இடம்மாறும் வெற்றிக்கம்பங்களும் - ஏமாறும் இலங்கை இந்திய அரசுகளும்!

இன்று உலகமே ஏமாற்றுப் பிரச்சாரத்தால் வாழ்க்கை வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். பல்வேறு துறைகளிலும் இருப்பது போலவே அரசியலிலும் இன்று இது நன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்த வரை சிங்கள அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டை தமிழின அடக்குமுறை நோக்கியதாக மாறி, இன்று இராணுவ முகம் கொண்டுவிட்டது. சிங்களத்தின் ஆட்சி அதிகாரவெறி அதனுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இராணுவ மயச் சிந்தனைக்கு அடிமையாக்கிவிட்டது. இந்த நிர்ப்பந்தம் இலங்கையில் பொதுவுடமைக் கட்சிகளையும் மிதவாதிகள் எனப் பெயர் வாங்கிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் பிடித்துக்கொண்டுவிட்ட நிலை இன்று தெரிகிறது.

தமிழினத்துக்கு எதிரான போரில் புத்த பிக்குகள் உட்பட ஒட்டுமொத்தச் சிங்கள இனமே இன்று மகிந்தவின் போரியல் அரசியலுக்கு முழுமையான ஆதரவு கொடுத்து வருவது கண்கூடு. இதனால் உலக நாடுகளின் கண்டனத்தையும் எதிர்க்கும் அளவுக்கு மகிந்தவின் சிங்கள அரசுக்கு இந்தப் போர் மிகப்பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது. இந்த அசுர பலம்தான் இந்தியாவை இலங்கை அரசின் காலடியில் மண்டியிட்டு நிற்கும் அளவுக்கு வைத்துள்ளது. இலங்கையின் பிராந்திய முக்கியத்துவம்; அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகமுக்கியமாக இருப்பதனால் இலங்கையால் இந்தியாவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக்கொள்ள முடிகிறது.


இலங்கை அரசின் போரியல் அரசியலுக்குள் சிக்கிவிட்ட ஈழத் தமிழினத்தின் அரசியல் உரிமைகளுக்கான அமைதிவழித் தீர்வுகளுக்கான சாத்தியப் பாட்டை அறவே இல்லாது ஒழித்து

விட்டது. இக்கருத்துக்கு ஆதரவாக நோர்வே நாட்டின் அனுசரணையுடன், சர்வதேச அளவில் இடம் பெற்ற பேச்சுக்களை இலங்கை அரசு கையாண்ட விதம் வெளிப்படுத்திவிட்டது. எனவே ஈழத் தமிழினத்துக்கு தனது இருப்பையும் விடுதலையையும் வென்று எடுக்க வேண்டிய ஒரே ஒரு மார்க்கமாக போர் மாறிவிட்டது. எனவே ஈழத் தமிழினத்தின் தனி ஒரு பலமாக, அதனைக் காப்பாற்றும் வல்லமை கொண்ட இயக்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே உள்ளனர்.

இந்த உண்மையை தமிழ் மக்கள், குறிப்பாகப் பல ஈழத் தமிழ் பேசும் மக்கள் உணரத் தவறினாலும், சிங்களமும் இந்திய மத்திய அரசுகளும் புலிகளுடன் பல ஆண்டுகள் போர்க் களங்களில் மோதித் தெரிந்து கொண்டுவிட்டது என்பதில் வேறு கருத்தில்லை. எனவே புலிகளுக்கு எதிரான போரில் இலங்கையுடன் இந்தியா மிக இறுக்கமாகப் பிணைந்து செயல்படுவது வெளிப்படையான உண்மையாகிவிட்டது. எனவே உலகத் தமிழினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பல வளங்களும் வழங்கி, அதனை மிகப் பெரும் பலம் பெற்றுத் திகழ வைக்க வேண்டியது கட்டாய தேவையாக இருக்கிறது.

இன்று எடுத்தற்கு எல்லாம் புலிகள் ஆயுதத்தைக் கீழே வைத்தால் மட்டுமே அரசியல் தீர்வு பற்றிய பேச்சு சாத்தியம் என இந்த இருநாடுகளும் பேசுவதில் உள்ள கபடத்தனம் இதனால் தெரிகிறது. இவர்களின் மனதில் உள்ள அமைதித் தீர்வு என்பது எது என எவருக்குமே தெரியாது. நடந்து முடிந்த எந்த ஒரு பேச்சு வார்த்தைகளில் ஏற்றுக் கொண்ட விடயங்கள் செயல் வடிவம் பெறத் தவறிவிட்ட சு10ழலில், புலிகள் ஆயுதத்தைக் கீழே வைத்தால்தான் அமைதித் தீர்வு வரும் என்பதில் உள்ள பொய் முகம் தெரிகிறது. இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் துட்டகைமுனு எல்லாள மன்னனை ஏமாற்றியது போன்று இன்றும் பிரபாகரனை ஏமாற்றித் தமிழினத்தை அழித்து விடலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் போரியல் கலையில் ஒரு புதுப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். காலத்துக்குக் காலம் எதிரிகளைக் கற்பனைக் கனவுகளில் மிதக்க வைத்து வெற்றிக் கம்பம் அதோ இதோ எனவும் அதற்கான இறுதி நாள் கெடு விதித்தும் ஏமாந்து அலைகினறன இந்த நாடுகள். இலங்கை அரசும் அதன் பின்னால் நிற்கும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இன்றோ நாளையோ புலிகளின் அழிவைக் கண்டு அதன் பின்னர் தீர்வைக் கட்டிவி;டத் துடிக்கின்றன. சீதை தேடிய மாயமான் இவர்கள் கூறும் அரசியல் தீர்வு என்பதைச் சிறு பிள்ளைக்கும் தெரியும்.

தெரிந்தோ தெரியாமலே மகிந்த அரசு கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவிலாற்றில் இரண்டு பகுதிகளிலும் வாழ்ந்த சிங்கள தமிழ் மக்களுக்கிடையே எழுந்த நீர்ப் பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வு காணமுற்பட்டது. அப்போது மகிந்த அரசுக்கு மாவிலாறுப் பிரதேசத்தைப் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்து பெறுவதே நோக்கமாக இருந்தது. இதனை ஒரு சாட்டாக வைத்துப் புலிகளைத் தன் இராணுவப் பொறிக்குள் இழுத்துவிட நினைத்தது. இதில் இன்னும் ஒரு தேவை இலங்கை அரசுக்கு இருந்தது. அதுதான் கிழக்கு மாகாணத்தைக் கைப் பற்றி விடுவது. கிழக்கில் உள்ள எண்ணை தாங்கிகளை இந்தியக் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு கொடுப்பது, இந்தியாவுடன் அனல் மின் நிலையம் உருவாக்குதல் போன்ற பொருளாதார முதலீடுகள் மீதான ஆசை காட்டி இந்தியாவின் ஆதரவைப் போருக்குப் பெற்று விடுவது.

இரு நாடுகளும் எதிர் பார்த்தது போல் புலிகள் மாவிலாறிலோ, மூது}ர் திருகோணமலை மாவட்டத்திலோ போரைச் சந்திப்பதைத் தவிர்த்து விட்டனர். இதற்கான காரணம் புலிகள் பக்கத்தில் கிழக்கு மாகாணத் தளபதி கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிக்கப் பட்டமை ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப் படவேண்டிய ஒன்றாகும். மற்றையது கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பலம் உடைந்து விட்ட நிiலியில் அங்கே ஒரு முழு அளவிலான போருக்கு முகம் கொடுப்பது ஆபத்தானது. இத்துடன் பாதுகாப்பான தரைவழிப் பின்தள வழங்கல் இல்லாத நிலையால் நிலைமை மேலும் மிக ஆபத்தாக முடிந்து விடலாம். எனவே போரில் புலிகளை வெற்றி கொள்ளும் இலங்கை இந்திய அரசுகளின் ஆசையில் மண்ணைப் போடும் வகையில் கிழக்கிலே போர் அரங்கு ஒன்றைப் புலிகள் இல்லாமல் செய்துவிட்டனர்.

மாவிலாறு சுலபத்தில் கிடைத்து விட்டதால் சிங்களத்துக்கு வெற்றி மீதான வெறி உச்சந் தலைக்கு ஏறிவிட்டது. மூது}ர் சம்பூர் குரங்குபாஞ்சான் தொப்பிக்கல் என்று முன்னர் அரசு கனவில் கண்ட இடங்களை எல்லாம் தனது கைக்குள் போட்டுக்கொண்டது சிங்கள அரசு. இதில் புலிகளுக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு முக்கிய தடைக் கல்லாக அமைந்தது என்பதும் உண்மையே. உலக நாடுகளால் பயங்கரவாதிகள் எனக் கபடத் தனமாக முத்திரை குத்தப்பட்ட நிலையில் கயிற்றின் மேல் நடப்பது போன்ற அவதானம் தேவைப் பட்டது. எனவே சிங்களம் ஆவலுடன் தேடிய வெற்றிக் கம்பம் கிழக்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது.
கிழக்கைப் பிடித்ததோடு மகிந்தவின் காட்டில் அடைமழை கொட்டியது. போரைக் காரணம் காட்டி அரசியல் எதிரிகளையும் தனக்கு எதிரான சக்திகளையும் பயத்தாலும் நயத்தாலும் ஆயுதப் படைகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் அடாவடித் தனத்தாலும் மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்தித் தன்னைப் பலப்படுத்திக் கொண்டார். கிழக்கின் வெற்றியால் பயனடைந்த இந்தியா இராணுவத் தளபாடங்கள் பயிற்சிகள் பண உதவிகளை என அள்ளிக் கொடுத்து சிங்களத்துக்கு கொம்பு சீவும் வேலையைச் செய்து தனது பங்குக்கு உசுப்பிவிட்டுள்ளது. மன்னார; பூநகரி அக்கராயன் எனப் புலிகளை வீழ்த்திவிட இலங்கை அரசு புலிகளுடனான இறுதிப் போர் மூலம் தனது வெற்றி விழாக் காணும் வெறியில் இலங்கை அரசு ஒவ்வொரு களமுனையாகத் தேடி அலைகிறது.

இதோ கிளிநொச்சி இன்னும் இரண்டரை மைல் அதை 24 மணி நேரத்தில் பிடித்து விடுவோம் எனக் கொக்கரித்தது சிங்களம். வாரம் மாதம் என காலம்தான் போனது. ஆனால் கிளிநொச்சி என்ற வெற்றிக் கம்பமோ கண்ணுக்கே தெரியாமல் கிடக்கிறது. கார்த்திகை 27ல் கிளிநொச்சியில் மகிந்த ராஜபக்ஷ சிங்கக் கொடியேற்றி கொண்டாடுவேன் என்றார், ஆனாலும் நடக்கவே இல்லை.

கார்த்திகை 27ல் கிளிநொச்சி வீழ்ந்து விடும் என்ற செய்தியைத் தொலைக் காட்சியில் தானே அறிவிக்கவேண்டும் எனக் காத்திருந்தார் மகிந்தர். பாவம் அந்தச் செய்தி அவருக்கு இன்றுவரை கிடைக்கவே இல்லை. பிரபாகரனுக்குப் பிறந்தநாள் பரிசு கொடுக்க நினைத்தோம் ஆனால் கால நிலை இடம் கொடுக்கவில்லை என்று பசில் ராஜபக்ஷ 28ந் திகதி அறிக்கை விட்டார். ஆனால் 27ந் திகதி பிரபாகரன் தனது மாவீரர் நாள் சிறப்புரையை நிகழ்த்திய வேளையில் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது விமானக் குண்டு வீசியும் பேச்சு ஒலிபரப்பானது.

போன போன இடம் எல்லாம் வெற்றிக் கம்பம் கிட்டாமலே இலவு காத்த கிளிபோல் இலங்கை அரசு அலைகிறது. சிங்களம் போரில் வெற்றி கண்டு - தமிழினத்தை அடிமை கொண்டு - அரசியல்தீர்வோ வாக்கரிசித்தீர்வோ – கொண்டு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதைக் காண இந்தி அரசு காத்திருக்கிறது. இலவம் பழம் பழுப்பது எப்போ? இந்தியக் கிளி அதைச் சாப்பிடுவது எப்போ?

இதற்குள் புலிகள் தமது தற்காப்பு போரை நடத்தி, நாளாந்தம் சிங்களப் படையை அறுவடை செய்தபடியே தனது தாக்குதல் களத்தை வெளிநாடுகளுக்கு மாற்றிவிட்டுள்ளது. இப்போ தமிழகத்தின் உணர்வுகளுடன் சிங்களம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய மத்திய மாநில அரசுகளின் பலவீனங்களை தனது தமிழின அழிப்புப் போருக்குப் பயன்படுத்திய படியே வன்னியில் வெற்றிக் கம்பத்தைப் பிடித்து விடத் துடிக்கிறது சிங்களம். அங்கே கூட அது தேடும் வெற்றிக் கம்பம் அதன் கைக்கு எட்டிவிடுமா?

எது எப்படியோ இந்த வாரம் இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்த இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் பற்றிய கருத்து ஒரு புயலைத் தமிழகத்தில் கிளப்பி விட்டிருக்கிறது. இந்தப் புயல் எந்த அளவுக்கு மன்மோகன் சிங்கின் மௌனத்தைக் கலைக்கும் என்பது சந்தேகமே. ஆனால் யார் என்ன செயதாலும் இந்திய இலங்கை அரசுகளின் உறவில் மாற்றம் வரும் எனக் கூறமுடியாது. உண்மையான வெற்றிக் கம்பம் அடுத்த இந்தியப் பொதுத் தேர்தலில்தான் தெரியவரும். அப்போது ஆட்டத்தில் யார் வென்றார் யார் தோற்றார் என்பது தெரியும்.

ஆய்வு:முரசத்திற்காக பத்மா

http://www.swissmurasam.net/
http://www.yarl.com/forum3/index.php?showtopic=48263

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails