ஓயாமல் கிளம்புமா அலை? - ஆனந்த விகடன்

'முல்லைத் தீவில் பிரபாகரன் பதுங்கியிருக்கிறார். அவரைப் பிடித்துவிடுவோம்' என ராணுவத் தரப்பில் கசிந்த செய்தியை, உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்கள் கவலையோடும் கண்ணீரோடும் கேட்டுக்கொண்டு இருந்தபோது வந்தது செய்தி!

கடந்த 10 ஆண்டுகளாக புலிகளின் பூரணக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது கிளிநொச்சி. 1990-களில் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துக்குப் பிறகு, புலிகளின் கைகளுக்கு வந்தது கிளிநொச்சி. அதன் பிறகு, அவ்வப்போது அரசுப் படைகள் நகருக்குள் முன்னேறுவதும், பின்வாங்கி ஓடுவதுமாக இருந்தன. 'கிளிநொச்சியைக் கைப்பற்றுவதுதான் முதல் சவால்' எனப் பல வியூகங்களை வகுத்துக்கொண்டே இருந்த சிங்கள ராணுவம், இப்போது தங்கள் 'பேராசை'யை நிறைவேற்றிவிட்டது.

கிளிநொச்சிக்கு வடக்கே உள்ள ஆனையிறவுப் பெருந்தளத்தில் நிலைகொண்டபடி, அவ்வப்போது கிளிநொச்சி வரை வந்து சென்றது ராணுவம். 1998-ல் நகரின் ஒரு பாதி புலிகளிடமும் மறுபாதி அரசுப் படைகளிடமும் இருந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 27 அதிகாலை 1.20 மணியளவில், கிளிநொச்சிப் படைத் தளம் மீது அதிரடியாகப் பாய்ந்தார்கள் புலிகள். 'ஓயாத அலைகள் 2' என்ற பெயரில் அமைந்த அந்தத் தாக்குதல் மூலம் - 40 மணி நேரம் 'களச்சமராடி' கிளிநொச்சியைப் பிடித்தனர்.

சுமார் 1,250 சிங்களப் படையினரைப் பலியெடுத்து, 400 புலிகள் வரை பலிகொடுத்து, 1998 அக்டோபரில் கிளிநொச்சி மீண்டும் புலிகள் வசமானது. 10 ஆண்டுகளின் பின்னர், இப்போது கடுமையான சமருக்குப் பிறகு, அரசுப் படைகளிடம் கிளிநொச்சியைப் பறிகொடுத்திருக்கின்றனர் புலிகள். இந்த நகருக்கு எந்த ராணுவ முக்கியத்துவமும் இல்லை. ஆனால், அரசியல் முக்கியத்துவம் அதிகம். கடந்த 10 ஆண்டுகளாக, வன்னிப் பெரு நிலப்பரப்பில், புலிகள் முன்னெடுத்து வரும் தனி அரசின் தலைநகரம் கிளிநொச்சி.


சமாதான முயற்சிகளை ஒட்டிய அமைதிப் பேச்சுகள், ஏனைய விடயங்கள் சம்பந்தமாக, சர்வதேசப் பிரமுகர்களைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், ஆன்டன் பாலசிங்கமும், அரசியல் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனும் அடிக்கடி சந்தித்துப் பேசி, ஆலோசனை நடத்திய சரித்திரம் கிளிநொச்சிக்கு உண்டு. இதற்காக ஹெலிகாப்டர்களும், வாகனங்களும் கொழும்பிலிருந்து அடிக்கடி வந்துபோகிற இடம் இது. அதனாலேயே புலிகளின் அரசியல் தலைநகரமாக இருந்தது இது. கிளிநொச்சியை இழந்தது புலிகளுக்கு முக்கியமான பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், புலிகளுக்கு இது பெரிய ராணுவத் தோல்வியல்ல. கிளிநொச்சியைத் தக்கவைப்பதற்காகப் புலிகள் கடுமையாகப் போராடினார்கள். ஆனால், ஒருகட்டத்தில் விளைவுகளை யூகித்து பெரிய இழப்புகளின்றி தந்திரமாகப் பின்வாங்கினார்கள். ஆளணி, ஆயுத பலத்தைத் தக்கவைத்துக்கொண்டு, பின்வாங்கிய புலிகள் அதிக தூரம் விலகிச் சென்றுவிடவில்லை. கிளிநொச்சி நகரத்தை ஊடறுத்துச் செல்லும் 'ஏ-9' என்கிற, கண்டி வீதியின் கிழக்கே, சில மைல் தொலைவில் அடிபட்ட புலியாகச் சீறிக்கொண்டு இருக்கிறார்கள் என்கின்றன களத்திலிருந்து வரும் தகவல்கள்.

''கிளிநொச்சி நகரத்தைத் திடீரென விட்டு விலகி, நகரில் இருந்து சில மைல் தொலைவுக்குப் பின்வாங்கி, புலிகள் வலைவிரித்திருக்கின்றனர். தமக்குப் பலமுனையிலிருந்து அழுத்தங்களைக் கொடுக்க நினைக்கும் சிங்களப் படையினரை, வில்லங்கமான களமுனைக்கு இழுத்து வீழ்த்த புலிகள் எத்தனிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்கிறார் ராணுவ விமர்சகர் ஒருவர்.

தமக்குச் சாதகமான களநிலை வரும் வரை, இப்படித் திடீரெனப் பின்வாங்கி எதிரிக்கு இடமளிப்பதும், எதிரிகள் நினைக்காத வேகத்துடன் அதிரடித் தாக்குதல்களை நடத்தி, இழந்த பிரதேசங்களை வாரி எடுப்பதுமே புலிகளின் கடந்த காலச் சரித்திரம். ஆனால், இப்போது புலிகளின் பின்வாங்கல் ஒரு வருடத்தையும் தாண்டி நீள்கிறது. தொடர்ந்து பல பிரதேசங்களை விட்டு விலகி வருகிறார்கள். அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசம் குறுகி வருகிறது. அரசுப் படைகளின் தாக்குதல் வெற்றி தொடர்கிறது. அதனால், 'புலிகளின் கதை முடிந்துவிட்டதோ' என்ற சந்தேகம் பலருக்கும் வந்துவிட்டது. இலங்கை அரசுக்கோ கேட்கவே வேண்டாம்.

இங்குள்ள தலைவர்களும், படைத் தளபதிகளும் இந்த வெற்றியை அடுத்து வெளியிடும் மமதை அறிவிப்புகள், 'புலிகளின் காலம் எண்ணப்படுகிறது' என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிளிநொச்சி வெற்றியை அடுத்து கொழும்பிலும், தென்னிலங்கையிலும் சிங்களவர்கள் பலர் பட்டாசு கொளுத்தி, ஆரவாரம் செய்த விதம் அவர்களது இந்த நோக்கத்தை எடுத்துக் காட்டியது. ''கிளிநொச்சியில் இதுவரை புலிகள் தமது தலைமையகமாகப் பயன்படுத்திய இடத்தை, எமது கட்டுப்பாட்டு மையமாக வைத்து, அங்கிருந்துதான் புலிகளுக்கு எதிரான எதிர்காலத் தாக்குதல்களை வழி நடத்த உள்ளோம்'' என்கிறார் கிளிநொச்சியைக் கைப்பற்றிய இலங்கை ராணுவ டிவிஷனின் தளபதி மேஜர் ஜகத் டயஸ்.

இப்போது புலிகள் இருப்பது 'செய் அல்லது செத்து மடி!' என்ற இக்கட்டில். நிலைமையை உற்று நோக்கும் ஈழ அரசியல் விமர்சகர் ஒருவர் இப்படிச் சொல்கிறார், ''பல வியூகங்களை வகுக்கும் சிங்கள ராணுவம், பிற நாடுகளின் உதவிகள் என அனைத்தையும் தாண்டி, புலிகளின் ஆவேசம் இழப்பை வென்றெடுக்கும். ஏனெனில், அவர்களின் வேகமும் கோபமும் விடுதலைக்கானது. அதை ஒழிக்க ஒருவராலும் முடியாது. உலகத் தமிழர்களே... கவலைப்படாமல் காத்திருங்கள். புலிகள் அனுப்புவார்கள், நல்ல செய்தியை!''

நன்றி: ஆனந்த விகடன், Jan 14, 2009

Posted in |

1 comments:

  1. Namakkal Shibi Says:

    காத்துக்கொண்டுதானிருக்கிறோம் அந்த நல்ல செய்திக்காக!

    எம் ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் ஒளி பிறக்கட்டும்! விரைவில் அவர்கள் விடியலைக் காண்பார்கள்!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails