இலங்கை பிரச்சனையில் முறையிடுவது கடைசி முயற்சி: சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம்
Posted On Friday, 9 January 2009 at at 05:04 by Mikeமுல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோனியாகாந்தி) நான் அணுகி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கிக் கொல்லப்படுவது குறித்துத் தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நிலவும் அநீதியான நிலைமை குறித்துத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன.
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அவர் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தூதுக்குழுவைத் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று அழைத்துச் சென்றார்.
அமைதி முயற்சிகளைத் தொடங்குவதற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகத் தமிழகத் தூதுக்குழுவினரிடம் பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை என்பதையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி ஆறு கோடி தமிழ் மக்களும் மத்திய அரசை அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனினும், இலங்கைத் தமிழ் மக்களும், இந்தியத் தமிழ் மக்களும் நீங்கள்தான் தங்களின் பாதுகாவலர் என்று உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை நான் அணுகி இருக்கிறேன். மத்திய அரசை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
அதே தகுதியில், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்படத் தலையிட வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தச் சிக்கலை மிகுந்த மனிதநேயத்துடனும், அனுதாபத்துடனும் நீங்கள் அணுகுவீர்கள் என்றும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டுத் தருவீர்கள் என்றும் நான் உறுதியுடன் நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.
http://tamil.webdunia.com/