தேசத்தின் அழிவில், சிம்மாசனம் தேடும் புத்திஜீவிகள்

மரம் அமைதியை நாடினாலும், காற்று விடுவதாயில்லை? என்று சீனத்தின் பெருந்தலைவர் மாவோ கூறியிருந்தார்.

தேசியத் தலைவர், இந்தியாவை நோக்கி நீட்டிய நட்புக் கரத்தினைத் தட்டிவிடும் வகையில், முன்னாள் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருத்துக் கூற ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் தென்னாசிய பிராந்திய நலனைவிட, தேசியத் தலைமை மீது கொண்ட பொறுப்புணர்வைத் தூக்கிப் பிடிப்பதிலேயே இவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு, விடுதலைப் புலிகள் தடை ஏற்படுத்தி விட்டதாக பழி சுமத்துகிறார் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன். எமது தேசியத் தலைமை மீது குற்றம் சாட்டும் அறிவுப் பெருந்தகை ஹரிஹரனிடம், பல கேள்விகளை நாம் முன்வைக்கலாம்.

இந்திய அனுசரணையோடு, சகல ஆயுதப் போராட்ட இயக்கங்களும், மிதவாதத் தலைமைகளும் திம்புவில் முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கையை, சிங்களம் நிராகரித்தது. அதில் கூறப்பட்ட ஒரு விடயத்தைக் கூட, இலங்கை - இந்திய ஒப்பந்தம் உள்ளடக்கவில்லை. சிங்களத்தின் பெருந் தேசிய இனவாத ஒற்றையாட்சித் தத்துவம், அதிகாரப் பகிர்வினை ஏற்றுக்கொள்ளாதென்பதை, இந்திய அறிவு ஜீவிகள் நன்கு புரிவார்கள். ஆகவே மாகாணசபை அதிகார முறைமை என்பது ஒற்றையாட்சிக்குள் செருகப்பட்ட நிர்வாகப் பரவலாக்கம் என்று குறிப்பிடலாம். தற்காலிக வடகிழக்கு இணைப்பினை, பெரிய சாதனையாகக் காட்ட இவர்கள் முயற்சிக்கிறார்கள். சிறீலங்காவின் ஒற்றையாட்சி சட்ட முறைமை, தற்காலிக இணைப்புக்களிற்கும் இடங்கொடுக்காதென்பதை, இருபது வருடம் கழித்து உயர் நீதிமன்றம் நிரூபித்துள்ளது.

ஒட்டாத உறவிற்கு, ஒட்டுவேலை செய்து, தமிழர்களின் அரசியல் அபிலாசை, ராஜீவ் - ஜே.ஆர் ஒப்பந்தமூடாக நிறைவேற்றப்பட்டதென இந்த முன்னாள் அமைதிப்படை பொறுப்பாளர் கூறுவது வேடிக்கையாகவுள்ளது. அடுத்ததாக, நிரூபிக்கப்படாத கொலைக் குற்றச்சாட்டுக்களை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி, தமிழ் மக்களிலிருந்து அந்நியமாக்க, இவர்கள் முன்வைக்கும் பரப்புரைகள் புரியக்கூடியது. இலட்சியத்தில் உறுதியாகவிருக்கும் விடுதலைப் புலிகள், தமது நிபந்தனைகளுக்கும், போக்கிற்கும் இசைந்து வரமாட்டார்களென்கிற நிலை உணர்ந்து, சிங்களத்தைப் பலப்படுத்தும் நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்கிறது. விடுதலைப் புலிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை, மரபுவழிப்படை வலுவை, இழக்க வேண்டுமென்கிற குறுகியகால மூலோபாய நோக்கினை இந்தியா கொண்டிருக்கிறது. கிழக்கின் பின்னகர்வை, ஆரம்பப் புள்ளியாகக் கருதிய இந்தியா, மேலதிக ஆதரவினை மிகுந்த வீச்சோடு சிங்களத்திற்கு வழங்க ஆரம்பித்தது.

புலிகளின் கதை முடிந்துவிட்டதென்கிற சிங்களப் பரப்புரைக்கு, பக்க வாத்தியம் வாசிக்கத் தொடங்கியுள்ளார்கள் இந்திய ஆய்வாளர்கள். இந்நிலையில் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை, சிங்களத்திற்கு முண்டுகொடுக்கும் இந்திய உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்களிற்கு ஒரு இக்கட்டான நிலையை தோற்றுவித் துள்ளதென்பதை, அவர்கள் வரையும் கட்டுரைகளில் காணக்கூடியதாகவுள்ளது. ராஜீவ் கொலைக்கு மன்னிப்புக் கேட்காமல், நட்புறவு சாத்தியமில்லையென்பது போன்ற, இடைமறிப்பு இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க, ஒரு கூட்டம் தற்போது புறப்பட்டுள்ளது. இதனைத் தமக்குச் சாதகமாக மாற்ற முயலும் இன்னொரு வகையான கூட்டம், புலம்பெயர்நாடுகளில் முளைத்தெழ ஆரம்பித்துள்ளது. இந்திய விசுவாசிகள் போன்று தம்மை அறிவியல் பூர்வமாக நிலைநாட்ட முயலும் இவர்கள், தமிழ்தேசியக் கூட்டமைப்போடு, தம்போன்ற அறிவார்ந்த ஈழப் பெருமக்களையும் இணைத்து, ஒரு புதிய தமிழ் அரசியல் தலைமையை உருவாக்க வேண்டுமென, இந்த முன்னாள் இந்திய அறிவாளிகளிற்கு போதிக்கின்றனர்.

சிங்களம் மற்றும் இந்தியா நினைப்பது போன்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் சிதைந்துவிட்டதென இப் புலம்பெயர்ந்த அரசியல் ஞானிகளும் நம்புவதே ஆச்சரியமாகவிருக்கிறது. இணையத் தளங்களினூடாக ஈழப் புரட்சி செய்ய புறப்பட்டுள்ள இத் தோழர்களின் மிதப்பிற்கு, புலிகளை வெறுக்கும் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களின் பின்புற ஆதரவு உண்டென்பதையும் ஊகித்தறியலாம்.

அதாவது இந்திய மத்திய அரச அதிகார வர்க்கத்தில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும், இணையத்தள நாற்காலிகளில் அதிகாரத்தொனி எழுப்பும் முன்னாள் கொள்கை வகுத்த இந்தியக் கோமான்களிற்கும் தொடர்பற்ற நீண்ட வேறுபாடுகள் உண்டு. அதாவது இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பில், தமது செல்வாக்கு உண்டென்பதை காட்டியவாறே இம் முன்னாள் உயர்குளாம், சில புலம்பெயர் புத்திஜீவிகளை உசுப்பிக் கொண்டிருக்கிறது.

புலி அழிந்தால் அடுத்து என்ன செய்வது என்கிற கனவிலும், வரதராஜப் பெருமாள் கோலாகலம் என்கிற நினைப்பிலும், கள யதார்த்தத்தை மறுதலித்து, இந்த முந்நாள்கள் இழுக்கும் போக்கினுள் மூழ்குவது, மறுபடியும் பழைய வரலாற்று தவறொன்றை நோக்கி இவர்களை இழுத்துச் செல்லும். தேசியத் தலைவர், இந்தியாவிற்கு நீட்டிய நேசக் கரத்தினை, தமக்கான காலமாகச் சிலர் தவறாக எடை போடுகிறார்கள்.

தலைவரின் ஆழமான சர்வதேசப் பார்வை கொண்ட அரசியல் மதிநுட்பத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லைப்போல் தெரிகிறது. சுயநிர்ணய உரிமை என்பது பூர்வீக தேசிய தமிழின மக்களுக்கானது. அம் மக்கள் ஏகமாக ஏற்றுக்கொண்ட தலைமை, அவ்வுரிமையை வென்றெடுக்கப் போராடும் குணாம்சத்தை உறுதியாக பற்றிப் பிடித்திருக்க வேண்டும்.

‘அந்நியமாதல்' பரிமாணத் தளத்தில் நின்றவாறு, புலிவேறு, மக்கள் வேறு போன்றதொரு தோற்றப்பாட்டினை அரசியல் மூலதனமாக கொண்டு, தலைமையைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிப்போர், எவ்வகையில் மக்களிற்கான அரசியல் தலைமையை வழங்க முடியும்? தமிழ் மக்களின் அரசியல் தலைமையை எவ்வாறு உருவாக்கலாமென இந்தியாவிற்கு அறிவுரை வழங்குவோர், தமிழ்மக்களின், தலைமையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை அரசியல் பிறப்புரிமையை மறுதலிப்பதாகவே கருத வேண்டும். கிழக்கின் விடியலில் பூத்த, மாபெரும் துரோகங்களும், வன்முறை தழுவிய ஜனநாயக கலாச்சாரங்களும், அற்புதமான நிகழ்வெனக் குதூகலித்த இணையத்தள இந்திய ஜனநாயகவாதிகள், பிள்ளையானும், கருணாவும் தமக்குச் சார்பானவர்களாக மாறுவார்களென எதிர்பார்த்துக் காத்திருந்து, பஞ்சுகாத்த கிளிகள் போல் ஆகியுள்ளனர். மாகாணசபை ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் கதாநாயகனாக திகழ்ந்த பெருமாள், தற்போது வரதர் அணியாகி சிங்களத் தேசத்தோடு சங்கமமாகியுள்ளனர்.

இந்தியாவிற்குச் சார்பாகவும், அதனைப் பிரதிநிதித்துவம் செய்யவும், வட-கிழக்கில், எந்தவொரு தமிழ் ஒட்டுக்குழுக்களோ, கட்சிகளோ கிடையாது.இதனை நிவர்த்தி செய்ய, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முன்னிறுத்தி, அதன் பின் வாசல் வழியாக உள்நுழைய, சில நிரந்தர இந்திய நட்புச் சக்திகள், காலம் கனியுமென எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஹரிஹரனின் இணையத் தளத்தில் அந்நகர்விற்கான முதல்புள்ளி இடப்பட்டுள்ளது.

தலைவரே கூறிவிட்டார், ஆகவே எல்லோரும் இந்தியாவை நோக்கி காவடி தூக்குவோமென சிலர் புறப்பட்டுள்ளார்கள். இனி மாநாடுகளும், சுயநிர்ணயம் - பயங்கரவாதம் என்கிற தலைப்பில் கருத்தாடல்களும் நிரம்பி வழியும். அரச பயங்கரவாத அட்டூழியங்களை ‘மனித உரிமை மீறல்' என்றும், அதற்கு எதிராகப் போராடினால் ‘பயங்கரவாதம்' என்று கூறும் சர்வதேச நாடுகளை தேசியத் தலைவர் நன்கறிவார். அரசியல் இலக்கு நோக்கியே சகல இராணுவ மூலோபாயங்களும் வகுக்கப்படுமென்கிற முற்போக்கு அரசியல், விடுதலைப் புலிகளிடம் உண்டு. புரிந்தால் சரி.

நன்றி

http://www.tamilskynews.com/index.php?opti...7&Itemid=54
http://www.yarl.com/forum3/index.php?showtopic=48793

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails