எம் இனமே..எம் சனமே.....இனி என் செய்வாய்?


உலகில் இன்றைய நாளில் மூன்று இடங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு நின்றிருக்கும் ஈழத்தமிழர்களை யாரும் தமது நாடுகளில் சேர்த்துக்கொள்ளத் தயாராய் இல்லை.!

முதலில் இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஏதிலிகளின் படகு ஒன்று இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.........எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் ஒரு சிறு பெண். இந்தோனேசியாவின் அரசாங்கமும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.

மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது.


அவர்கள் மனிதர்கள்...இரத்தமும் , சதையுமாக வாழும் மனிதர்கள்...நேற்றுவரை சொந்த இடத்தில் சுகமாய் வாழ்ந்த மனிதர்கள்.....குப்பைகளல்லர்...நினைக்கையிலேயே நெஞ்சு கொதிக்கிறது.

அந்தப் படகில் இருக்கும் 266 பேரும் நானும் ஒரே இனம்...ஒரே மொழி பேசுபவர்கள்.

அடுத்து கனடாவில் ஓஷன் லேடி கப்பலின் மூலமாக கனடா வின் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட ஏதிலிகள்.....

கைகளை , கால்களை சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்களாம் அங்கே..........இன்னமும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களில்லை........நாடின்றி , சிறைச்சாலையில் வாடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்...அவர்களும் நாமும் ஒரினம்..!

பிரிதொன்று.....

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்த 78 தமிழர்களின் அரசியல் தஞ்சத்தை நிராகரிக்கப் போவதாகவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போவதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ருட் அறிவித்திருக்கிறார். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

உலகில் எங்கேயுமே ஈழத்தமிழர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள்...அவர்கள் கேட்கும் அரசியல் தஞ்சம் கூட அனுமதிக்கப்படாமல் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்....!

அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

நாங்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று கேட்டது மட்டும் தானே?

எங்களின் பூமியை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்றது மட்டுந்தானே?

அதற்காகவா இந்த உலகம் இப்படி அவர்களைத் தண்டித்தது?

காடுகளில் , மழைகளில் கால்கடக்க நடந்து , செடிப்புதர்களின் நடுவில் ஒளிந்து , தாலியை , சொந்தமான பூமியை விற்று அதைக் காசாக்கி படகுக் காரர்களிடம் கொடுத்து வேறொரு ஊருக்கு அரசியல் தஞ்சம் கோருவது எதனால்?

இலங்கை இராணுவம் கண்டால் தம் கதி அதோ கதிதான் என்று தெரிந்தும் ப்டகுகளில் அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்வது எதனால்?

சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கவா? கேளிக்கைகளில் வாழ்க்கையைக் கழிக்கவா? இல்லையே....சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை...தாங்கள் காக்கை குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற எண்ணத்தில் தானே? உயிர்ப்பயத்தில் தானே ?

இனிமேல் தன் சொந்த நாட்டில் தன்னால் வாழவியலாது என்ற காரணம் தானே?


அடேய் , என் இனத்தையாடா குப்பையென்றாய்? என் சனங்களையாடா ஆடுமாடுகளைப் போல் திரும்பிப் போ என்றாய்......? என் சனமே , வா வந்து என் பூமியில் வாழு என்று திமிர்க்குரலில் சொல்ல தமிழகத்தானுக்குத் தான் தைரியம் உண்டா ? தமிழகத்தை ஆள்பவனுக்குத் தான் திராணி உண்டா? அக்கறை உண்டா?

அதுசரி , தமிழகத்தான் எங்கே தன் பூமியை ஆள்கிறான்? சுதந்திரம் பெற்றது முதலாய் செங்கோட்டையின் அடிமைதானே அவன்? ஒரு அடிமை எப்படி அகதிகளை ஆதரிக்க இயலும்...? ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே...அடிமைகளல்லர்..!

பரணி , புறநானூறு இவையெல்லாம் போற்றி வளர்த்தோம்.......
அதனால் புண்ணியம் என்ன கண்டோம்?
இன்றோ போக்கிடம் இன்றித் திரிகிறோம்...யார்க்கும்
இனி நாங்கள் வேண்டாதவர்களாகிப் போனோம்.........! சீக்கிரம்
இன்னொரு சுனாமி வந்து சூறையாடிப் போகட்டும்...
இருக்கும் இன அடையாளங்கள் இல்லாது போகட்டும்...!


என் இனமே...என் சனமே.
என்ன செய்து இனி
எம் உடமை காப்பாய்?

என் இனமே..என் சனமே.
என்ன செய்து இனி
எம் பெருமை சேர்ப்பாய்?

என் இனமே..என் சனமே..
என்ன செய்து இனி
எம் நிலத்தை மீட்பாய்?

என் இனமே...என் சனமே..
என்ன செய்து இனி
எம் மக்களைக் காப்பாய்?
வேதனைத் தீயினை அணைப்பாய்?

Posted in Labels: |

2 comments:

  1. மதிபாலா Says:

    நீங்கள் எமது கட்டுரையொண்றை வெளியிடுவதில் எமக்கு எந்த வருத்தமும் இல்லை. தேவையான கருத்துக்கள் நிறைய பேருக்கு செல்வதில் மகிழ்ச்சியே..

    ஆனால் ஒரு இணைப்பை அல்லது எமது பெயரை பயன்படுத்தினால் நல்லது ... நன்றி

  2. Mike Says:

    மன்னிக்கவும், கண்டிப்பாக தெரிந்தால் வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை. இது இ.மெயிலாக வந்த ஒன்று அதனால் அதன் முகவரி அறியமுடியவில்லை, மன்னிக்கவும்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails