ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பதுங்கு குழிகளில் வாழ்க்கை
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்
உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே
வாய்த்த தலைவிதியா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்
எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!


உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!


நன்றி : http://www.keetru.com/literature/poems/vaseegaran.php

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails