5 லட்சம் தமிழர்களின் கதி? நன்றி நக்கீரன்
Posted On Wednesday, 7 January 2009 at at 14:10 by Mikeபுலிகளின் அரசியல் தலைநகரமான கிளிநொச்சியை கைப்பற்றிய ஆனந்தம் சிங்கள ராணுவத்திடம் ஏகத்துக்கும் எதிரொலிக்கிறது. உச்சபட்ச சந்தோஷத் தில் மிதந்த அதிபர் ராஜபக்சே, ''கிளிநொச்சியில் மக்களோ, புலிகளோ ஒருவர்கூட இல்லை. ஆள் அரவமற்று வெறிச்சோடி நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் இருக்கிறது கிளிநொச்சி. தெரு நாய்களும், மாடுகளும் மட்டுமே ஆங்காங்கே வீதிகளில் திரிந்துகொண்டிருக்கின்றன!'' என்று கிளிநொச்சிக்குள் நுழைந்த சிங்கள ராணுவ தளபதிகள் கூறியதை கேட்டு அதிர்ந்துவிட்டார்.
இந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''கிளிநொச்சியை பிடித்துவிட்ட வெற்றியை கொண்டாடுங்கள். இந்த போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துங்கள்'' என்று ராணுவத்தினருக்கு உத்திரவிட்டார். அதன்படி அஞ்சலி கூட்டங்களை நடத்தினர் ராணுவத்தினர். மேலும், சர்வதேச ஊடகவியலாளர்களை கிளிநொச்சிக்கு அனுப்பி பார்வையிடவும் செய்தார் அதிபர்.
கிளிநொச்சியை பார்த்துவிட்டு திரும்பிய ஊடகவியலாளர்கள்,''புலிகளோடு வலிமையாக சண்டையிட்டு கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதற்கான சுவடுகள் அங்கு இல்லை. கிளிநொச்சியை புலிகள் விட்டுகொடுத்து விலகிச் சென்றுள்ளனர். புலிகளின் இந்த பின்வாங்கலுக்கு ஏதோ காரணங்கள் இருக்க லாம்'' என்கின்றனர்.
புலிகளின் பின்வாங்கல் குறித்து தமிழ்த்தேசிய கூட் டமைப்பின் எம்.பி.க்களிடம் பேசியபோது,
''யுத்தத்தில் 2 போர் முறைகள் உண்டு. முதலாவது... வலிந்த தாக்குதல், இரண் டாவது... தற்காப்பு தாக்குதல். வலிந்த தாக்குதல் என்பது... தாங்களாகவே தாக்குதல் துவக்குவது. தற்காப்பு தாக்குதல் என்பது... எதிரி தாக்குதல் நடத்தும்போது அதனை எதிர்கொண்டு தாக்குவது. ராஜபக்சே ஆட்சிக்கு வந்ததை அடுத்து வலிந்த தாக்குதலை சிங்கள ராணுவமும் தற்காப்பு தாக்குதலை புலிகளும் மேற்கொண்டே வந்துள்ள னர். இதுதான் இதுவரை நடந்துள்ளது.
அதாவது புலிகள் தாங்களாகவே தாக்குதலை நடத்தவில்லை. காரணம்... யுத்தத்தை மட்டுமே நடத்து கிற இயக்கமாக, ஒரு பயங் கரவாத இயக்கமாக, தங்கள் இயக்கத்தை அவர்கள் நடத்த விரும்பவில்லை.
இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான இயக்கமாகத்தான் நடத்து கின்றனர்.
அதனால்தான் தமிழ் மக்களையும் போராளி களையும் படைபலங்களை யும் இழப்பின்றி பாதுகாக்க வேண்டிய கடமை புலி களுக்கு இருக்கிறது. யுத்தத் தை மட்டுமே பிரதானமான விடயமாக அவர்கள் எடுத்துக்கொண்டால் நிலப்பரப்புகளை தக்கவைத்து கொள்வதில் கவனம் செலுத்தமுடியும்.
ஆனால், நிலப்பரப்புகளை தக்கவைத்துகொள்வது அரசியல் உரிமைகளை பெற்றுதராது. இதனை யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடை முறையில் இருந்த காலகட்டத்திலே பிரபாகரன் நன்கு உணர்ந்த தினால்தான், மக்களின் பாது காப்பினை மையப்படுத்தியே தனது போர் யுக்தியை வகுத்துகொண்டி ருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு போரியல் யுக்தியாகத்தான் கிளிநொச்சியை விட்டுகொடுத்து பின்வாங்கும் முடிவினை அவர் எடுத்திருக்கிறார். மக்களின் பாதுகாப்பு சார்ந்த முடிவுகளையும் யுக்திகளையும் எடுக்கிறபோதுதான் அரசியல் உரிமைக்கான குரல்கள் சர்வதேச அளவில் ஒலிக்கும்.
அதனால்தான் பரந்தன், இரணைமடுவு பகுதிகளில் உக் கிரமான சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே கிளி நொச்சியிலிருந்து சுமார் 3 லட்சம் மக்களை முல்லைதீவு பகுதிக்கு இடம்பெயர சொல்லியுள்ளார். மக்கள் முழுமையாக கிளி நொச்சியிலிருந்து வெளியேறி விட்டதை உறுதிசெய்து கொண்ட பிறகே போராளிகளையும் அவ ரவர்களின் கட்டளை பீடங்களுக்கு திரும்ப உத்திரவிட்டுள்ளார். அதனால்தான் தடையின்றி கிளி நொச்சிக்குள் ராணுவம் நுழைந்ததும், அங்கு மக்களோ போராளிகளோ ஒருவர்கூட இல்லை என்கிற நிலையும் ஏற்பட்டது.'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதேசமயம், சிங்கள ராணு வத்தினரோ, ''வெளிநாட்டிலிருந்து 2 ஆயுத கப்பல்களை தருவித்து அத னை பத்திரமாக முல்லைதீவினுள் இறக்கி யிருக்கின்றார் பிரபாகரன். இந்த நவீன ஆயுத கப்பல்கள் இரண்டும் எவ்வித நெருக்கடிகளுக்கும் ஆளாகாமல் இருப்பதற்காக ராணுவத்தை திசைதிருப்பும் யுக்தியாகத்தான் கிளிநொச்சி பின்வாங்கல்'' என்கின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சியிலிருந்து வெளியேறியுள்ள 3 லட்சம் மக்கள் முல்லைத்தீவினில் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வவுனியா, மன் னார் மாவட்டங்களிலிருந்து வெளியேறிய மக்களும் முல்லைத்தீவு பகுதிகளில் தான் உள்ளனர். ஆக, தற்போது முல்லைத்தீவு பகுதியில் 5 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். தவிர பிரபாகரன், புலிகளின் தளபதிகள், புலிகளின் படைப்பிரிவினை சேர்ந்த போராளிகள் என அனைவரும் முல்லைத்தீவினுள்தான். புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முல்லைத் தீவிலிருந்தே செயல்படுத்தப் படுக்கின்றன.
முல்லைத்தீவு பகுதி என்பது கடல் சார்ந்த நிலப்பரப்பு. சுமார் 25 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. சர்வதேச கடல் பரப்புகளை ஒட்டியே முல்லைத்தீவு கடற்பரப்பும் அமைந்திருக்கிறது. 25 வருட விடுதலைப்போராட்டத்தில் கடல் எல்லையில் புலிகளை சிங்கள ராணுவம் வெற்றிகொண்டதே இல்லை. அதனால் இந்த முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகள் எப்போதும் வலிமையாகவே இருக்கின்றனர்.
இந்த சூழலில், முல்லைத்தீவையும் ஆனை யிறவையும் குறிவைத்து தங்களின் இறுதி யுத்தத்தை துவக்கிவிட்டார் ராஜபக்சே. இலங்கை ராணுவ தளபதி சரத்பொன்சேகா, ''பிரபா கரனையும் புலிகளையும் முல்லைத் தீவிற்குள் முடக்கிவிட் டோம்.
முல்லைத்தீவை கைப்பற்ற 50 ஆயிரம் ராணுவத்தினர் அனுப் பப்படவிருக்கிறார்கள். ஏற்கனவே முல்லைத்தீவை சுற்றி 30 ஆயிரம் படை களை நிறுத்தியுள்ளோம். புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்தப்போவது இறுதி யுத்தம்'' என்கின் றார்.
முல்லைத்தீவை பிடிக்க ஏ-9 நெடுஞ்சாலை வழியாக முன்னேற துவங்கி யுள்ளனர் ராணுவத்தினர். முல்லைத்தீவு மீதான உக்கிர தாக்குதலை ராணுவம் துவங்குவதற்கு முன்பாக வான்வழிதாக்குதலை நடத்த ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார் ராஜபக்சே.
''வான்வழித் தாக்குதல் மூலம் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசுவதற்கு ராஜபக்சே தயாராகி வருகிறார். கண்மூடித் தனமாக வீசப்படும் குண்டுவீச்சினால் 5 லட்சம் தமிழர்களின் கதி என்னாகுமோங்கிற அச்சம் முல்லைத்தீவில் சூழ்ந்துள்ளது'' என்கின்றன தமிழீழத்திலிருந்து வரும் தகவல்கள். இதற்கிடையே, முல்லைத்தீவை நோக்கித்தான் சிங்கள ராணுவத்தின் அடுத்த இலக்கு இருக்கும் என்பதை உணர்ந்துள்ள பிரபாகரன், மக்களை பாதுகாக்க வேண்டிய யுக்திகள் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். 5 லட்சம் தமிழர்களின் உயிர் கேள்விக்குறியாகியுள்ள இந்த சூழலிலாவது யுத்தத்தை நிறுத்த சிங்கள அரசை இந்திய அரசு கேட்டுக் கொள்ளாதா? என்கிற குரல்களே இலங்கை தமிழர்களிடம் எதிரொலிக்கிறது. ஈழ தமிழர்கள் மீது ராஜபக்சேவின் மனித நேயமற்ற ராணுவத்தாக்குதல்களை காட்டி லும் மன்மோகன் காட்டும் மௌனம் கொடு மையானது என்கின்றனர் ஈழத்தமிழர்கள்.