முத்துகுமாருக்கு வீரவணக்கம் தாயக தமிழனின் முதல் வீர வணக்கம்! – தமிழன்பன்

எழுதியவர்கனி on November 19, 2009
 
salute_muththukkumar
 
ஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை 'வீர வணக்கம்'. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழப் போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.

[இது முத்துகுமரன் மரணத்தின் பொழுது  எழுதியது. முத்துகுமரன் பிறந்தநாள் என்பதால் இதனை இன்று(19/11/2009) காலத்தின் தேவை கருதி மீண்டும் மீனகம் தளத்தில் வெளியிடுகிறோம்.]

வரலாறு திரும்புகிறது தாயக தமிழகத்தில் வீரவணக்கம் என்ற வார்த்தையை இன உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவனும் உச்சரிக்கும் தருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது மாவீரன் முத்துகுமாரின் வீரச்சாவு. தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது நம் சகசகோதரன் முத்துகுமாரின் 'இறுதி அறிக்கை'. தன்மானமுள்ள அனைத்து தமிழனுன் தயக்கம் இல்லாமல் உச்சரிக்கும் வார்த்தை 'வீரவணக்கம் வீரவணக்கம்'.

சுயநல தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடி தமிழனை குழப்பியதால் ஈழப்போராட்டம் வழுவிழந்து அணைந்த தீபமான பொழுது. தன்னையே திரியாக்கி மீண்டும் அந்த தீபத்தை சுடர்விட்டு ஏறிய செய்திருக்கிறான் முத்துகுமார். தாயக தமிழம் தள்ளாடிய வேளையில் போராட்டபாதைக்கு அடித்தளம் அமைத்து நம்மை வழிநடத்தி செல்கிறது முத்துகுமார் தன் சாவுக்கு முன் எழுதிய தமிழர்களுக்கான உயில்

தோழர் முத்துகுமாரின் மரணத்தை வெறும் தற்கொலை என்றோ கோழைத்தனமான செயல் என்றோ அவசரத்தில் எடுத்த முடிவேன்றோ யாரேனும் சொல்வார்களேயானால் அவர்கள் முகத்தில் அறைந்தது போலே மரண நேரத்தில் 'காவியம்' படைத்து சென்றிருக்கிறான் முத்துகுமார். இது அவரசரத்தில் எடுத்த முடிவுகள் அல்ல தோழர்களே! மிக தெளிவான சிந்தனையாளன் எடுத்த தீர்க்கமான முடிவே இது என்பதற்கு அவன் அறிக்கையே சாட்சி. மரணத்தை தீர்மானித்த எவனும் இதுபோலே தெளிவான கடிதத்தை எழுதிட முடியாது என்பதே உண்மை. கடிதத்தின் ஒருவரியை கூட படித்திடாமல் சிலர் இதை நாம் ஆதரிக்க கூடாது என்று உளருவது வேதனைக்குரியது.

இந்த வீரமரணத்தை கடந்த காலங்களோடு ஒப்பிடும் பொழுது ஈழப்போராளி திலீபனோடும் தோழர் பகத் சிங்கும் நம் நினைவில் நிழலாடுகிறார்கள். திலீபனின் தண்ணீரும் அருந்தாத உண்ணாவிரதம் பரவலாக ஈழப்போராட்டத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கொண்ட லட்சியத்திற்காக உண்ணா நோம்பில் உயிரைவிட்ட திலீபனின் மரணம் அகிம்சை போராட்டம் தீர்வாகாது என்ற உண்மையை உணர்த்தியதோடு போராட்டத்தில் போராளிகளின் மன உரத்தை உலகிற்கு உணர்த்தியது. மரணத்தை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் தன் போராட்டத்தின் உண்மையை உணத்த மரணத்திற்கு முந்தைய நாளில் கடிதம் எழுதிய பகத்சிங்கின் வீரம் மாந்த சமூகத்தை வியப்பில் ஆழ்த்தியதோடு இல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவாக வீறு கொண்டு எழும்படி இளைஞர்களை தூண்டியது. தான் வீழ்ந்தாலும் தன் கொள்கைகள் மேலே மேலே செல்ல அவரது எழுத்துக்கள் பயன்பட்டது.

இந்த இருவரின் வீரமும் தோழர் முத்துகுமாரிடம் ஒருங்கே அமைந்து இருக்கிறது. இருவரோடும் மரணத்தை தழுவிய முறையில் வேணுமெனில் முத்துகுமார் மாறுபடலாமே அன்றி கொள்கையை முன்னெடுத்து செல்வதில் இருவரின் ஒன்றுபட்ட உருவமாகவே தெரிகிறார் முத்துக்குமார்.

மேலும் பகத்சிங்கின் தந்தை கொடுக்கவிருந்த கருணைமனு தனது போராட்டத்தை இழிவு படுத்துவதாக கூறி மறுத்த செயலும். தமிழக அரசு அறுவித்த கருணை தொகையை மறுத்த முத்துகுமாரின் தந்தையின் செயலும் வேறுவேறு அல்ல.

தோழர் முத்துகுமாரின் அறிக்கையை தமிழகம் மற்றுமன்று உலகெங்கும் கொண்டு சேர்க்கும் சேவையை தமிழ் பற்றாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.கட்சி சார்பில்லாத சாதி, சார்பில்லாத தமிழர்கள் முத்துகுமாரின் தியாகத்திற்கு வீரவணக்கம் செய்துகொண்டிருக்கின்றனர். முத்துகுமாரின் மரணத்தை தொடர்ந்து அவரது ஆசைப்படி அவரது உடலை சட்டகல்லூரி மாணவர்கள் கைபற்றியதோடு அல்லாமல் கட்சிக்காரர்களோ சாதிசங்கத்தினரோ நெருங்காமல் அரண் போல் காத்தனர். மகஇக தோழர்கள் கட்டுகோப்போடு இறுதிஊர்வலம் வரை கோசங்கள் எழுப்பி உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தலைவர்கள் வழக்கம் போலே ஆளும் தரப்பிற்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் மாணவர்கள் மீது அந்த கருத்துக்களை திணிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை என்பதை அங்கு காண முடிந்தது. உணர்ச்சி பிழம்பாக இருந்த மாணவர்கள் முத்துகுமாரின் உடலை துருப்பு சீட்டாக வைத்து போராட்டத்தை தொடர நினைத்த பொழுது பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியும் தங்களின் ஆளுவர்க்கத்தின் ஆதரவான போக்கையே வெளிப்படுத்தியது நாம் கவனிக்க வேண்டியது.முத்துகுமாரின் வேண்டுகோள்கள் அனைத்து தரப்பு மக்களையும் சற்று கவனிக்க செய்திருக்கிறது. மெத்த படித்த மேதைகளுக்கு முத்துகுமாரின் வேண்டுகோள்கள் 'படிக்க' நேரமில்லாத அளவுக்கு வேலைப்பழு வந்து விட்ட நிலையில் பாமர மக்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர் சிங்கள காதலர்களுக்கும் குரல் கொடுத்த முத்துகுமாரின் பறந்துவிரிந்த பார்வை பற்றியும் தமிழக மீனவ படுகொலைக்கு நியாயம் கேட்ட பாங்கும். இணையம் பயன்படுத்தும் மேதாவிகளை சென்றடையாத முத்துகுமாரனின் கோரிக்கைகள் எம்மின பாட்டாளிவர்க்கத்தின் காதுகளை சென்றடைந்தது ஆச்சரியமே!
இறுதி ஊர்வலத்தில் வீரவணக்கம் செலுத்திய மாணவர் படைகள் மத்திய மாநில அரசுகளின் தமிழர் விரோத போக்கினை கண்டித்து எழுப்பிய கோசங்கள் ஆளும்வர்க்கத்தை நடுநடுங்க வைத்திருக்கிறது அதற்க்கு கல்லூரி மூடல் உத்தரவே சான்று. கட்டுக்கடங்காத அளவில் மாணவர்கள் உணர்ச்சி அலைகள் எழுந்ததை கண்டு காவல்துறை கொஞ்சம் ஆடித்தான் போனாது. பொதுமக்கள் பெருமளவில் சாலைகளில் நின்று வேடிக்கை பார்ப்பது தமிழனின் பிறவி குணம் என்பது போல வேடிக்கை பார்த்ததும் பதிலுக்கு தோழர்களின் 'வேடிக்கை பார்க்கும் தமிழினமே! வீதியில் வந்து போராடு' என்று கோசங்கள் ஒலிப்பதும் நடந்தது.முதன்முதலில் தமிழவீதிஎங்கும் ஒலிக்கும் வீரவணக்கம் முழக்கங்கள் தமிழ்நாட்டிற்கு புதிதுதான். ஈழத்தில் எரியும் நெருப்பு ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களிலும் எரிய துவங்கி இருக்கிறது என்பது தோழர்களின் முழக்கங்கள் மூலம் உணரமுடிகிறது. போராளிகளை வெளிப்படையாக ஆதரித்தும் புலிக்கொடிகள் ஏந்தியும் தோழர்கள் ஆர்பரித்த காட்சி புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

முத்துகுமரன் தன்னுடலை எரித்து ஈழத்தில் சர்வதேச வெளிச்சம் படுவதற்கு பாடு பட்டிருக்கின்றான் தமிழன தலைவன் என்று அடையாளம் காட்டப்படும் தலைமை எப்பாடு பட்டாவது இந்த நெருப்பை இருட்டடிப்பு செய்துவிடலாம் என்று துடிக்கிறது.

இவர்கள் தொலைக்காட்சிகள் செய்தித்தாள்களில் செய்திகள் இருட்டடிப்புகள் செய்தால் நம் தோழனின் கனவுகள் முடங்கிவிடுமா என்ன? கல்லூரியை பூட்டிவைத்தால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாது என்று தமிழக ஆளும் வர்க்கம் முடிவு எடுத்திருக்கிறது. எங்கள் சகோதரன் இங்கே விளைத்துவிட்டு போன கேள்விகள் முடங்கிபோகாது தோழர்களே! நீங்கள் எவ்வளவு அடக்கினானாலும் இருட்டடிப்பு செய்தாலும் மீண்டும் மீண்டும் வீரத்தமிழன் சொல்லுவான்

'வீரவணக்கம் வீரவணக்கம்'
'முத்துகுமாருக்கு வீரவணக்கம்'

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails