மாற்றமடைந்துள்ள இந்தியாவின் 'தொனி'?
Posted On Sunday, 15 February 2009 at at 10:05 by Mikeஇலங்கையில் தினமும் நடக்கும் தமிழினப் படுகொலை குறித்து ஒலிக்கும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கும் திறக்கப்படாத "இந்தியக் கதவுகள்' மீது முழு நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நாடுவதில் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் மட்டுமன்றி தமிழக அரசும் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இரண்டு மாதங்களில் வரவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிக் கூட்டத் தொடர் முடிய இன்னும் ஏழு நாட்களே இருக்கும் பட்சத்தில் இலங்கை மீதான இந்திய அரசின் அழுத்தம் இனிமேல் கடுகளவும் ஏற்பட வாப்பில்லை என்றும் ஈழத்தமிழர் உயிர்ப் பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தனப் போக்கு குறித்து தமிழுணர்வாளர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தங்களின் மனச்சாட்சிக்கு கட்டுப்படுவார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யுத்தநிறுத்தம் பற்றி இலங்கையை கடைசிவரை வலியுறுத்தாத மத்திய அரசு, கடந்தவாரம் நடைபெற்ற பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் இடம்பெற்ற குடியரசுத் தலைவர் உரையிலும் போரை நிறுத்து என்று கண்டனத் தொனியில் வற்புறுத்துவதற்குப் பதிலாக, போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற வாசகமே இடம் பெற்றிருந்தது அரசியல் அவதானிகளிடையே சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. இந்தியா முதல் தடவையாக இப்படி அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள், அனைத்துத் தரப்புத் தமிழர்களின் எழுச்சி ஆகியவையே இதற்குக் காரணம் என்றும் கருதும் அரசியல் விமர்சகர்கள், டில்லியிலும் தமிழ் நாட்டிலும் ஆட்சிக்கு எதிராக வலுப்பெற்றுவரும் வெறுப்பை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு அமைந்துவிடாமல், போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, மருத்துவமனை யிலிருந்து வெளியிட்ட செதியில், குடியரசுத் தலை வரின் போர் நிறுத்த உரை ஆறுதல் தருகிறது என்று குறிப்பிட்ட பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், "போர் நிறுத்தப் பட வேண்டும்' என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்தகட்டமாக, இலங் கையில் உள்ள அனைத்து இந்திய தொழில்நுட்ப உதவியாளர்களையும் உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட அனைவரும் ஒன்றுபட்டு நடத்த வேண்டிய போராட்டத்தை முதல்வர் கலைஞர் தெரிவித்தால் அணிவகுத்து நிற்க தயாராக இருக்கின்றோம். குழாயடிக் கூச்சல்கள் எதுவும் இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க உதவாது. ஒன்றுபட்டு செயல்படுவதற்கான வழிமுறைகளை அறிவிக்க இத்தருணத்தில் கலைஞர் முன்வரவேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி எல்.கே.அத்வானி, "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உணர்வு பூர்வமாக செயல்படவில்லை. அடக்குமுறை மூலம் தீர்வு காணமுடியாது. இப்பிரச்சினையில் இந்தியா ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதிக ஈடுபாடு கொண்டு அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகளை அவதானித்துவரும் மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரை "தினக்குரல்' நேற்றுமுன்தினம் தொடர்புகொண்டபோது, குடியரசுத் தலைவரின் உரை ஒப்புக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் காலம் கடந்த, மூடிமறைக்கும் பார்வை என்று விமர்சித்தார். சிவ்சங்கர் மேனன் கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி சென்றார். போர் நிறுத்தம் பற்றி வாயே திறக்கவில்லை. கடைசிவரை பிரதமர் மன்மோகன் சிங்கும் வலியுறுத்தவில்லை. முயற்சிகள் எடுக்கவில்லை. இதற்கு மாறாக போருக்குப் பல விதத்திலும் உறுதுணையாக இந்தியா செயல்படுகிறது. போரை நிறுத்து என்று நேரடி எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்காமல் கடந்தகால நிகழ்வுகளை மூடிமறைக்கும் ஒரு நிலைப்பாடாக குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது' என்றும் அவர் கண்டித்தார்.
இலங்கை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தி இப்பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி கறுப்புச் சட்டை அணிந்த பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றம் முன்பாக நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் தொடர் போராட்டம் நடத்திவரும் சூழலில், ம.தி.மு.க. வைகோ தலைமையில் பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு "ஈழத் தமிழர் தோழமைக் குரல்' சார்பாக மறியல், உண்ணாவிரதம், பேரணி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள், படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், பெண் விடுதலை அமைப்பினர், பத்திரிகையாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என இருநூறு பேர் இன்று ரயில் மார்க்கமாக டில்லி புறப்படுகிறார்கள். டில்லியில் சுமார் ஐநூறு பேர் இப்போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
இலங்கையில் யுத்தநிறுத்தம் வேண்டும் என்று அரசியல் கட்சிகளுடன் மாணவர்களும், வழக்கறிஞர்களும் தமிழகத்தில் தனித்தனியாக போராட்டங்கள் நடத்திவரும் நிலையில் டில்லியில் பாராளுமன்ற வளாகத்திலுள்ள காந்தியடிகளின் சிலை முன்பாக தமிழக எம்.பி.க்கள் எண்மர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் மீண்டும் நீதிமன்ற புறக்கணிப் புப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக தென் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம், பேரணி, கண்டனக் கூட்டம் நடத்திவருகின்றனர். நாளுக்கு ஒரு போராட் டம் எனும் திட்டத்தின் கீழ் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை சென்னையில் நடத்திய வழக்கறிஞர்கள், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி புகைப்படம், காங்கிரஸ் கட்சிக்கொடி ஆகியவற்றை எரித்தனர். இந்திய ஆயுதப்படை அலுவலகங்களை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள், "இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை திரும்பப் பெறு' என்று குரல் எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள 117ஆவது பிரதேச இராணுவ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அறுபது மாணவர்கள் நேற்று முன்தினம் கைதுசெயப்பட்டனர். இவர்களில் ஐவர் மாணவிகள். பாண்டிச்சேரியில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஓவியம் பயிலும் மாணவர்கள் ஒன்பதுபேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரம் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். கறுப்பு அடையாளச் சின்னம் அணிந்து வகுப்புகளுக்குச் சென்றனர். நேற்று, என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களும் போராட் டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி, கரூர், திருநெல்வேலி வழக்கறிஞர்கள் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்! நாட்டுப் படகில் ஏறி கடல் மார்க்கமாக முல்லைத்தீவுக்குப் புறப்பட்ட கரூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் பதின்மூன்று பேர் நடுக்கடலில் வைத்து கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தி கைதுசெயப்பட்டுள்ளனர். படகில் சென்ற தூத்துக்குடி வக்கீல் ராமச்சந்திரன் செதியாளர்களிடம் தெரிவிக்கையில், "ஈழத்தில் தமிழினம் அழிவதை, மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்குத் தெரிவிக்கும் வகையில் உண்மை அறியும் குழுவாக முல்லைத்தீவுக்கு படகில் புறப்பட்டோம். தூத்துக்குடியிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவில் காவல் துறையினரால் நாங்கள் கைதுசெயப்பட்டோம். இப்போராட்டம் தொடரும்' என்று விளக்கினார்.
மக்கள் போராட்டமாக வெடித்திருக்கும் நிலையில் தனிமனித தியாகங்களும் தொடர்கின்றன. முத்துக்குமார் தொடக்கிவைத்த மனித தீப்பந்தம் வரிசையில் தமிழ் நாட்டில் நால்வர் தீக்குளித்து இனத்தியாகம் புரிந்துள்ளனர். உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக தனிநபர்கள் பலர், பல வடிவங்களில் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களில் குதித்து வருகின்றனர். இராமநாதபுரம் ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் (61 வயது) என்பவர் நாகபட்டினம் கடலில், இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி, சுமார் ஒருமணிநேரம் தண்ணீரில் மிதந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். செதியாளர்களிடம் அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர் படும் வேதனையை வெளிக்காட்ட இப்படியொரு போராட்ட ஆயுதத்தை கையிலெடுத்தேன் என்று தெரிவித்தார்.
இலங்கை தமிழரின் நலனுக்காக தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலைஞர் தலைமையில் அமைக்கப்பட்ட "இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை' தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஐ.நா.விடம் வலியுறுத்த தீர்மானித்துள்ளது. இலங்கையில் நடந்துவரும் தமிழினக் கொடுமையை, மனித உரிமை மீறல்களை ஐ.நா.வின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம். அதேநேரம், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களிடமும் இதுபற்றி நேரில் விளக்கி ஆதரவு பெறப்படும்' என்று இருதினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இப்பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையே, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான ஆயிரத்து அறுநூறு கிலோ மீற்றர் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நாளை மறுதினம் நடைபெறவிருக்கிறது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இதுபற்றித் தெரிவிக்கையில், மனித சங்கிலியைத் தொடர்ந்து கோவை, மதுரை, புதுச்சேரி, சேலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் கண்டனப் பேரணிகள் நடத்தப்படும் என்றும் அடுத்த கட்டமாக சென்னையிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களைச் சந்தித்து போரை நிறுத்த வலியுறுத்த உள்ளோம் என்றும் ஐ.நா.பொதுச் செயலாளருக்கு போர்நிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்தி கோடிக் கணக்கில் மின் அஞ்சல் அனுப்பப்படும்' என்று கூறினார்.
நன்றி :
http://www.thinakkural.com/
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா
இந்திய அரசை நம்பி புலிகள் படைக்கலன்களைக் கீழே போட வேண்டும் என்ற காங்கிரசின் தமிழக அறிவு ஜீவியின் கண்களுக்கு தற்போது அப்பாவி மக்களின்மீது நடக்கும் கொலைகள் தெரிய வில்லையா?
உன்னை நம்புவதும் தற்கொலை செய்து கொள்வதும் ஒன்று தானே!
பதவி போகப் போகிறது,போய் பணத்தை எண்ணுங்கள்,பிணத்தை எண்ண உங்களுக்கு மனது இல்லை.