சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் !!!

தேமதுரத் தமிழோசையை உலகம் எல்லாம் ஓங்கி ஒலிக்கச் செய்வோம்!' என்ற முழக்கத்துடன் கடந்த டிசம்பர் 7,8 மற்றும் 9 தேதிகளில் 'முத்தமிழ் முதிரம்' என்ற பெயரில் தமிழுக்கு விழா எடுத்திருக்கிறார்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தமிழ் மன்ற மாணவர்கள்.
பொதுவாக ஜீன்ஸ், டி-ஷர்ட், செல்போன், ஐ-பாட் என்று பாலீஷாக வலம் வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அன்றைய தினம் பட்டு வேட்டி-சட்டை, பட்டுப் புடவை என்று பாந்தமாக உலா வர... அரங்கம் முழுக்க இன்ப அதிர்ச்சி. தமிழகம் முழுவதிலும் இருந்து 42 கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்துகொண்ட இவ் விழாவில், 'திரையாய்த் தூரிகைகள்' 'தமிழ் வாசி... தமிழாய் வாசி!', 'சித்திரச் சிரிப்பொலி', 'யாதும் தமிழே', 'ஆழித் தமிழரால்...' என்று போட்டியின் தலைப்புகளிலேயே தமிழ்த் தாண்டவம். மருத்துவ மாணவர்கள் தங்களின் படைப்புகளை 'விடியல்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்கள். "6,900 மொழிகள் பேசப்படும் இவ்வுலகில் 94 குடும்ப மொழி களுக்கு மட்டுமே மிகச் சிறந்த சரித்திரம் உண்டு. அதிலும் 10 மொழிக் குடும்பங்கள்தான் தற்போது உலகை ஆட்சி செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் தமிழ் மொழி!" என்பது தமிழுக்கான புகழாரம்.
தமிழ் ஆர்வலரான பழ.கருப்பையா, "முழுக்க முழுக்கத் தமிழிலேயே இவ்விழாவுக்கான அழைப்பிதழை மாணவர்கள் வடிவமைத்திருப்பது, 'மெள்ளத் தமிழினிச் சாகும்' என்ற அச்சத்தைத் துடைத்தெறிகிறது!" என்று மகிழ்ந்து நெகிழ்ந்தார்.

இலங்கையில் இருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் மருத்துவப் படிப்புகளைத் தமிழிலேயே படிக்கலாம் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தமிழார்வக் கோரிக்கை. மூன்று நாள் நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக, 'சாகும் வரை தமிழ் படித்துச் சாவோம். சாம்பலான பின்னும் தமிழாய் மணப்போம்!' என்கிற உறுதியுடன் தமிழ் பரப்பக் கலைந்தனர் மாணவர்கள்!

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails