கடைசி முன்னணிப் படையினரை வைத்து போரைத் தொடரும் அவலத்தில் இராணுவம்: இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி

எதிரியின் முன்னணிப் படைகள் அழிக்கப்பட்ட நிலையிலே முன்னணிப் படையினர் கடைசிப் படைகளைக்கொண்டு போரை நடாத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான் என இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை நடாத்தி பேரிழப்பைக் கொடுத்த போராளிகளுக்கு கண்டாவளை, விசுவமடுக் கோட்ட மக்களால் உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி களமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் நாம் விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் நிற்கின்றோம். இப்படியிருந்தும் நீங்கள் கிளிநொச்சி கட்டளைப் பணியகப் போராளிகளுக்கு உலர்உணவுகளைக் கொண்டுவந்து தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிதரக்கூடிய விடயம். நாங்கள் உங்களைச் சந்தித்துக் கதைக்கவேண்டுமென்ற காரணம் நீங்கள் கஸ்டத்தின் மத்தியில் வந்திருப்பது மட்டுமல்லாது, போர்ரீதியாக நிலைமை, இராணுவரீதியான யாதார்த்தநிலை என்பவை தொடர்பாக உங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது.

அந்த விடயங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டம் கட்டமானது பாதுகாப்பு நிலைச் சமர்களுக்குள் பிரதேசங்கள் விடுபட்டிருக்கின்றன. இந்தச் சமர்களால் தற்பொழுது நாங்கள் கடைசிப் போர் மறிப்புச் சமருக்குள் நிற்கின்றோம். அதேநேரம் இராணுவத்தின் நிலைமையும் ஒரு இறுதிக்கட்டமான நிலைமைக்குள் நிற்கின்றது. இறுதிக்கட்டமான நிலைமை என்பது நேற்று நடந்த சண்டையாக இருக்கலாம். அல்லது குறிக்கப்பட்ட நாட்களுக்கு முன்நடந்த சண்டைகளாக இருக்கலாம். அந்தச் சண்டைகள் எதிர்வுகூறி நிற்கின்றன.

விடுதலைப் போராட்டம் என்பது பின்னடைவுகளைச் சந்திப்பது அல்லது முன்னோக்கிச் செல்வது என்பது வரலாறு, அது உலக நாடுகளில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களில் வரலாறும் அப்படித்தான் இருக்கின்றது. யதார்த்தரீதியாக நாம் ஒரு கட்டநிலையில் இருக்கும்போது எதிரி இன்னொரு கட்டத்தில் இருப்பான். அதேநேரம் வெற்றி, தோல்வி என்பது மாறுபட்ட நிலையில் இருக்கும். ஆனால் இன்றைக்கு முழுமையாக எதிரியை வெல்லக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

ஆனால் எதிரியைப் பொறுத்தவரையில் முன்னணிப் படைகள் அழிக்கப்பட்ட நிலையில் முன்னணிப் படைகளின் கடைசிப் படைகளை வைத்து ஒருபோரைச் செய்கின்ற தீவிரமான கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான். அந்த ஒரு நெருக்கடியான கட்டத்தில் எதிரியின் நிலை இருக்கும்போது இனித்தான் விழிப்பாக முழுவீச்சாக நாங்கள் எல்லோரும் போராட்டத்திற்குள் முழுமையாக ஈடுபடவேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதில் நாங்கள் இரண்டு செய்திகளைச் சொல்லவேண்டும். ஒன்று எமது மக்களுக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் உள்ளவரை சண்டையென்பது நடக்கும்.

அதேநேரம் சிறிலங்கா இராணுவத்திற்கு ஒருசெய்தியைச் சொல்லவேண்டும். என்னவென்றால் மகிந்த அரசினதோ, அல்லது சரத் பொன்சேகாவினதோ இராணுவ ஆட்சிக்காலம் குறிக்கப்பட்ட காலத்தில் இல்லாமல் போகலாம். ஆனால் 35 வருடமாக சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியான சண்டைகள் மூலம் தொடர்புகள் இருக்கின்றன. அது எப்பவும் நிற்கப் போவதில்லை. அது தமிழன் இருக்குவரை சிறிலங்கா இராணுவத்திற்கும் எங்களுக்கும் யுத்தம் என்பது இருக்கும்.

இந்தக் காலத்தில் இராணுவம் எவ்வளவு பிரதேசங்களை வல்வளைப்புக்குள் ஏற்படுத்தினாலும் சரி இப்ப ஆடிக்கொண்டிருக்கின்ற அரச இயந்திரம் அல்லது இராணுவத்தில் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும் சரி சிறிலங்கா இராணுவத்தின் கீழ் மட்டத்திலுள்ள போர் என்பது நீண்டகாலமாக இருக்கின்றது. இது விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரணமான நிகழ்வு. அந்த நிகழ்வு மாறுபட்டு நடக்கும் இன்று எங்களுடைய காலமாக இருக்கும் அல்லது இராணுவத்தின் காலமாக இருக்கும்.

அதாவது ஏற்றத்தாழ்வாக மாறி, மாறி நடக்கின்ற ஒரு நிலைமைதான் இந்தப் போரியல் என்பது. இந்தப் போரையும் அப்படித்தான் பார்க்கிறோம். இன்றைக்கு எங்கள் குறிக்கப்பட்ட இடங்கள் விடுபட்டிருக்கின்றன. அது யதார்த்தமான உண்மை. ஆனால் இன்றைக்கு முற்றுமுழுதாக நாங்கள் முன்னணிப் படைகளை அழித்து வருகின்றோம். நேற்று நடந்த சண்டையில் சிறிலங்காப் படையினரின் 57வது டிவிசனில் முற்றுமுழுதாக இரண்டு பிரிகேட் பங்குபற்றியது. இவர்கள் இரண்டு பிரதான உடைப்புக்களை ஏற்படுத்தி கிளிநொச்சியின் குறிக்கப்பட்ட பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பெரியளவில் நகர்வைச் செய்தனர்.

ஆனால் இன்றைக்கு அப்பிரதேசங்களைப் பிடித்து வைத்திருக்க முடியாத அளவிற்கு முறியடிப்புச் சமரை நாம் செய்துள்ளோம் இதில் படையினரின் சடலங்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சண்டை மாற்றம் அடைந்துள்ளது. முற்றுமுழுதாக கிளிநொச்சியைப் பாதுகாப்பதற்கு அதியுச்சமான சண்டை நடந்து கொண்டிருக்கின்றது.

அவற்றோடு உங்களில் இருந்து வருகின்ற எல்லைப்படை மக்கள் படையினர் போராளிகளோடு முழுமையாக ஈடுபட்டு வருகின்றார்கள். அதாவது போராளிகள் நேரடியாக நின்று சண்டை பிடிக்கின்ற இராணுவத்தின் துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் மத்தியில் நின்று நேரடியாக மக்கள் படையினர் வேலைகளைச் செய்கின்றனர் நாங்கள் நின்று சண்டைகள் பிடிக்கின்ற காப்பரண்கள் மக்கள் படையால செய்து தரப்பட்டவைதான்.

அதனால்தான் நல்ல சண்டையைச் செய்யக்கூடிய மாதிரி இருக்கின்றது. இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் இதை நீங்கள் தோல்வியான கட்டம் என்று நினைக்கக்கூடாது. கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் நேற்று எடுத்த முன்னகர்வும் குஞ்சுப்பரந்தன் ஊடாக எடுத்தநகர்வும்தான் பெரிய முன்னகரிவுகள். இதனை முற்றுமுழுதாக முறியடித்து விட்டோம்.

இன்றைக்கு சண்டை பிடிக்கின்ற படையினர் தாங்கள் கேட்கின்ற எறிகணைகளை அடித்துக் கொடுக்கக் கூடிய அளவில் படையினரின் பீரங்கிப்படைகள் இல்லை. அவர்களும் கடைசிக் கட்டத்தில்தான் இருக்கின்றார்கள். மக்களைப் பொறுத்தவரையில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். இனி எப்படி மாற்றங்களை உருவாக்கலாம் என்பதைப் புரிந்திருக்க வேண்டும்.

இந்த விடுதலைப் போராட்டம் என்ன இலட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது கட்டாயம் நிறைவேறும். அது நிறைவேறும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கின்றோம் அதில் நீங்களும் பக்கபலமாக உறுதியாக இருந்து களச்செயற்பாட்டில் ஈடுபட்டு எங்களுடைய வெற்றிக்காக இன்னும் உழைக்கவேண்டும். இவ்வாறு சிறப்புத் தளபதி வேலவன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails