சிங்கள அரசின் இராணுவத்தின் பொய்த்திரை கிழிகிறது!
Posted On Saturday, 13 December 2008 at at 05:27 by Mikeஇலங்கையின் சிங்கள இராணுவத்தின் கொயபெல்ஸ் பிரச்சாரம், நேற்று வந்த செய்திகள்மூலம் படுதோல்வி அடைந்துவிட்டது!
எந்த யுத்தமானாலும் முதலில் களப் பலியாவது உண்மைகள் தான் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. அது எவ்வளவு சரியானது என்பது இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடைபெற்றுவரும் மூர்க்கத்தனமான போர் - அவ்வரசு கூறுவதுபோல் தீவிரவாதத்திற்கோ, பயங்கரவாதத்திற்கோ எதிராக நடத்தப்படும் இராணுவ நடவடிக்கை அல்ல; மாறாக, சிறுபான்மை யினரான அந்நாட்டுக் குடிமக்களாகிய ஈழத் தமிழரின் இனப் படுகொலையைக் குறி வைத்தே நடத்தப்படும் ஒரு இன ஒடுக்கல் யுத்தம்மூலம் விளங்கும். இல்லாவிட்டால், குழந்தைகள் பெண்டிர் - வயதான முதியவர்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சிவிலியன் பகுதிகளிலுள்ள மாதாக்கோயில், பள்ளிவாசல், இந்துக் கோயில், பள்ளிக் கூடங்கள், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மருத்துவமனைகள்மீது சிங்கள இராணுவம் குண்டுவீச்சு நடத்துமா?
எந்த நாட்டிலாவது சொந்த நாட்டு மக்கள்மீது அந்த அரசு - தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்று குண்டுமழை பொழிந்து, அங்குள்ள அப்பாவிகளான பொதுமக்கள், பதுங்கு குழிகளில் ஓடி ஒளிவது கூடத் தங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை என்று அஞ்சி, வீடு மனை எல்லாவற்றையும் விட்டு, காடுகளில் ஓடி வானமே கூரையாய், குடிக்கத் தண்ணீர்கூட இன்றி பட்டினியோடும், தாகத்தோடும் போராடும் ஈவிரக்கமற்ற கோரத்தாண்டவத்தைக் கண்டும், கேட்டுமிருக்க முடியுமா?
விடுதலைப்புலிகளின் இராணுவம் வெறும் தீவிரவாதிகள்தான் என்ற நிலை இருந்திருந்தால், இந்த காடு வனாந்தரங்களில் ஓடிடும் நிலைக்கு வரும் 3 லட்சம் தமிழர்கள், சிங்கள இராணுவத்தோடு இணக்கமாகி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக, அவர்களுக்கு ஆதரவு தராமலேயே இருந்திருப்பார்களே! அவர்களது தாகம் தங்களது வாழ்வுரிமை; தங்களுடைய தனித்தமிழ் கலாச்சார, கல்வி, உத்தியோக உரிமை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால்தான், தனி ஈழம் தேவை என்று கேட்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்!
கோழியும் தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான் பருந்தை எதிர்க்க அஞ்சாத நிலை இயல்பானதுதானே!
அம்மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் வெறும் 28 பேர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட புலிகளின் படை, இன்று ஒரு சுதந்திர நாட்டின் முப்படைகளாக - தரைப்படை (புலிகள்), வான்புலிகள், கடற்புலிகள் என்று அமைத்து அனைத்துக் களங்களிலும் சிங்கள இராணுவத்தின் முழு புஜபல பராக்கிரமத்தை சந்திப்பதோடு, அவர்கள் பின்வாங்கும் அளவுக்கு அதிரடி தருவதிலும் வெற்றி பெறுபவர்களாக ஆகி வருகிறார்களே - அதன் பின்னணிதான் என்ன?
நடுநிலையாளர்கள், உலகப் பொதுவானவர்கள் ஆழமாகச் சிந்திக்க மாட்டார்களா?
வடக்குப் பகுதியில் உள்ள கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்று கடந்த 45 நாள்களுக்குமேலாக, சிங்கள இராணுவம் தினமும் கூறி வந்தது. இப்படிப்பட்ட இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை என்று கூறும் அளவுக்குப் பொய்ப் பிரச்சாரத்தின் உச்சமாக இருந்தது என்பது, நேற்று விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆயுதங்களையும் போட்டுவிட்டு, தப்பினோம் பிழைத்தோம்! என்று தலை தப்பினால்போதும் என்று ஓடிவந்தார்களே!
சிங்கள இராணுவத்தில் 120 பேர்களுக்குமேல் கொல்லப்பட்டுள்ள தோடு, உயிருக்குப் பயந்து ஆயுதங்களைப் போட்டுவிட்டல்லவா ஓடியுள்ளனர் சிங்கள சிப்பாய்கள்!
இதுபற்றி வாய்க்கொழுப்பு வக்கணையாளரான சிங்கள இராணுவத் தளபதி பொன்சேகா, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பெரும் பாலோர் இராணுவத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள். அவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள். தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் அனைவருமே அனுபவம் பெற்றவர்கள். இதனால்தான் இராணுவத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்!
சிங்கள இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை புலிகள் காட்சிக்கு வைத்து உலக முழுவதற்கும் தங்கள் வீரஞ்செறிந்த போரினை விளம்பரப்படுத்தியுள்ளனரே! அரசியல் ரீதியாகவும் சிங்கள ஆட்சி அதிபர் ராஜபக்சேவின் வியூகம், கருணா - பிள்ளையான் விபீடணர்கள் ஒருவருக்கொருவர் மோதி பல அரசியல் கொலைகளில் முடிந்துள்ளதே!
எனவே, விடுதலைப்புலிகளை வெல்வது என்பது எளிதல்ல; காரணம், அவர்களுக்கு உயிர் வெல்லமல்ல; உயிர்த் தியாகமே அவர்கள் இலட்சியமாகத் தமிழ் ஈழத்திற்குக் கொடுக்கும் விலை என்பது ஒவ்வொரு இளைஞனுக்கும் உணர்வுபூர்வமான உறுதியாகும்!
தமிழர்கள் எம் மக்கள்; அவர்கள் அவதிப்படாமல் காக்கப்பட உடனடி போர் நிறுத்தம் தேவை!
ஒரு சில நாள்களில் இலங்கை செல்லவிருக்கும் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு இந்த யதார்த்தத்தைப் புரிய வைத்து கடுமையான எச்சரிக்கை (Ultimatum) தந்து, தனது தூது - மிஷன் - வரலாற்று முக்கியத்துவமாகியது என்று சாதித்துக் காட்டவேண்டும் என்பது நமது வேண்டுகோள் ஆகும்.
http://files.periyar.org.in/viduthalai/20081213/news04.html