மிகவும் ரசியமாக காதும் காதும் வைத்தாற் போல் கைமாறுகிறது

சென்னையில் டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் இருந்து தேர்ந்ததெடுக்கப்பட்டத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அந்தப் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.

மிகவும் ரசியமாக காதும் காதும் வைத்தாற் போல் கைமாறுகிறது அந்தப் புத்தகம்.


அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தமிழ்ச் செய்தி நிறுவனம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டோம்.

ரொம்பவும் மெனக்கெட அவசியமில்லாமல் நமது கைகளுக்கு வந்து சேர்ந்தது, அந்தப் புத்தகம்.

சுமார் இருநூறு பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் தலைப்பு: LTTE in the eye of Tamil Nadu. பச்சைத் தமிழில் அதை மொழி பெயர்த்தால், ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப் புலிகள்’. ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் புலிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்று கருத்துக் கணிப்பு நடத்தி அதை அந்தப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். மாறாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகளில் வெளியான புலிகள் பற்றிய செய்திகளைத் தேடித் தேடி கத்தரித்து எடுத்து அதையே ஸ்கேன் செய்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இதைப் புத்தகம் என்று சொல்வதைவிட, துணுக்குத் தோரணம் என்று சொல்வது சரியாக இருக்கும். அப்படி சொல்வதால் அவர்கள் மனம் வேதனைப்படும் என்றால், அதை கோப்பு என்று நாகரீகமாகச் சொல்லிக் கொள்ளலாம். செய்திகள் மட்டுமின்றி, அந்தப் பத்திரிகைகளில் வெளியான தலையங்கங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

புலிகள் பற்றி பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்யக் கோரி காங்கிரஸார் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ராமேஸ்வரத்தில் இருந்து தப்ப முயன்ற விடுதலைப் புலிகள், தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்ற புலிகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளே அதில் உள்ளன. பால்ரஸ் குண்டுகள் கடத்திய புலிகள் கைது என்ற செய்திகளும் இடம் பிடித்திருக்கின்றன. ஒரே செய்தியை வெவ்வேறு தமிழ், ஆங்கில நாளேடுகளில் இருந்து தொகுத்துத் தந்து தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் தினமலரும். தினமணியும் ‘நானா, நீயா’ என்ற ரீதியில் போட்டிபோட்டுக் கொண்டு இந்தப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கினறன. ஆங்கிலப் பத்திரிகைகளைப் பொறுத்த வரையில், ஹிந்துவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களும் முன்னணியில் உள்ளன. மற்றபடி இதில் வேறெந்த விவகாரம் பற்றியும் அலசப்படவில்லை. அதாவது நம் கைகளைக் கொண்டு நம்மையே குத்தும் இழிச் செயலில் வழக்கம் போல் ஈடுபட்டிருக்கிறது, இலங்கை அரசு என்றுதான் இதைக் குறிப்பிடமுடியும்.

இந்தப் புத்தகம் இலங்கை வெளியுறவுத் துறை வெளியிட்டது. இதில் எங்களுக்கொன்றும் தொடர்பில்லை என்கிறார், தென்னிந்தியாவுக்கான (சென்னையில் உள்ள) இலங்கைத் துணைத் தூதர் அம்சா. தூதரகம் என்பதே வெளியுறவுத் துறையின் கீழ் இயங்கும் துறை எனக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே. அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் புலிகள் தொடர்பான சரியாகச் சொன்னால் எதிரான செய்திகளை ஒன்றுவிடாமல் தொகுக்க முடிந்திருக்கிறது. மேலும் பத்திரிகைகளில் வந்ததைத் தானே தொகுத்திருக்கிறோம். எங்கள் கருத்தென்று அறிமுகவுரை மட்டுமே வெளியாகியிருக்கிறது என்கிறார் இதே அம்சா.

அது சரி. அந்தப் பத்திரிகைகளில் வந்ததைத் தொகுத்தது மட்டுமா நீங்கள்? அந்தச் செய்திகளைப் பத்திரிகைகளில் பிரசுரிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்னென்ன?

இந்தச் செய்திகளை எழுதி வெளிவரக் காரணமாக இருந்த நிருபர்கள் எப்படியெல்லாம் ‘கவனி’க்கப்பட்டார்? என்பது சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்க சுவருக்குக் கூடத் தெரியுமே. நிருபர்களுக்கு தங்க பிரேஸ் லெட்டும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு வீடும் காரும் சிங்களப் பணத்தில் வாங்கிக் கொடுத்தற்கு இந்தப் புத்தகமே சாட்சி!

ஏன் இதே பத்திரிகைகளில் புலிகள் மற்றும் சிங்கள அரசு பற்றிய நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோரின் அறிக்கைகள், பேட்டிகள் வெளியானதே இல்லையா? அவற்றையும் தொகுத்திருக்கலாமே? இந்திய மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கியதையும் சுட்டுக் கொன்றதையும் கண்டித்து எத்தனை எத்தனைப் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் அந்தச் செய்திகள் எல்லாம் எந்தப் பத்திரிகைகளிலும் வரவில்லையா? அல்லது உங்களுக்குத் தான் கண் தெரியவில்லையா?

இலங்கையில் இருக்கும் புலிகள் பற்றிய தமிழகச் செய்திகளைத் தொகுத்த நீங்கள், அதே பத்திரிகைகளில் ஈழத் தமிழர்களைத் தாக்கும் சிங்கள அரசுக்கு எதிரான செய்திகளையும் கட்டுரைகளையும், தொகுத்திருந்தால் இந்தப் புத்தகத்தை பழ.நெடுமாறன் போன்றவர்களே வாங்கி பலருக்கும் பரிசளித்திருப்பார்களே?

இத்தனைக்கும் மகுடம் வைத்தாற் போல் கவர்ச்சிகரமாக மிகந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தை இலவசமாக வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது உங்களுக்கு? என்ற நமது கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்காது என்று தெரியும்.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரம், இங்குள்ள தமிழீழ ஆதரவாளர்களின் தொலைப்பேசி பேச்சுகளை ஒட்டுக் கேட்பதாக வெளியான தகவல்கள் இந்தப் புத்தக வெளியீடு உறுதி செய்யும் விதத்தில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் தமிழர்களை அழித்துக் கொண்டே தாய்த் தமிழகத்திலும் தமிழர்களுக்கு எதிரான சதி வேலைகளில் சிங்கள அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகத்தில் உள்ள சில பத்திரிகைகளே உடந்தை என்பதை சொல்லவே நா கூசுகிறது.

இனி பத்திரிகைகளில் வரும் செய்தியை கத்தரித்து சேகரிக்கும் வேலையை விட்டுவிட்டு, விசா வழங்கும் வேலையை மட்டும செய்வது சாலச் சிறந்தது.

நன்றி http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1284:2008-11-28-17-42-44&catid=51:2008-11-26-13-26-46&Itemid=111

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails