இலங்கை அரசு கூறுவதை ஏற்க நாங்களும் சர்வதேசமும் தயாரில்லை

வன்னியில் அகதிகள் தங்கியுள்ள இடங்கள் மீது நடுநிசியில் குண்டுவீசித் தாக்கிவிட்டு பிரதேசத்தையும் மக்களையும் மீட்பதாக அரசு கூறுவதை ஏற்க நாங்களும் சர்வதேசமும் தயாரில்லை என்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன்.

"சமமான அந்தஸ்துள்ள பிரஜைகளாக வாழ்வோம். அல்லது தனித்துவாழ்வோம்' என்றும் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடிக்காது எனவும் உறுதிபடத்தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் மற்றும் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் ஆகிய அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பேசும் போதே சம்பந்தன் எம்.பி.இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; தமிழ் மக்களின் சுயாட்சி உரிமையானது நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாகும்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்களானது மிகவும் மோசமாக இருக்கின்றன. ஆட்கடத்தல்கள், சட்ட விரோத கொலைகள் என நாளாந்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. வடக்கிலோ எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாது விமானத் தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள் போன்ற இராணுவ நடவடிக்கைகளால் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதுதான் நிலைமை.

இதேநேரம், இன்று இந்தியா கூட தனது நிவாரண உதவிப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகத் தான் வழங்கியது. இவ்வாறானதொரு நிலைமையில் ஐ.நா.முகவரமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச தன்னார்வ தொண்டர் நிறுவனங்களை அரசாங்கம் வன்னியிலிருந்து அகற்றியது ஏனென கேட்கிறோம். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. மக்களுக்குத்தான் பிரச்சினை. அத்துடன், வன்னிக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்ப அரசாங்கம் அனுமதி மறுப்பதேன் எனவும் நாம் கேட்கிறோம்.

இன்று வன்னியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இருப்பிடமில்லை. இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திறந்த வெளியிலும், மரங்களுக்கு கீழேயும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் அந்தப் பிரதேசங்களில் இருந்த போது இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அவர்களையும் வெளியேற்றிவிட்டு அங்கு அரசாங்கம் செய்தது ஒன்றுமில்லை.

இடம்பெயர்ந்த மக்கள் மரங்களுக்கு கீழே வாழ்ந்து கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கும் நிலையில், கூடாரங்களை அனுப்பினால் விடுதலைப் புலிகள் பயன்படுத்திக்கொள்வார்களென இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார அவற்றை அனுப்ப முடியாதென தெரிவிக்கிறார்.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 30 சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது. கிழக்கில் நாளாந்தம் கொலைகள், ஆட்கடத்தல்கள் நடந்தேறிய வண்ணமேயுள்ளன. இந்த நிலையில் கிழக்கை மீட்டு விட்டதாக கூறுவதற்கு அரசாங்கத்துக்கு வெட்கமில்லையா?

காணாமல் போன ஒருவர் பற்றி முறைப்பாடு செய்தால் முழுக் குடும்பமுமே காணாமல் போய்விடும் என்ற அச்ச சூழ்நிலையே அங்கு நிலவுகிறது. கொலை செய்பவர்களுக்கு எதிராக உங்களுக்கு (அரசாங்கத்துக்கு) நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் உங்களுடன் இணைந்தே செயற்படுகிறார்கள். கிழக்கை மீட்டு விட்டதாக கூறிக்கொண்டு, அவர்கள் உங்களது பங்காளிகளாக இருப்பதனால் தான் உங்களுக்கே நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.

நீங்கள் வன்னியையும், அங்குள்ள மக்களையும் மீட்பதாகக் கூறிக் கொண்டு அதிகாலை வேளை மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த அகதிமுகாமின் மீது விமானத் தாக்குதல் நடத்துகிறீர்கள். இதுதான் உங்களது மீட்பு நடவடிக்கையா?

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ இந்தியா சென்று திரும்பியதிலிருந்து வன்னி மீது முன்னரைப் போலவே விமானத் தாக்குதல்களும், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால், மக்கள் கொல்லப்படுவதுடன், காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே அரசாங்கம் மக்களை மீட்பதாக கூறிக்கொள்கிறது. இதை ஏற்றுக்கொள்ள நாமோ, சர்வதேசமோ தயாராகஇல்லை.

அரசாங்கம் நாட்டின் இறைமை பற்றி பேசுகிறது. சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இறைமை பற்றி பேச முடியாது. ஏனெனில் அடிப்படை உரிமைகளும், மனித உரிமைகளும் இறைமையின் அங்கங்களாகும்.

இதேநேரம், மூதூரில் பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனமொன்றின் 17 பணியாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் மூடி மறைக்கப்பார்க்கிறது. எப்போதும் உங்களால் அதை மூடி மறைத்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில், சர்வதேச விசாரணைகள் நடைபெறுகின்றன. உண்மைகள் எப்படியும் அம்பலமாகும்.

அத்துடன், சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் அது எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

இதேநேரம், தற்போதைய நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்காது. ஒன்று இந்த நாட்டில் சமமான மக்களாக வாழ்வோம். அல்லது தனித்து வாழ்வோம்.

மூதூர் இராணுவ நடவடிக்கையின் போது பலியான 261 பேர் குறித்து விபரங்களை நாம் இந்த சபைக்கும் சமர்ப்பித்திருந்தோம். இதில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்படாதது ஏனென தெரியவில்லை.

இதேநேரம், வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அவர்களது வரலாற்று உரிமை மிக்க சொந்த பூமியில் மீள்குடியேற்றப்பட வேண்டும்' என்றார்.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1326:2008-12-02-09-53-31&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    இனப் படு கொலையில் ஹிட்லரையும்,இடி அமினையும் விட மோசமாக விளங்கி நாடகமாடும் கொலைகார ராஜபக்சே உலக் அரங்கில் குற்றம் சாட்டப்படும் நாள் விரைவில் வரத்தான் போகிறது.
    இந்த அநியாயங்களை உலகெங்கும் பரப்புவதே உலகத் தமிழர்களின் உடனடிக் கடமை.
    பல மொழிகளிலும் பற்க்கட்டும் இந்தச் செய்தி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails