ஈழத்தமிழரின் உருக்கமான கடிதம் நன்றி தெரிவித்து
Posted On Friday, 7 November 2008 at at 15:25 by Mikeஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டு வரும் ஆதரவு குரல்களுக்கு, போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் ஈழத் தமிழர்கள்.
உங்கள் பார்வைக்கு அது…
”ஈழத் தமிழர்களாகிய எங்கள் மீது நேசம் வைத்திருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் முதலில் எங்கள் அனைத்து மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்றி என்ற வார்த்தை எனது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்றது. நன்றி என்ற வார்த்தையைக் கூறி உங்களை எம்மிலிருந்து பிரித்துப் பார்க்கிறோம் என்று வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் எங்கள் தொப்பிள் கொடி உறவுகள். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எம்மக்களின் துயர் துடைத்து நிம்மதியான வாழ்வு அவர்களுக்கு கிட்டவேண்டும் என்பதில் உறுதியோடு நின்று செயற்படும் உங்களின் இந்த உணர்வு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நாளுக்கு நாள் எங்கள் மக்களுக்காக நீங்கள் நடத்தும் போராட்டங்கள் எங்கள் இதயங்களை சிலிர்க்க வைக்கிறது. மாணவர், வழக்கறிஞர், ஆசிரியர், திரை உலகத்தினர் இன்னும் வேறு துறை சார்ந்தவர்களென என்று படிப்படியாக மனிதநேயம் மிக்க அனைத்து தமிழ் மக்களும் எங்கள் மக்களின் வாழ்வை மீட்டுத்தர உங்களாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறீர்கள். கட்சி பேதங்களை ஒதுக்கி கூடுமானவரை எல்லோரும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள்.
நிச்சயமாக உங்கள் அனைவரின் ஒன்றிணைந்த இந்தப் போராட்டங்களை எங்கள் மக்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை கொண்டு வரும் என்று திடமாக நம்புகிறோம் இது உணர்ச்சிவசப்பட்டு கூறும் வார்த்தையல்ல. எங்கள் உள்ளத்திலிருந்து எழும் உண்மையான நம்பிக்கையான வார்த்தை.
அண்மைக் காலங்களில் எம்மக்கள் படும் அவலங்கள் உங்களை இந்த அளவுக்கு போராட வைத்துள்ளது. ஆனாலும் எங்கள் மண்ணில் காலம் காலமாக எங்கள் மக்கள் வாழ்வு சிதைக்கப்பட்ட ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அண்மையில் தான் மெல்லமெல்ல எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளின் சில துளிகளை காட்சி வடிவில் பார்க்கிறீர்கள்.
எங்கள் மக்கள் அனுபவிக்கும் துயர்களில் சில இவை:
பட்டினி:
இதனால் மரணங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மனவதைகளால் எத்தனை மனநோயாளிகள்? தனது குழந்தை பசியால் துடிதுடித்து அழும்போது அதற்கு ஒரு சிறு துளி ஆகாரம் கூட புகட்ட முடியவில்லையே எனப் பெற்ற தாய் துடித்தழும் அவலம், பசித்து துடித்து மரணத்தின் எல்லையைத் தொடும்போது பார்க்க மட்டுமே முடிந்து தாயால் பின்னர் சுயநினைவுடன் எப்படி வாழ மடியும்? இன்று பட்டினியால் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இதனைச் செய்தியாக பார்க்காமல் உடனிருந்து பார்ப்பது போல உணர்ந்தால் அந்த வலியும் வேதனையும் எல்லோருக்குமே புரியும். பாதைகளைப் பூட்டி, உணவுப்பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுப்பதோடு பொய்களையும் புனைகதைகளையும் சொல்லி உலகை ஏமாற்றும் சிங்கள அரசால் இனியும் எவ்வளவு காலம் நாங்கள் வதைபட வேண்டும்?
வைத்திய வசதி:
மருந்துப் பொருட்கள் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் எவ்வளவு அத்தியாவசிம் என்பதை எல்லோருமே அறிவீர்கள். ஏனென்றால் இன்று பெரும்பாலான மனிதர்கள் ஏதோ ஒரு நோயினாலன்றாலும் பாதிக்கப்பட்டுத்தான் வாழ்கிறார்கள். ஒரு வேளை மருந்து பாவிக்கத் தவறினாலே உயிரைப் பறி கொடுக்கும் நிலையில் கூட மக்கள் வாழ்கிறார்கள். இந்த நிலையில் எங்கள் மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை கிடைக்க விடாமல் தடை செய்யும் ஸ்ரீலங்கா அரசால் பலர் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனைவிட அண்மைக் காலங்களில் பாம்புக் கடியாலும் எம்மக்கள் இறக்கிறார்கள். வானிலிருந்து வீசப்படும் குண்டுகளால் ஒரு புறம், எறிகணைத் தாக்குதலால் இன்னொரு புறம் என மரணத்தை தழுவிக் கொள்ளும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த குண்டுவீச்சுத் தாக்குதலிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடி வீதிகளிலும், மரங்களுக்கு கீழுமென வாழும்போது பாம்பு என்றும் தேள் என்றும் விடமுள்ள ஜந்துக்களுக்கு பலியாகும் மக்களின் தொகையும் நிமிடத்துக்கு நிமிடம் அதகரிக்கின்றது. அண்மையில் வெறிநாய்க்கடிக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
காணாமல் போதல்:
எங்கள் உறவுகள் காணாமல் போதலும் பின்னர் பிணமாக வீதிகளில் வீசப்பட்டு கிடப்பதும் இன்று நாளாந்த நடவடிக்கைகளாகிவிட்டன. சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும் எமது உறவுகள் ஒவ்வொருநாள் விடியும்போதும் மிகுந்த அச்சத்துடன் தான் விழித்துக் கொள்கிறார்கள். இன்று யார் சுடப்படுவார்களோ என்ற அச்சத்துடன் தான் அவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் நகர்கின்றன. பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் திரும்பி வரும்வரை மனம் பதைபதைக்கும். வேலைக்குச் சென்ற கணவன் திரும்பி வருவானோ என்ற அச்சத்தில் தாய்மார், பரிதவிக்கும் பெற்றோர், வெளியே பள்ளிக்கு, வேலைக்கு சென்ற பெண்கள் இராணுவத்தின் பார்வையில் பட்டு என்ன பாடுபடப்போகின்றாளோ என மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழும் பெற்றோர் என எங்கள் நாளாந்த அவலங்களை தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இன்று எங்கள் பூமியில் எத்தனை மனிதப் புதைகுழிகள். எங்களின் உறவுகள் எத்தனை வதைப்பட்டு அதற்குள் புதைக்கப்பட்டிருப்பார்கள் என்று எல்லோரும் எண்ணிப்பாருங்கள்.
சமாதான காலம் எனக் கூறப்பட்ட காலங்களில் மட்டும் நாங்கள் இழந்த இழப்புகள் எண்ணிலாதவை. சமாதான காலத்திலேயே பெருமளவில் எமது மக்களைக் கொன்றவர்களுக்கு யுத்த காலங்களில் கொல்வது எவ்வளவு இலகுவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
இன்று நாளாந்தம் உயிர்ப்பலிகள்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுதல்.
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில் வானிலிருந்து வீசப்படும் குண்டுத்தாக்குதல்களாலும் எறிகணை வீச்சுகளாலும், கிளைமோர் தாக்குதலாலும் மக்கள் கொல்லப்படுதல் என எம்மக்கள் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள்.
இன்று வரை அரச பயங்கரவாதத்தால்
கொல்லப்பட்ட தமிழ்மக்கள் - 2,341
இடம் பெயர்ந்து அலையும் மக்கள் - 340,000
காணாமல் போனோர் - 1123
வெளியேற்றப்பட்டவர்கள் - 300,000
மீண்டும் ஒரு யுத்தநிறுத்தம் வந்தாலும் அப்போதும் நாங்கள் வதைக்கப்பட்டு கொல்லப்படுவோமேயல்லாமல் எம்மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கப் போவதில்லை.
எங்கள் மக்கள் சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்வதற்குரிய தீர்வு கிடைக்க வேண்டும். அந்த தீர்வு கிடைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் எமக்காக குரல் கொடுக்க வேண்டும். எங்கள் குரலோடு எங்கள் உறவுகளான உங்களின் குரலும் இணைந்து ஒலிக்கும்போதுதான் உலகின் செவிகளுக்கு கேட்கும். எங்கள் மண்ணில் இத்தனை அவலங்கள் நடந்து கொண்டிருந்தும் இன்னும் உலகநாடுகளுக்கு எதுவும் தெரியவில்லையே. அதனால் அவர்களின் செவிகளை ஊடுருவும் வண்ணம் எங்களுடன் இணைந்து நீங்கள் குரல் கொடுக்கவேண்டும் என அன்புடன் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகவல்கள் உத்தியோகபூர்வ தகவல்கள். இதற்குள் அடங்காமல் உள்ள மறைக்கப்பட்ட புள்ளிவிபரங்களும் எண்ணில்லாதவை.
அத்தோடு ஒவ்வொரு காரணங்கள் சொல்லி கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக அரசு சிறைக்குள் பல சித்திரைவதைகளுக்கு ஆளாகும் எம்மக்களின் தொகையும் கணக்கெடுக்கப்பட முடியாமல் உள்ளது. அந்த சிறைக்கூடங்களுக்குள்ளேயே வாழ்வு முடிக்கப்பட்டவர்களின் தொகையும் கணக்கெடுக்கப்பட முடியாதுள்ளது.
அதனால் மீண்டும் மீண்டும் உங்களுடன் கேட்டுக் கொள்வது இதனைத்தான்.
அதாவது தற்போது நடத்திவரும் அகிம்சாவழிப் போராட்டங்களை நீங்கள் நிறுத்திவிடக் கூடாது. எவரின் அரசியல் லாபங்களுக்கும் உங்கள் மானிட நேயத்தை அடகுவைத்து விடாதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியிலும் அமைப்புக்கள் ரீதியிலும் தொடர்ந்து எமக்காக போராட வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் ஒவ்வொருவராலும் முடியும். நிச்சயம் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் எங்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதோடு எங்கள் மக்கள் வாழ்வை மீட்டுத்தரும் என்று உறுதியோடு கூறுகிறோம்.
நன்றி
ஈழத்தமிழர்
Please have a look this video You tube
அவரவர்களுக்குப் பிடித்தத் தமிழ்நாட்டுத்
தலைவர்கள்,கலைத்துறையினர் போன்ற பலருக்கும் நன்றியும் ஒன்றாக இணைந்து
பாடு பட வேண்டுகோளும் தெரிவிப்பது மேலும் ஊக்கமளிக்கும்.