புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்



 

ஆசியாவின் மிக நீண்ட இலங்கையின் உள்நாட்டுப் போர் வன்முறையின் உச்சத்தை அடைந்துள்ளதாக பொஸ்டன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது.

ஆம் வன்முறை என்பது இப்போ அரசியல் ஆகி அந்த அரசியல் இராணுவ மயமாகி அந்த மையத்தில் இருந்து எழுகின்ற அனைத்துமே புலி எதிர்ப்பாகி மனிதத்தைப் பற்றி பேசுவதும் புலியாகி - பின் மாயமாகி - சடலமாக வெளித்தெரிகிறது.

மனித உரிமை பற்றிப் பேசாதே. உணவு இல்லை என்றால் உண்பதனைத் தவிர். மாறாக உணவு இல்லை எனக் கேளாதே. ஊடகசுதந்திரம் பற்றிப் பேசாதே சொல்பவற்றை அப்படியே கேள் இல்லாவிடின் மௌனித்திரு.  தவறுகள் நடந்தால் அது அப்படித்தான் எனச் சொல், தவறுகளைச் சுட்டிக் காட்டாதே. ஊழல் பற்றி, பெற்றோல் விலையேற்றம் பற்றி, மின்சாரம்பற்றி, எரிவாயுப் பற்றாக்குறைபற்றி, தண்ணீர்பற்றி பொருளாதார நெருக்கடிபற்றி எதைப்பற்றியும் பேசாதே. பேசினால் நிச்சயமாக நீ புலியாகத்தான் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்பவனாகத்தான் இருக்க வேண்டும்.

ஏறிகணைகள் வீசினால், விமானத் தாக்குதல் நடத்தினால் குண்டு மழை பொழிந்தால் அவற்றை ஏற்றுக் கொள். அல்லது பேசாதிரு. ஏனெனில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர். புலிகளின் இலக்குகள் மீதே இலங்கை விமானங்கள் குண்டுகளைப் போடும். ஆட்லறி, பல்குழல் பீரங்கிகள் கிளஸ்ரர் குண்டுகள் எல்லாம் புலிகளின் இலக்குகளையும் புலிகளையும் மட்டுமே தாக்கும். அவை மக்கள் குடியிருப்புக்களை, பொதுக் கட்டடங்களை, வைத்தியசாலைகளை, பாடசாலைகளை, ஆலயங்களை ஏன் பொதுமக்களை, சிறார்களைத் ஒருபோதும் தாக்கப் போவதில்லை.

அவ்வாறு பொதுமக்கள் குடியிருப்பில் தாக்குதல்கள் நிகழ்ந்தால் அங்கே நிச்சயமாக பொதுமக்கள் புலிகளாகியிருப்பார்கள். குழந்தைகள் மீது விமானமோ ஆட்ளறிகளோ பல்குளல் பீரங்கியோ குண்டு வீசியிருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தைகள் குழந்தைப் புலிகளாகத் தான் இருப்பார்கள். ஆலயங்கள் மீது குண்டுகள் வீசியிருந்தால் கடவுள் புலிகளை ஆதரித்திருப்பார். இல்லாவிடின் கடவுள் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பார். வைத்தியசாலைகள் என்ன வைத்தியசாலைகள் அவையும் புலிகளுக்கு சிகிச்சை அளித்தவைதானே அவையும் அழிக்கப்படவேண்டியவையே.


ஆம் பாடசாலைகள் மட்டும் விதிவிலக்கா வன்னியில் உள்ள இந்தப் புலிகள் பாடசாலைகளில் படித்தவர்கள் தானே, அதனால் அவையும் பயங்கரவாதத்தை ஆதரித்தவை தானே, அவற்றின் மீதும் வான்தாக்குதல் நடத்தப்பட வேண்டும் அவையும் அழிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சகஜமானவையே. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏன் எதற்கு எப்படி என்று கேளாதீர்கள்.

அப்படிக் கேட்பதானால் புலிகளையும் கேளுங்கள். புலிகளும் மக்களைக் கொன்றார்கள். புத்திஜீவிகளைக் கொன்றார்கள். ஆலயங்களைத் தாக்கினார்கள். தெற்கில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்கினார்கள். மாற்று இயக்கங்களை தடைசெய்தார்கள். ஆட்களைக் கடத்தினார்கள், காணாமல் போகச் செய்தார்கள், ஜனநாயகத்தை மறுத்தார்கள். இப்படி எல்லாவற்றையும் செய்தார்கள் அவர்களையும் கேளுங்கள். அப்படிக் கேட்காவிட்டால் நிச்சயமாக நீங்களும் புலிகளே. நீங்களும் பயங்கரவாதிகளே.

அதனால் உங்களைக் கடத்துவோம். காணாமல் போகச் செய்வோம். சுடுவோம். எவருக்கும் தெரியாமல் மின்சாரம் பாச்சி சாம்பராக்குவோம். ஏனென்றால் நீங்கள் புலிகள். இல்லாவிடின் புலிகளை ஆதரித்தவர்கள். இல்லாவிடின் புலிகளின் உறவினர்கள். அதுவும் இல்லாவிடின் புலிகளோடு படித்திருப்பீர்கள். இல்லாவிடின் புலிகளுக்கு தண்ணீர் சாப்பாடு கொடுத்திருப்பீர்கள். அல்லது புலிகளுக்கு பக்கத்தில் நின்று படம் எடுத்திருப்பீர்கள். ஆகக் குறைந்தது புலிகள் நின்ற இடத்திலாவது நின்றிருப்பீர்கள். வன்னியில், வடமராட்சியில், யாழ்ப்பாணத்தில், கஞ்சிக்குடிச்சாறில், வடக்கில் இல்லையாயின் கிழக்கில் பிறந்திருப்பீர்கள். ஆகக் குறைந்தது கொழும்பில் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் கூறியது போல் குறைந்தது நீங்கள் ஒரு தமிழராக இருப்பீர்கள். அப்படியாயின் நீங்கள் புலிகள்தானே.

அதனால் நாங்கள் உங்களை வெள்ளை வானில்  கடத்துவோம். காணாமல் போகச் செய்வோம். சித்திரவதை செய்வோம். சுடுவோம். ஆனாதரவாக சடலமாக வீசுவோம். காரணம் நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான தேசத்தை மண்ணை மீட்கும் போரை நீங்கள் ஆதரிக்கவில்லை. ஏனென்றால் நீங்கள் புலிகள்.

 

வடக்கில் யாழ்ப்பாணத்தில், வவுனியாவில், மன்னாரில் ஏன் கிளிநொச்சி முல்லைத்தீவைப் பிடித்தால் அங்கும் இவற்றை தினசரி செவ்வோம். ஏன் கிழக்கில் மட்டக்களப்பில், அம்பாறையில், திருமலையில் குடும்பம் குடும்பமாகச் சுடுவோம். கடத்துவோம். கொழும்பில் அதனை அண்மித்த பகுதிகளில் மலையகத்தில் தமிழர்கள் நாமம் இருக்கும் இடம்மெல்லாம் இவற்றைச் செய்வோம். ஏனென்று கேளாதீர்கள். நாம் புலிகள் என சந்தேகித்தால் நிச்சயமாக நீங்கள் புலிகள்தான்.

இவற்றை நிறுத்த முடியாது. நிறுத்தும்படி கேளாதீர்கள். அவ்வாறு கேட்பதானால் புலிகளிடம் கேளுங்கள். அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் நாங்களும் நிறுத்துகிறோம். நாங்கள் உள்ளிட்ட எங்களோடு இருக்கின்ற உங்கள் தமிழ் அமைப்புக்களும் நிறுத்துவார்கள். 


இல்லையாயின் அது பற்றி யோசிக்காதீர்கள். ஏனென்றால் தெற்கில் மனிதம் பற்றி பேசும் எம்மவரையே நாம் புலிகளாக்கிவிட்டோம். அவர்கள் சிங்களப் புலிகள்.

வெளிநாட்டவர்களிடம் போகாதீர்கள். ஏனென்றால் ஜநாவை, சிறுவர் நிதியத்தை, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை, உலக உணவுஸ்தாபனத்தை சர்வதேச தொண்டு நிறுவனங்களை எல்லோரையுமே நாங்கள் வெள்ளைப் புலிகளாக்கிவிட்டோம். ஏனென்றால் அவர்களும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.


உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. நீங்கள் வந்தேறு குடிகள். இரண்டாம் தரப் பிரஜைகள் கிடைப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது நாம் தருபவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். எங்களோடு சேர்ந்து வாழுங்கள். இதனை நாங்கள் மட்டும் கூறவில்லை. கிழக்கில் உங்கள் தலைவர்களே கூறுகிறார்கள். தமக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவை இல்லையென. கிழக்கின் தலைவர்கள் கூறுகின்றார்கள் நாங்கள் மாறிவிட்டோம் பெருந்தன்மையானவர்கள் என. . பாருங்களேன் அவர்கள் எங்கள் கட்சியிலேயே எங்கள் சின்னத்திலேயே தேர்தலில் நிற்கின்றார்கள்.

கிழக்கில் மட்டும் அவ்வாறு கூறவில்லை. வடக்கிலும் உள்ள உங்கள் தலைவர்கள் சிலர் கூறுகின்றார்கள் இனப்படுகொலை என்பது இந்த நாட்டில் இல்லை என்று. புலிப்பயங்கரவாதம் மட்டும்தான் நாட்டில் பிரச்சினை என்கிறார்கள். வடக்கில் வசந்தம் வீசுகிறது என்கிறார்கள்.இன்று நேற்று நேற்று முன்தினம் என நாளாந்தம் வடக்கு கிழக்கில் கடத்தப்படுகின்ற காணாமல் போகின்ற கொல்லப்படுகின்றவர்கள் புலிகளாகத்தான் இருப்பார்கள் என அவர்களில் பலரும் பேசுகிறார்கள். அதனால் புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை இவை தொடரத்தான் போகிறது. அவ்வாறு புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் போது நாட்டில் பிரச்சினைகளும் ஒழிக்கப்பட்டு விடும். ஏனென்றால் அப்போது நாட்டில் நீங்களும் இல்லாது ஒழிக்கப்பட்டு விடுவீர்கள்.புதிய சகாப்தத்தில் உங்கள் சந்ததி மீண்டும் எங்கள் அடிமைகளாக வாழ்வார்கள்.


Posted in |

2 comments:

  1. Bibiliobibuli Says:

    இதன் ஆங்கில வடிவத்தை நான் படித்ததாக நினைவு. ஈழவிடுதலையில் சர்வதேசமும் முக்காலமும் (நடந்தது, நடப்பது, நடக்கப்போவது) உணர்ந்தவர்கள் தான். ஆனால், யாருமே அதில் பொதிந்திருக்கும் உண்மையை, எங்களின் அவலத்தை இதயசுத்தியோடு பேசுவதில்லை. அப்படி யாராவது பேசுவார்களா? எல்லோருமே எரிகிற வீட்டில் திருடுபவர்கள் போல் தானே நடந்து கொள்கிறார்கள்.

  2. Mike Says:

    வருகைக்கு நன்றி ரதி அவர்களே, தட்டி கேட்போம் இவர்களை, வாருங்கள். உலகம் ஒரு நாள் நம் பக்கம் வரத்தான் போகிறது

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails