ஐயோ…! இந்தியா நாசமாப் போக…
Posted On Tuesday, 24 November 2009 at at 11:01 by Mikeஇந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம்.
இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் மேலாக யார் மனதையாவது காயப்படுத்துமானால் வருந்துகின்றோம்.
- 4tamilmedia Team
"ஐயோ…! இந்தியா நாசமாப் போக.."
இந்த வாசகத்தைக் கேட்டதும் உங்களுக்குப் பதற்றம் வருகிறதா..? பெருங்குரலெடுத்து ஒப்பாரிவைத்த அந்தப் பெண் திடீரென இப்படிக் கத்தினாள். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆனால் அந்த அபலைத் தாயின் கதறலால் அதிர்ந்து போனேன். ஈழத்து மக்கள் பலரின் மனதிலும், இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ்மக்கள் குறித்துச் செயற்படும் விதம் பற்றி அதிருப்தியான மனநிலை காணப்பட்டாலும் கூட, யாரும் வாய்விட்டுச் சொல்லாத வாசகங்கள் அவை. ஆனால் வன்னியிலிருந்து கதறியழுத ஒரு தாயின் வாயிலிருந்து வந்து விழுந்த வாசகங்கள் இவை.
இன்று…மாலையில் களநிலைச் செய்திகளைச் சேகரிக்கச் சென்று கொண்டிருந்த போது, " ஐயோ…! இந்தியா நாசமாப் போக.." என்ற அந்த அபலைத் தாயின் அலறல் கேட்டது. சுற்றி நின்றவர்களிடம் விபரம் கேட்டபோது, மூன்று பிள்ளைகளையும், தன் முழங்காலுக்குக் கீழேயுள்ள காற்பகுதியையும், இழந்துவிட்டஒரு பெண்ணின் ஆவேசமான கதறல் அது எனத் தெரிய வந்தது.
எண்ணிப் பார்க்கின்றேன். உண்மையில் ஈழத்துமக்களின் மனங்களில் இந்தியா குறித்த நேசம் இப்படியாகவா இருந்தது ?.
இந்தியா எமது அன்னைபூமி என்பார் சிலர். ஆன்மீக பூமி என்பார் சிலர். அந்த மண்ணில் ஒரு தரம் கால் பதித்தால் எந்த மனிதனது கவலைகளும் பறந்து போய்விடும் என்று ஒரு காலத்தில் பலர் சொல்லி மகிழ்வதைக் கேட்டிருக்கின்றேன். ஈழவிடுதலைப் போராட்டம் முகிழ்ந்த போதுகளில் கூட, இலங்கைஅரசு சொல்வதையோ, ஏன் விடுதலை இயக்கங்கள் சொல்வதையோ எம் மக்கள் அதிகம் நம்பியதில்லை. இந்தியா என்ற தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, மாநிலச் செய்திகள் கேட்கும் அவர்களின் ஆவலில் தெரியும்.
இந்தியாவின் வெற்றிகள், வேதனைகள் அத்தனையையும், இந்தியமக்கள் எவ்விதம் அனுபவித்தார்களோ.. அப்படியே அனுபவித்தவர்கள். ஈழமக்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி மறைந்தபோது, இந்தியாவிலும் தமிழகத்திலும் எத்துனைபேர் அழுதார்களோ தெரியாது. ஆனால் ஈழத்தில் அத்தனைபேரும் அழுதார்கள். எத்தனையோ தாய்மார், அன்னையின் அந்திமக் கிரிகைககள் முடியும் மட்டும் உண்ணாதிருந்தார்கள். அத்தனை பாசமிக்க மக்களின் மத்தியிலிருந்ததான் இன்று இப்படியொரு கதறல்.
இந்திய உறவுகளே!
இந்தக் கதறலின் வலி உங்களுக்குப் புரியவில்லையா. புரிந்தும் வாழாதிருக்கின்றீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ.. அப்படியெல்லாம் சொல்லியாயிற்று. இந்திய மத்திய அரசு என்ன செய்கின்றது என்பது, தமிழகத்தின் கடைநிலை மாந்தனுக்கும் புரிகிறது, எறிகணைகளின் வீச்சுக்களில் எரிந்து கொண்டிருக்கும் ஈழத்து மக்களுக்கும் புரிகிறது. ஆனாலும், தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தலைவர்களுக்கு மட்டும் புரியாமல் போய்விடுகிறது.
படித்த மேதாவிகள், பல்லிளித்துச் சொல்கிறார்கள் இந்தியா எப்போதும் நல்லதே செய்யுமென்று. உங்கள் கறுப்புக் கண்ணாடிகள் கண்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தோம், ஆனால் மனதுக்கும் கூட என்பதை உணர்ந்துகொள்ளாதிருந்து விட்டோம். இந்திய மத்திய அரசின் செய்கை என்னவென்று உங்கள் எல்லோர்க்கும் புரிகிறது. ஆனால், உங்கள் பிராந்திய வல்லரசெனும் பெருங்கனவில், ஈழத்தமிழினத்தை அழிக்கும் முயற்சிகளை ஆராதிக்கின்றீர்கள். ஒன்று மட்டும் சொல்ல ஆசை. நீதிக்குப் பிழையான இந்த நெறிமுறையால், நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடந்துவிடக் கூடும். ஏனென்றால், அரசியலில் நீங்கள் கூட்டு வைத்திருக்கும் கொடுங் சிங்கங்கள் என்பதற்குமப்பால், 'ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும்' என ஏதோஓரு நம்பிக்கை மொழி எங்கள் மொழியில் உண்டாமே. அது சத்தியமான வார்த்தையெனில், உங்கள் 'அக்னி'களுக்கும், 'பிருது'விகளுக்கும், அப்பால் ஏதோ ஒன்று உங்களை இல்லாது செய்யும் என்ற நம்பிக்கையில் கத்தியிருக்கின்றாள் அந்த அபலை. இன்னும் சொல்வதானால் ஏதுமற்றவள் அழுது குழறி, ஐயோ எனச் சொல்லி இட்டிருப்பது சபதம் அல்ல சாபம்.
- காந்தி