மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா?: இராமதாஸ் கேள்வி

மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் "சிங்கள அரசே போரை நிறுத்து'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று புதன்கிழமை வீரசந்தனம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரச்சினை குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் பரப்புரை செய்வோம். 13 ஆம் நாள் மறைமலை நகரில் கருஞ்சட்டைப் படை மான மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கின்றனர். அதில் நானும் கலந்து கொள்கிறேன்.

இந்திய அரசு அங்கே நடக்கிற தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும். ஆனால் இந்திய அரசு நினைக்கவில்லை. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று பிரதமரிடம் பேசிய போது இதனை புரிந்து கொண்டோம். 4 ஆம் நாள் டெல்லி சென்று வலியுறுத்தினோம். 10 ஆம் நாள் ஆகிவிட்டது, இதுவரை அதற்கான ஒரு சிறு அடையாளம் கூட இல்லை.

டெல்லி சென்றோம், பேசினோம், வந்தோம். ஆனால் வென்றோமில்லை. எந்த சலனமும் இதுவரை ஏற்படவில்லை. சிறிலங்காவுக்கு வெளிவிவகார மந்திரி சென்றதாக இல்லை. இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு தலைமை தாங்குகிற முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரை நாம் கேட்பது.

சிறிலங்கா என்றுமே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்தியாவுக்கு அது பகை நாடு என்பதை இந்தியா உணரவில்லை. அல்லது ஈழத் தமிழர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் ஏன் அமெரிக்கா கூட இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற வேண்டும். தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். அது இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடாக இருக்கும் என்பதை முதலமைச்சர் கருணாநிதி சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது கூட நெருங்கி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மரணக்குழி அவர்களுக்கு காத்திருக்கிறது. மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கி விட்டால் அப்போது இந்தியா அதை அங்கீகரிக்குமா? அங்கீகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூற வேண்டும். தற்காப்புக்காக அங்கீகரிக்கலாம்.

போரை நிறுத்துவது மட்டும் தீர்வாகாது. அரசியல் தீர்வு என்பது என்ன? இன்னும் 100 ஆண்டுகளானாலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை தரமாட்டார்கள். இந்த அங்கீகாரத்தை முதல்வர் முன்னெடுத்துச் சொல்ல, நாங்கள் பின்னாலேயே உறுதிமொழி எடுத்துச் சொல்கிறோம்.

டெல்லி சென்ற போது ஐ.நா. மூலமாக பாதுகாப்பு சபைக்கு சென்று முறையிடலாம் என்றெல்லாம் கூறினோம். பிரதமருக்கு இலங்கை பிரச்சினையில் ஆலோசனை கூற கட்சி சார்பற்ற 2 தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றேன். என்ன சொல்லியும் என்ன பிரயோசனம். ஒன்றுமே நடக்கவில்லை.

இப்போது மனித சிவில் உரிமை கழக தலைவர் வக்கீல் சுரேஷ் உலக நீதிமன்றத்தில் முறையிட அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்படி 30 நாட்களில் உலக நீதிமன்றத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார் அவர்.

கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் மு.மேத்தா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொது செயலாளர் தியாகு உட்பட பலர் உரையாற்றினர்.


http://puthinam.com/full.php?22MtUcc3qR34dA3h202JOI4d30gr0bG5G2e2NPE3b36HTe

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails