தி.மு.க கூட்டணியை உடைக்க காங்கிரஸ் சதி

காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை விடுதலை சிறுத்தைகள் தாக்கிய சம்பவத்தால்.... தமிழகம் முழுவதும் காங்கிரஸ்காரர்கள் கொந்தளித்து வருகிறார்கள். திருமாவளவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தே ஆகவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்துகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்தச் சூழலில், பல்வேறு கேள்விகளை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் முன் வைத்தோம்.

சத்தியமூர்த்தி பவனையும் காங்கிரஸ் தொண்டர்களையும் விடுதலை சிறுத்தைகள் தாக்கியிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை உருவாக்கிவிட்டது. இதுதான் விடுதலை சிறுத்தைகள் எடுக்கும் ஆரோக்கியமான அரசியலா?

சத்தியமூர்த்தி பவன் வாசலில் அன்றைக்கு நடந்தது ஒரு விரும்பத்தகாத நிகழ்வுதான். ஆனால், இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வுதானே தவிர... திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு அல்ல. உண்மையில், அன்றைக்கு ராயப்பேட்டை மணிகூண்டு அருகே பெரியார் தி.க. தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையேதான் போராட்டம்- எதிர் போராட்டம் என்கிற அளவில் நடந்தது. இரு தரப்பின ரையும் அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்திய பிறகு, காவல்துறை வாகனத்தில் ஏறாத காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சத்யமூர்த்தி பவனை நோக்கி ஆவேசத்துடன் நடந்தனர்.

அப்போது, பவனுக்கு அருகே விடுதலை சிறுத்தைகளின் தொழிற்சங்க பேரவையினர், தமிழீழ அங்கீகார மாநாட்டிற் கான பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்து ஆவேசப்பட்ட காங்கிரஸ்காரர்கள் பேனர் களை கிழித்து எறிந்தனர். அதனை விடுதலை சிறுத்தையினரும் அங்கிருந்த ஆட்டோக்காரர் களும் தட்டிக் கேட்டனர். அந்த தகராறு, பவனின் வாசல்வரை போயிருக்கிறது. இதனால் கைகலப்பும் வாய்த்தகராறும் ஏற்பட்டு விட்டது. ஆக, எதிர்பாராமல் தற்செயலாக நடந்த சம்பவம்தானே தவிர, திட்டமிட்டு எதுவும் நடக்க வில்லை. இதுதான் உண்மை. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, விடுதலை சிறுத்தைகள்மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர் காங்கிரஸ்காரர்கள். தங்கபாலு, ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்கள் தி.மு.க. அரசுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்க, உள்நோக்கத் துடன் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக் குவதால்தான் பதட்டம் தொடர்கிறது.

உங்களின் தூண்டுதல் பேரி லேயே இந்த தாக்கு தல் சம்பவம் நடந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறேன். மக்கள் தலைவர் மூப்பனாரோடு சத்யமூர்த்தி பவனிலிருந்துதான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசிய லில் அடி எடுத்து வைத்தது. அப்படிப்பட்ட நிலையில், "காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்க நானே ஆள் அனுப்பினேன்' என்று அவர் கள் கூறுவது, என்னை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.

திருமாவளவன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்கிறாரே தங்கபாலு?

நான் தூண்டினேன் என்பதோ, திட்டமிடப்பட்டு இது நடத்தப்பட்டது என்பதோ அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டுதான். அரசியல் ரீதியாக தி.மு.க. கூட்டணிக்கு நெருக்கடி தரவேண்டுமென்கிற உள்நோக்கத்துடன் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக தங்கள் தொண்டர்களை காங்கிரஸ் தலைவர்கள் தூண்டி விடுகிறார்களே தவிர எங்கள் தொண்டர்களை நான் தூண்டிவிடுவதாக கூறுவது அபாண்டம்தான். இன்னும் சொல்லப்போனால், தமிழகம் முழுவதும் எனது கொடும்பாவியை எரித்தும் என்னைப் பற்றி இழிவாகவும் கேவலமாகவும் பேசியும் தமிழகம் முழுவதும் பதட்டத்தை உருவாக்கி வருவது காங் கிரஸ்காரர்கள்தான். இந்தச் சூழலில்கூட, காங்கிரசுக்கு எதிராக எந்த எதிர்வினையும் நடத்தக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகளை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறேன். அதேசமயம், பவனில் நடந்த சம்பவத்தை அறிந்ததுமே ப.சிதம்பரம், தங்கபாலு, ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சனம் ஆகியோரை தொடர்புகொண்டு, "நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களை அமைதிப்படுத்த அதன் தலைவர்களில் சிலர் முன்வரவில்லை. ஆக தூண்டி விடுவது யார்? சம்பவத்தை ஊதிப்பெரிதாக்கி பிரச் சனையை பூதாகரமாக்க நினைப்பது யார்? இதனை யெல்லாம் 3 பக்கம் கடிதமாக எழுதி ஈ-மெயில் மூலமாகவும் ஃபேக்ஸ் மூலமாகவும் சோனியாவுக்கே அனுப்பியுள்ளேன்.

உங்களை கைது செய்தே ஆக வேண்டுமென்றும் காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்து கிறார்களே?

நான் என்ன குற்றம் செய் தேன்? எதற்காக கைது செய்யப்பட வேண்டும்? ஆனால் ஒன்று... கைது செய்யப்படுவது கண்டு நான் அச்சப் படுபவன் அல்ல. அதனை வரவேற்கவே செய்கிறேன். நான் குற்றம் செய் திருக்கிறேன் என்பதற்கு ஆதாரமிருந் தால் சட்டம் தனது கடமையை செய்யட்டும். அந்தக் கடமையை வரவேற்பவன் நான்.

கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சியை நடத்துபவர், ஆயுதம் கடத்துபவர், திருடன் என்றெல்லாம் உங்களைப் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அர்ச்சித்துள்ளாரே?

"சொல்லின் செல்வர்' ஈ.வி.கே. சம்பத்தின் வாரிசு என்கிற அடிப்படையிலும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் என்கிற முறையிலும் இளங்கோவன் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சமீபகாலமாக இளங்கோவனின் நாக்கு தடம் புரள்கிறது. என்ன பேசுகிறோம் என்று அறியாமல் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசி என்னை இழிவுபடுத்துவதை வாடிக் கையாக வைத்திருக்கிறார். இப்படி வாய்க்கு வந்தபடி பேசி, தனது குடும்ப பாரம்பரியத்திற்கு இழுக்கு தேடிக் கொடுத்துள்ளார் இளங்கோவன். எந்த ஒரு அரசியல் நாகரிகத்தையும் அணுகுமுறையையும் இவரிடம் எதிர் பார்க்க முடிவதில்லை. நாலாந்தர அரசியல் வாதிபோல தன்னால் கொச்சையான சொற்களைத்தான் பேச முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

அன்றைய தினம் அவருக்குப் பிறந்தநாள். அவரை தொடர்புகொண்டு நான் வாழ்த்து சொன்னேன். அப்போது அதற்கு நன்றி கூறிய இளங்கோவன், "இப்போதுதான் உங்களைக் கடுமையாக தாக்கி பேட்டி தந்துள்ளேன்' என்றார். அதற்கு, "பரவாயில்லை நன்றி' என்றேன். தரம் தாழ்ந்த அரசியலின் அடையாளமாக இளங்கோவன் மாறிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.

உங்களுக்கு எதிரான காங்கிரஸ்காரர்களின் "உணர்வு' களின் பின்னணியில் அ.தி.மு.க. சதி இருப்பதாக நினைக்கிறீர்களா?

சிறிய அளவிலே முடிந்துபோயிருக்க வேண்டிய இந்த பிரச்சனை, இன்றைக்கு இந்தளவுக்கு பெரிதுபடுத்தப்பட்டதற்கு இளங்கோவன், தங்கபாலுவின் அணுகுமுறையும் ஆவேசப் பேச்சுகளும்தான் காரணம். துவக்கத்திலிருந்தே தி.மு.க. எதிர்ப்பு சிந்தனையில்தான் இவர்கள் இருவரும் செயல்பட்டு வருகிறார் கள். ஜெயலலிதா என்ன சொல்கிறாரோ அதைத்தான் இவர்கள் இருவரும் சொல்கிறார்கள். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்பார் ஜெயலலிதா. மறுநாள் அதே கருத்தை இவர்களும் கூறுவார்கள். தி.மு.க. ஆட்சியில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று ஜெ. சொல்வார். மறுநாள் அதனையே ஒப்புவிப்பார்கள் இருவரும். இப்படி நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். இதற்கு அடிப்படை காரணம்... தி.மு.க. கூட்டணியை சிதைக்க வேண்டும், கூட்டணியிலிருந்து காங்கிரசை பிரிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான், "விடுதலை சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில் இருந்தால் காங்கிரஸ் அதில் இருக்காது' என்கிற கூக்குரல். ஆக, ஜெயலலிதா விரும்புவதை இவர்கள் செய்கின்றனர்.

அன்னை (சோனியா)யின் ஆணைக்கு கட்டுப்படுவதை விட, "அம்மா' (ஜெயலலிதா)வின் உத்தரவுக்கு செவி சாய்க் கிறார்கள் இளங்கோவனும் தங்கபாலுவும். இது எல்லாவற்றை யும்விட தென்மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர்களிடம், "காங்கிரஸ் கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்ப்போம், வாங்க ஒருலட்சம் வரை உங்க செலவுக்கு பணம் தருகிறோம். பணத்திற்கு பணமும் ஆச்சு, காங்கிரசுக்கு எதிர்ப்பு காட்டியதுபோலவும் ஆச்சு' என்று பேரம் நடத்தியுள்ளனர் அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள். நள்ளிரவில் என்னை தொடர்புகொண்டு தம்பிகள் சொன்ன போது அதிர்ந்து விட்டேன். அவர்களுக்குச் சில விஷயங்களை கூறி "எந்த எதிர்வினையிலும் ஈடுபடக்கூடாது' என்று கடுமை யாக எச்சரித்துவிட்டு, உடனே எஸ்.எஸ்.பி. சந்திரசேகரனை தொடர்புகொண்டு நடக்கிற, "சதி'யை விவரித்து கவனத்தில் கொள்ள வைத்தேன். இதனையெல்லாம் வைத்துதான் அ.தி.மு.க. சதி என்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்கிற உங்களின் செயல்பாடுகள் தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி தருவதாக இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்கள் எதிரொலிக்கிறதே?

கலைஞருக்கும் தி.மு.க. அரசுக்கும் எந்தவிதத்தி லும் தர்மசங்கடம் கொடுக்கமாட்டோம். அப்படிப்பட்ட நோக்கமும் எங்களிடம் இல்லை. பவனில் நடந்த சம்பவத்தை அடுத்து, கலைஞரை சந்தித்து விரிவாக விளக்கம் தந்தேன். நான் கூறுவதில் உள்ள உண்மைகளை அவர் புரிந்துகொண்டார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்பதில் அமைதியாக, கட்டுப்பாட்டுடன்தான் நடந்துகொண்டு வருகிறோம்.

சென்னையில் 26-ந் தேதி நடக்க விருக்கிற "தமிழீழ அங்கீகார மாநாடு' என்பதுகூட ஜனநாயக ரீதியிலான ஒரு கோரிக்கை மாநாடுதானே தவிர...வேறு எதற்காகவும் அல்ல. இந்த மாநாட்டுக்கு போலீஸார் தடைவிதித்தனர். நீதிமன்றத்தை அணுகினோம். நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. இதனையும் கலைஞரிடம் கூறியிருக்கிறேன். "விரும்பத்தகாத சின்ன ஒரு சம்பவத்திற்குக்கூட நீங்கள் இடம் தந்து விடாதீர்கள். அமைதியாக இருங்கள். அவர்கள் (காங்கிரஸ்) என்ன செய்கிறார் களோ... செய்யட்டும், பார்ப்போம்' என்று எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் கலைஞர். அதனால், விடுதலை சிறுத்தை களால் தி.மு.க. அரசுக்கு எந்தச் சூழலிலும் நெருக்கடி ஏற்படாது. ஏற்படவும் விரும்ப மாட்டேன். ஏற்பட விடவும் மாட்டேன்!

நன்றி : நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails