ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்? – இயக்குநர் சீமான்

ஈழ மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட் களோடு வந்த ‘வணங்கா மண்’ கப்பல் யாருடைய உதவியும் இல்லாததால் எப்படி நடுக்கடலில் தத்தளித்து நின்றதோ… அதேபோல் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக 255 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த ‘ஓஷியானிக் வைக்கிங்’ என்கிற கப்பலும் பரிதாபத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இலங்கையில் சிங்கள அரசின் பாதுகாப்பு முகாம்களுக்குள் சிக்கித் தவித்த தமிழர்கள் எப்படியோ தப்பி, ‘ஓஷியானிக் வைக்கிங்’ என்கிற இந்த சிறியரக கப்பலில் ஆஸ்திரேலியாவுக்கு பயணப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்தோனேஷிய கப்பல் படையால் வளைக்கப்பட்ட அந்தக் கப்பல், ஜாவா தீவுக்கு அருகே நிறுத்தப்பட்டது. அடுத்த கணமே ‘அகதிகள் உருவில் விடுதலைப் புலிகள் தப்பப் பார்ப்பதாக’ செய்திகள் பரவ… ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் நடுக் கடலில் தடுமாறிக் கிடக்கும் அந்த அப்பாவி ஜீவன்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.

”அப்பாவிப் பெண்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளுமாகத் தத்தளிக்கும் எங்களை ஆஸ்திரேலிய அரசு கருணையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என

கப்பலில் இருந்தபடியே தமிழர்கள் கதற, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித் கொஞ்சமும் மனசாட்சியின்றி பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுத்துவிட்டார். இதற்கிடையில் தத்தளிக்கும் தமிழர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி சிங்கள அரசு வற்புறுத்த, ‘அங்கே போனால், நாங்கள் பிணமாவது உறுதி!’ எனச் சொல்லி அலறியழுகிறார்கள் நடுக்கடல் தமிழர்கள்.

கப்பலில் இருந்தபடியே ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரான சீமானை தொடர்புகொண்டு பேசிய அந்தத் தமிழர்கள், ”எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். இலங்கை அரசின் சித்ரவதைகள் பொறுக்காமல் ஓடிவந்த எங்களை அங்கேயே திருப்பி அனுப்புவது எவ்விதத்தில் நியாயம்?” என ஓலமிட்டிருக்கிறார்கள்.

நாம் சீமானிடம் பேசினோம். ”நடுக்கடலில் நின்றபடி ஈழத்தமிழர்கள் கதறிய ஓலத்தைக் கேட்டு நொறுங்கிப் போய்விட்டேன். தமிழன் என்றாலே அவனுக்கு இப்படியரு ஈனத் தலையெழுத்தா? இலங்கைக்கு ஆயுதத்தை அள்ளியள்ளி வழங்கிய உலக நாடுகள், நடுக்கடலில் அப்பாவித் தமிழர்களை காயப்போட்டு வேடிக்கை பார்க்கும் வேதனையை எங்கே போய்ச் சொல்வது? சாப்பாட்டுக்கும், தண்ணிக்கும் வழியில்லாமல் அரைகுறை உயிரோடு அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைகொடுக்கக்கூட இந்த உலகம் முன்வரவில்லையே… ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தத்தளிக்கும் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், இந்திய அரசும் அதனை கண்டுகொள்ளாமல் கைகட்டி நிற்கிறது.


தமிழர்களோடு புலிகள் கலந்திருப்பதாக மனசாட்சி இல்லாமல் பொய்களை அவிழ்த்து விடும் சிங்கள அரசு, இந்தோனேஷிய அரசின் உதவியோடு கப்பலில் இருக்கும் தமிழர்களை கைது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் நின்று கதறியபடி என்னிடம் பேசிய தமிழர்கள், ‘இலங்கை அரசிடம் எங்களை ஒப்படைக்கத் துணிந்தால் நடுக்கடலிலேயே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்கிறார்கள். மனிதநேயம் குறித்து வாய்கிழியப் பேசும் உலகநாடுகளுக்கு தமிழனின் ஒப்பாரி மட்டும் கேட்கவில்லையா? உலகில் எந்த இனத்துக்காவது இத்தனை துயரங்கள் ஏவப்பட்டிருக்கிறதா? ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்?” என உடைந்த குரலில் சொன்னார் சீமான்.


உப்புத் தண்ணீர், உக்கிர வெயிலோடு உலகநாடுகளும் சேர்ந்து மனிதக் கருவாடு தயாரிப்பதற்காக தமிழனை நடுக்கடலில் மிதக்க விட்டிருக்கிற கொடுமையை என்னவென்று சொல்வது?!
நன்றி: ஜீனியர் விகடன்

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails