நண்பனையும் எதிரியையும் இந்தியா அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம்
Posted On Sunday, 14 December 2008 at at 23:18 by Mikeஇலங்கையில் யுத்தத்தை நிறுத்தக் கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தை, இந்திய நிலைப்பாடாக இலங்கைக்குத் தெரிவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயன்ற விரைவில் கொழும்புக்குச் செல்வார் என, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான தமது சந்திப்பை அடுத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
அந்த அறிவிப்பு விடுத்து பத்துநாட்கள் கடந்து விட்டன. ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்கை விஜயம் இன்னும் கைகூடவே இல்லை.
இந்தத் தாமதத்திற்கு - விஜயம் இழுபறிப்படுவதற்கு - பல காரணங்கள் பல தரப்பினாலும் கூறப்படுகின்றன.
மும்பையில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் பின்னர் இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் முதல் தடவையாக இடம்பெறவிருப்பதால், இவ்விடயத்தை ஒட்டிப் பல்வேறு விவாதங்களில் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவேண்டியிருக்கும். ஆகவே, இந்தச் சமயத்தில் அவர் டெல்லியை விட்டுப் புறப்பட முடியாது என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இன்னொரு சாராரோ, இந்தியப் பிராந்தியத்தில் பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என இப்போதும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக வலியுறுத்தும் போது, ‘பயங்கரவாதிகளான’ புலிகளை அடியோடு அழித்தொழிப்பதற்குத் தீவிர யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை அரசை, அவற்றை நிறுத்துமாறு எப்படிக் கோருவது என்ற இக்கட்டு இந்தியாவுக்கு இருப்பதாகவும், அதனாலேயே அத்தகைய கோரிக்கையை முன்வைப்பதற்காகத் தனது வெளிவிவகார அமைச்சரைக் கொழும்புக்கு அனுப்புவதா என்று புதுடில்லி யோசிப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், இவையெல்லாம் தவறு என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
‘இந்தியப் பிராந்தியத்தில் பயங்கரவாதம்’ என்று இந்தியப் பிரதமர் அண்மைக்காலத்தில் குறிப்பிட்டு வருவது இலங்கைப் பிரச்சினையை உள்ளடக்கி அல்ல என்கின்றன அந்த வட்டாரங்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இன்று பெரிய பயங்கரவாதப் பிரச்சினை அதன் வடக்கில் இருந்துதான். தெற்கில் புலிகளிடமிருந்து அல்ல என்பது அவ்வட்டாரங்களின் கணிப்பு.
இந்தியாவின் அயலில் பங்களாதேஷில் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்றன.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், அண்மைக்காலத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தவருமான ஷேக் ஹஸினா அம்மையார் பங்குகொள்ளும் புதிய அரசு ஒன்று பங்களாதேஷில் இத் தேர்தலில் தெரிவாகாவிட்டால், அந்தப் பகுதியிலும் புதிது புதிதாகப் பயங்கரவாதம் தீவிரமாகித் தனது நாட்டைக் குட்டிச்சுவராக்கும் என இந்தியா அஞ்சுகின்றது.
அதேபோல, வடக்குப் பக்கத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்திய நாட்டுக்குப் பெரும் பயங்கரவாதப் பிரச்சினை உள்ளது என்பது வெள்ளிடைமலை.
இவற்றை மனதில் வைத்தே இந்தப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து இந்தியப் பிரதமர் கருத்து வெளியிட்டாரே தவிர, இலங்கையின் விடுதலைப் புலிகளின் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அல்ல என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
சரி. மேற்படி காரணங்கள் சரியானவையாக இல்லாவிட்டால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச கொழும்பு விஜயம் இன்னும் தாமதமாவதற்குக் காரணம் என்ன?
இந்திய வெளிவிவகார அமைச்சரை - இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக் கோரும் வற்புறுத்தலுடன் இங்கு வருகை தரும் இந்திய அமைச்சரை - வரவேற்கும் மனநிலையில் கொழும்பு இல்லை என்பதே இந்திய அமைச்சரின் வருகை மேலும் காலதாமதமாகி இழுபறிப்படுவதற்குப் பிரதான காரணமாகும்.
யுத்தத்தை நிறுத்தக் கோரும் புதுடில்லியின் கருத்தைக் கொழும்பு வெளிப்படையாகவே ஆட்சேபிக்கின்றது - எதிர்க்கின்றது - என்பது இப்போது துலாம்பரமாகிவிட்டது.
அதாவது, இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் பக்கத்து வல்லாதிக்க நாடான இந்தியாவின் - அதன் முக்கிய மாநிலமான தமிழகத்தின் - கருத்தை உள்வாங்கி இணங்கிச் செயற்பட கொழும்பு தயாரில்லை என்பதையே இவ்விடயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையை விரும்பி வரவேற்காமல் ‘முதுகைத் திருப்பிக் காட்டும்’ கொழும்பின் போக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.
இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால் - இந்தக் காலகட்டத்தில் கட்டவிழ்ந்த நிகழ்வுகளை இந்தியா ஒரு தடவை உற்றுநோக்கினால் -
இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் உண்மையான நண்பர் யார்? போலியாக நண்பன் போல நடிக்கும் எதிரி யார்? - என்பவற்றை இந்தியா ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்.
சரியான எதிரியை இந்தியா அடையாளம் கண்டு தள்ளிவைக்கவும், சரியான நண்பனை இனங்கண்டு அரவணைக்கவும் இது சரியான சந்தர்ப்பமாகும். செய்யுமா இந்தியா?
pathivu
Antha naayai serupaal adithadil thape illai