கோடிக்கணக்கான தமிழர்களைவிட சிங்கள இனப்படுகொலை வெறியர்கள்தான் முக்கியமா?

சென்னை, ஜன. 5- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கோடிக்கணக்கான தமிழ் மக்களை விட கொழும்பில் உள்ள போர் வெறியர்கள்தான் - இனப்படுகொலை வெறியர்கள் தான் முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

இலங்கையில் இன மோதல் இதுவரை கண்டிராத அளவுக்குத் தீவிரமடைந்திருப்பது பற்றியும், தமிழக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், 2008 டிசம்பர் 4ஆம் தேதி டில்லியில் உங்களைச் சந்தித்துப் பேசியது தொடர்பானது இந்தக் கடிதம். அந்தச் சந்திப்பின்போது இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ற தலைப்பில் அமைந்த அறிக்கை ஒன்றை நான் உங்களிடம் அளித்தேன். உடனடி ஆய்வுக்காக அந்த அறிக்கையின் பிரதி இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

அதன்பின் ஒரு மாதம் கடந்துவிட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய அரசு எதையும் செய்யவில்லை. பொதுவாக முக்கியமான விஷயங்கள் குறித்து, குறிப்பாக மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து நீங்களும், வெளியுறவுத் துறை அமைச்சரும் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்ற போதிலும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் ஆய்தப் படைகள் நடத்தி வரும் கொடுமைகளையும், அதன் விளைவாகத் தமிழக முதல்வர் வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளபடி ஒவ்வொரு நொடியும் ஒரு தமிழன் உயிரிழப்பதை யும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த 15 லட்சம் மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இடர் நீக்க உதவிப் பொருள்களை வழங்கும் பன்னாட்டு நன்கொடையாளர்களின் கருணையை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு இலங்கை அரசு வெளிப்படையாகவே தடைகள் ஏற்படுத்தி வருகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பும், வாழ்க்கை உறுதியும் தேடி தங்கள் தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சம் இலங்கைத் தமிழர்கள் ஏதிலிகளாக உள்ளனர். மணிக்கு மணி நிலைமை மோசமடைந்து வருகிறது.

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாற்றப்பட்டு வருகிறது. ஏதிலிகளுக்கான அய்.நா. ஆணையரகத்தின் ஆதரவில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட பன்னாட்டு வல்லுனர் குழு இலங்கையில் தொடர்ந்து செயல்பட மறுத்துவிட்டது. மனித உரிமை நிலைமையை மேம்படுத்தத் தெரிவிக்கப்பட்ட எந்தக் கருத்துரையையும் இலங்கை அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதே அதற்குக் காரணம். தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நிகழும் மோசமான பகுதிகளில் ஒன்றாக வரிசைப்படுத்தப் பட்டுள்ள இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து ஏறக்குறைய அனைத்து பன்னாட்டு மனித உரிமைக் குழுக்களுமே உலக அளவில் எச்சரிக்கைக் குரல் எழுப்பி வருகின்றன.

இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய உடனடி ஆபத்து நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையை, நியூயார்க்கில் இருந்து செயல்படும் இனப்படுகொலைத் தடுப்புத் திட்ட அமைப்பின் அறிக்கையில் சேர்த்து இருப்பது, இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியாகியிருக்கும் கடும் கண்டனமாகும். உடனடி ஆபத்து நாடுகளின் பட்டியலில், இப்போது இனப்படுகொலை மோதலை அனுபவித்துக் கொண்டிருக்கும் சூடானின் தார்பூர் பகுதி, காங்கோ ஆகியவையும் ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மார், பாகிஸ்தான், சோமாலியா, இலங்கை ஆகியவையும் உள்ளிட்ட 8 நாடுகள், பகுதிகள் உள்ளன. உடனடி ஆபத்துக்குரிய நாடுகளுக்கான அளவுகோல்கள் என வல்லுநர்கள் தெரிவித்துள்ள 5 அளவுகோல்கள் ஒவ்வொன்றும் இந்த நாடுகளுக்குப் பொருந்துகின்றன. இவற்றுள் இலங்கையைத் தவிர மற்ற நாடுகளும், பகுதிகளும் பல்வேறு வகையில் அய்.நா.வின் கண்டனங்களுக்கும், தடைகளுக்கும் உள்ளாகி இருக்கின்றன. நிலைமை மோசமாக இருந்த போதிலும், இலங்கை அரசு கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு செயல்படாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

கடலுக்கு அப்பால், தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதை, ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட இந்தியத் தமிழர்களின் கவுரவத்தையும் சுயமரியாதையையும், கொழும்பில் உள்ள அடக்கு முறை அரசின் முகவர்களுடன் கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டில்லியில் உள்ள தப்பெண்ணம் படைத்த சில அதிகாரிகள் இனியும் காலில் போட்டு நசுக்க முடியாது. டில்லியிடம் சலுகைகளுக்காக எப்போதும் கெஞ்சிப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு அவர்களைக் குறுக்கிவிட முடியாது.

இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமரைத் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசிய 2, 3 நாட்களுக்குள், இலங்கையின் போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகா திமிர்த்தனமாகப் பேசினார். போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை ஒரு போதும் இந்திய அரசு வலியுறுத்தாது. தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள் கூறுவதையும் அது செவிமடுக்காது என்றார். முன்னதாக, நடுவண் அரசு செயல்பட வலியுறுத்திக் கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரஸ் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலாளர் இராவ்னி தாக்கூர் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று டில்லியில் இருந்து கொழும்புக்குச் சென்றது. இந்தியாவின் நடுவண் அரசு, தமிழக அரசியல் வாதிகள் கூறுவதைச் செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கையை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே கமுக்க உடன்பாடு இல்லை என்றால் இவை நடந்திருக்காது.

இலங்கை தொடர்பாக இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருக்கிறது என்று பிரதமரான நீங்களே கூறியிருக்கிறீர்கள்.

எனினும், இலங்கை அரசு வெறித்தனமாகப் பின்பற்றி வரும் போர்ப்படைத் தீர்வுக்கு முடிவு கட்டுவதற்கும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளபடி நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக அய்.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாகச் செய்திருக்கலாம். இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய உடனடி ஆபத்து நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மைக்குப் பிறகும், இதற்கான முயற்சி கூட செய்யப்படவில்லை. டில்லியின் அக்கறையற்ற,உணர்ச்சியற்ற அணுகு முறையையே இது காட்டுகிறது. ஏனெனில், இனப் படுகொலை வெறியாட்டத்தால் பாதிக்கப்படுவோர், உதவிக்கும் குரல் கொடுப்பதற்கும் வழியற்ற தமிழர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கவுரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதை இறுதி விடையாக எடுத்துக் கொள்ளலாமா? காலம் கடப்பதற்க முன்பு எங்களுக்கு விடை தேவை. நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளளேன்.

இவ்வாறு மருத்துவர் இராமதாசு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி : விடுதலை
http://files.periyar.org.in/viduthalai/20090105/news15.html

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails