தலாய்லாமாவுக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா?

http://subavee.wordpress.com/2008/10/14/p5/

தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் விடுதலை வரலாறு தான், இருபதாம் நூற்றாண்டின் வரலாறு ஆகும். தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாற்றில், திபெத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. சியாங்கேஷேக் ஆட்சிக் காலத்திலிருந்தே, தலாய்லாமா தலைமையில் திபெத் மக்கள் போராடி வருகின்றனர். திபெத் இன்று வரை, சீனாவின் ஒரு பகுதியாகவே இருக்கின்ற தெனினும், அவர்கள் தங்களைத் தனி நாட்டினராகவே ஓங்கி ஒலிக்கின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற உலக நாடுகள் பலவும் கூட, திபெத் மக்களுக்கும், தலாய்லாமாவிற்கும் மறைமுகமான ஆதரவைப் பல ஆண்டுகளாகக் காட்டி வருகின்றன. இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த வேளையில், அமெரிக்க அதிபராக இருந்த பிராங்ளின் ரூஸ்வெல்ட், தங்களின் நேச நாடுகளுக்குச் சில அதிகாரிகளை அனுப்பி, அரசையும், மக்களையும் சந்தித்து போர் பற்றிய கருத்துகளை அறிந்து வரப் பணித்திருந்தார். சீனாவிற்கு, இலியோ டால்ஸ்டாய், ப்ரூக் டோலன் ஆகிய இரு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அவர்கள் சீன அரசோடும், மக்களோடும் கலந்து உரையாடினர். எனினும், திபெத் பகுதிக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை.

இது குறித்து, சீன அதிபர் சியாங்கே ஷேக் அமெரிக்க அரசுக்கு எழுதும்போது, அப்பகுதிக்குள் நுழைவதற்குத் தலாய்லாமாவைத் தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டார்கள். அதன்படி, அதிபர் ரூஸ்வெல்ட், 1942 ஜுலை 3ஆம் நாள், தலாய்லாமாவிற்குத் தனியே ஒரு மடல் எழுதினார். அதன்பின்பே அவர்கள், திபெத் பகுதிக்குள் நுழைய முடிந்தது. இந்நிலை, திபெத்திற்கு அமெரிக்க அரசு அளித்த மறைமுக அங்கீகாரம் என்பதை மறுக்க முடியாது.

புரட்சிக்குப் பின்னர், மாவோ சீன அதிபர் ஆனார். அப்போது, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் திபெத்திற்கு மேலும் தங்கள் ஆதரவைக் காட்டினர். அதனை மாவோ விரும்பவில்லை. தங்கள் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கவே, மேலை நாடுகள் இவ்விதம் செய்வதாக எண்ணினார். சிக்கல் வளர்ந்துகொண்டே இருந்தது. சீனத்தின் செம்படையை எதிர்கொள்ள இயலாமல், 1959ஆம் ஆண்டு, தலாய்லாமா தன் ஆதரவாளர்கள் சிலருடன் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.

இந்தியா அவரை விருந்தினராக (அகதியாக அன்று) வரவேற்றது. இமாசலப் பிரதேசத்தில், ‘தருமசாலா’ என்னும் இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது. இன்றுவரை தலாய்லாமா அங்குதான் உள்ளார். புலம்பெயர்ந்த அரசாகவே (Government in exile) அது கருதப்படுகிறது. அதன் விளைவாகவே, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் பகை முற்றி, 1960களின் தொடக்கத்தில் அது போராகவும் வெடித்தது.

மாவோ ஆட்சியின் போது இன்னொரு நிகழ்வும் நடந்தேறியது. திபெத்திலிருந்து ஒரு வணிகக் குழுவைத் தலாய்லாமா வெளிநாடுகளுக்கு அனுப்பினார். அவர்கள் கைகளில் வைத்திருந்தது, திபெத்திய கடவுச்சீட்டு (Tibetian Passport). திபெத் என்று ஒரு நாடு இன்றுவரை உருவாகவில்லை. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் கடவுச் சீட்டை வழங்கினர். அவர்கள் அப்படி வழங்கியது கூட தவறு இல்லை. அதனைப் பிரிட்டன் அரசு ஏற்றுக்கொண்டதே, அதுதான் வியப்பு. அப்போது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆங்காங் நாட்டிற்கு, அந்தக் குழு பயணப்பட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் அதனை ஏற்று, மூன்று மாத கால அனுமதியும் (விசா) கொடுத்தனர்.

1998ஆம் ஆண்டு தலாய்லாமா ஒரு பேட்டியில், ஆண்டுதோறும் அமெரிக்கா பல ஆயிரம் டாலர்களைத் தருமசாலாவில் உள்ள அவர்களின் அலுவலகத்திற்குக் கொடுத்து உதவி வருவதாகக் கூறியுள்ளார். ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகள் உதவுவதில் நமக்கு ஒன்றும் வருத்தமில்லை, மகிழ்ச்சியே. ஆனால், இந்தப் போக்கை தமிழ்ஈழ மக்களின் போராட்டத்தில் மட்டும் காட்ட மறுப்பது ஏன் என்ற கேள்விதான் நம் நெஞ்சை அறுக்கிறது.

இலங்கையின் முழுஅரசுரிமை (இறையாண்மை)யும், ஒருமைப்பாடும் சிதைந்துவிடக் கூடாது என்று கவலைப்படும் உலக நாடுகள், சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்து ஏன் கவலைப்படவில்லை? தலாய்லாமாவிற்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதி என்பது சரிதானா?

தலாய்லாமாவிற்கு ரூஸ்வெல்ட் எழுதிய மடலில், இரண்டாம் உலகப் போரில், தங்கள் கோட்பாட்டில் நியாயமும், திறமையில் நிறைவும், உறுதியில் அசைவின்மையும் இருப்பதால் வெற்றி நிச்சயம் (“We shall be victorious because our cause is just, our capacity is adequate and our determination is unshakable”) என்று எழுதியுள்ளார். இந்தக் கூற்று அமெரிக்கர்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா? போராடும் ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தாதா? தமிழீழ மக்களின் கோட்பாடும் நியாயமானது, அவர்களின் திறமை போதுமானது, உறுதி குலைக்கப்பட முடியாதது. எனவே, அவர்களின் வெற்றியும் நிச்சயம் என்பதை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும்.

நன்றி: சுப.வீரபாண்டியன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails