்தார்.

இலங்கையில் போரை நிறுத்தக்கோரி, அடுத்த கட்டமாக நாளை கோவையிலும் எதிர்வரும் 24 ஆம் நாள் மதுரையிலும் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து வேலூர், சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய நகரங்களிலும் இத்தகைய பேரணி நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருக்கின்றது.

thanks

http://puthinam.com/full.php?2b1VoKe0dycYe0ecAA4o3b4M6Dh4d2f1e3cc2AmS3d434OO3a030Mt3e

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails